இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது.
கடற்கரையில் இருந்து 200 மீற்றர் வரையான ஆழமான கடற்பகுதியே இந்தக் கண்டமேடைகளாக அமைகிறது. இதன் படி இலங்கையில், 2, 620,000 எக்டர் பரப்பளவுள்ள கண்டமேடைகள் காணப்படுகிறது. இதில் 1,502,240 எக்டர் பரப்பளவு வடமாகாணத்தில் இருக்கிறது.
சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி (ஒளித்தொகுப்பு) கடலிலே நடக்கிற தாவர உற்பத்தி, கண்டமேடைகளிலே அதிகம் நடக்கிறது. கடலின் அடிப்படை உற்பத்தியின் ஊற்றுவாயாகவும் இதுவே இருக்கிறது. கடலில் மிதக்கும் தாவர நுண்ணுயிர்கள் பெருகப் பெருக, இதை உண்ணும் நுண்ணுயிர் விலங்கினங்களும் பெருகுகின்றன. நுண்ணுயிர் விலங்கினத்தை நம்பி வாழும் மீனினங்களும், ஏனைய விலங்கினங்களும் இதற்கேற்ப பல்கி பெருகுகின்றன. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு அல்கா தயற்றம் போன்ற நுண்ணுயிர் தாவரங்கள் மீன்களுக்கு உணவாகி வருவதே காரணமாகும். இவ்வுணவை உண்ணும் மீன்கள் இயற்கையாகவே இறக்கும்போது, அதன் சேதன மற்றும் கனிப்பொருட்கள் மீண்டும் இத்தாவரங்களுக்கு உணவாகியும் விடுகிறது. இப்படி ஒரு உணவுச்சங்கிலிச் சுழற்சித் தொடர்தான் இயற்கை மீன்வள உற்பத்தியாகும்.
கடல் வாழ்விடங்களில் காணப்படும் தாவரங்கள் 'அல்கா' இனவகைகளைச் சேர்ந்த தாவரவகைகளாகும். இவை கடற்பாசிகளையும், பூக்கும் தாவர இனங்களைச் சேர்ந்த சாதாளை போன்ற தாவரவகைகளையும் உள்ளடக்குகின்றன. கடற்பாசிகள் சீனா, யப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து... போன்ற நாடுகளில் மனிதர் உணவுகளாகவும் பாவிக்கப்படுகிறது. எமது நாட்டில் புத்தளம், கற்பிட்டி, மன்னார் பகுதிகளில் வாழும் வறிய ஏழை மீனவர்கள் இதைக் கஞ்சி வடிவில் காச்சிக் குடிக்கின்றனர். இதனால் இதனைக் ''கஞ்சிப் பாசி'' என்றும் அழைக்கின்றனர்
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் பிறவிளைவு காரணமாக, இந்தியத் தென்மாவட்ட மீனவர்களுக்கு மாற்றுத் தொழிலாகத் தமிழக அரசு கூறும் பன்னாட்டு நிறுவனமான 'பெப்சி'யின் கடற்பாசி வளர்க்கும் திட்டம் பேசப்படுகிறது. வியாபார ரீதியில் பதார்த்தங்களைத் தயாரிக்க உதவும் இவை, உலகமயமாதல் சந்கைக்கான பல மறைமுக வியாபாரத் தேவைகளையும் கொண்டும் இருக்கிறது.
கடற்பாசியில் இருந்து பெறப்படும், 'ஏகார்' மற்றும் 'அல்ஜினிக்' அமிலம் எனப்படும் இவ்விருவகை காபோவைதிரேற் பதார்த்தங்கள் பெறப்படுகிறது. இவ்விருவகையான பதார்த்தங்களும் கடற்பாசியைத் தவிர, இதுவரை வேறு எந்தத் தாவரங்களிலிருந்தும் பெறமுடியாதுள்ளது. 'ஏகார்' எனப்படுகின்ற பதார்த்தம் சென்நிறக் கடற் பாசியிலும், 'அல்ஜினிக்' அமிலம் கபில நிறப் பாசியிலும் இருந்து பெறப்படுகிறது. 'ஏகா'ருக்கான ''கஞ்சிப் பாசி'' என்றழைக்கப்படும் செந்நிறக் கடற்பாசி, கொட்டியாற்றுக் குடாவிலும், மூதூரிலும் ஏராளமாக மலிந்து கிடக்கிறது. இங்கு இவை வைகாசி முதல் ஐப்பசி வரையும் தாராளமாக வளர்ந்து வருகிறது. இதில் முதல்தரமான கஞ்சிப்பாசி புத்தளம், கல்பிட்டி, மன்னார், மண்டைதீவு போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. புத்தளத்தில் இது தைமாதம் முதல் வைகாசி வரையும் பெறவும் முடிகிறது. மொத்தத்தில் தைமாதம் முதல் ஐப்பசி வரையான 10 மாதங்கள் இதைக் கொடுக்கும் செல்வக் கடலாகவும் இக்கடல்வளம் இருக்கிறது.
உயர்ந்த வெப்பநிலையில் திரவமாகவும், தாழ்ந்த வெப்பநிலையில் திண்மமாகவும் இருக்கக்கூடிய ஒரு பதார்த்தமாக 'ஏகார்' இருக்கிறது. இவை ஐஸ்கிரீம், மிட்டாய், ஜாம், புடிங், ஜெலி, யோக்கெற்,.... போன்ற பெரும் தயாரிப்புக்களில் தடிப்பாக்கியாகப் பயன்படுகிறது. இதைவிட மதுபான உற்பத்தியில் தெளிவாக்கியாகவும், கடதாசி உற்பத்தியில் பளபளப்பாக்கியாகவும் திரவநிலையிலும் பயன்பாடாகிறது. மருத்துவத்துறையில், வயிற்றை இளக்கிவிடும் மருந்துப் பதார்த்தமாகவும், பல் கட்டுதலுக்கான அச்சுச்செய்கையின் கலவையாகவும், நாம் உண்ணும் மாத்திரைகளில் மேலுறைகளாகவும் (கவசமாகவும்) இதுவே பயன்படுகிறது.
'அல்ஜினிக்' அமிலப் பதார்த்தத்தைக் கொண்ட கபிலநிறப் பாசிகள், அதிகளவில் பரம்பலடைந்து படர்கின்ற ஒரு பாசியினமாகும். இது புடவைக் கைத்தறி குடிசைச் தொழிலில் பருத்தித் துணி அச்சிடுவதற்கும், செயற்கை நார் தயாரிப்பில் தடிப்பாக்கியாகவும், 'வானீஸ்' பூச்சுக்கள், மற்றும் ஒட்டும் - மினுக்கும் பதார்த்தமாவும் பாவிக்கப்பட்டும் வருகிறது. இந்த வியாபார உத்திகளின் பெரும் இலாபத்தை இலக்குவைத்தே இப் பன்நாட்டு நிறுவனங்களான ('பெப்சி')யும் தனது முதலீட்டுச் செல்வாக்கில், இதைத் தொண்டாக்கி இயங்கி வருகிறது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் கொள்ளை இலாபமடிக்க இது நினைக்கின்றதே ஒழிய, மக்களின் வறுமையைச் சீராகப் போக்கவோ மக்களுக்கு புரத உணவை பெற்றுக் கொடுக்கிற நல்ல எண்ணங்களிலோ இவர்களுக்கு நாட்டம் கிடையாது. இப்பொழுது கடற்பாசியில் இருந்து 'பயோ' எரிபொருளை உருவாக்கலாம் என்றதை கண்டறிந்தபோதும் இவ்வுண்மையை மக்களுக்குச் சொல்லுவதும் கிடையாது. 50 ஆம் ஆண்டிலிருந்து 60 மடங்கு பாசியுற்பத்தியை இத்தொண்டு நிறுவனங்களை வைத்தும் இவர்கள் சாதித்தும் உள்ளனர். கடற்பாசி உற்பத்தியானது ஆசிய, பசுபிக் கடல்களில் இருந்து 91 சதவீதம் கிடைக்கிறது. இது ஆண்டொன்றுக்கு 8 கோடி தொன்னாகவும் இருக்கிறது என்றால் இவர்களேன் இதற்குள் மூக்கை நுழைக்கிறார்கள் என்பதும் சுலபமாக விளங்கிவிடும்.
இலங்கை நாட்டின் கடல் மீன்பிடியில், 80 -90 வீதமானவை கரையோர மீன்பிடிகளாவே இருக்கிறது. கடற்கரையில் இருந்த 8 -தொடக்கம் 10 கில்லோ மீற்றர் வரையான கண்டமேட்டுப் பகுதி மீன்பிடியாகவும் இது அமைகிறது. இம் மீன்பிடியானது கண்டமேட்டில் உள்ள மிகச் சிறிய பகுதியாகவுமே இருக்கிறது. மேற்சொன்னபடி வடமாகாண கண்டமேட்டுப் பரப்பளவு 1, 502,240 எட்டராகவும் இருக்கிறது. இதில் 8 கிலோ மீற்றருக்கு உட்பட்ட, இன்று பயன்படும் மீன்பிடிப் பிரதேசம்: 478, 920 எட்டர் மட்டுமே. அதாவது சுமார் 32 சதவீதம் மட்டுமே மீன்பிடிப் பிரதேசமாக பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் இவ்வாறான மொத்த கண்டமேட்டு மீன்பிடிப் பயன்பாடு, நாட்டில் உள்ள மொத்த அளவில் அரைப்பங்குக்கும் குறைவாகவே இருக்கிறது. இலங்கையிலுள் 2 620 000 எட்டர் மொத்தக் கண்டமேடைப் பரப்பளவில் 8 கிலோமீற்றருக்கு உட்பட்ட இன்றைய மீன்பிடிப் பயன்பாட்டுப் பிரதேசம், 1 023 500 எட்டராகவுமே இருக்கிறது.
இவைகள் நூறுசத வீதமாக சரிவரப் பயன்படுத்தப்பட்டாலே, இலங்கையின் கரையோர மீன்பிடியே நாட்டுக்குத் தன்நிறைவைத் தானாகவே கொடுக்கக் கூடியதாக அமையக் கூடியதும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.
இந்த 8 கிலோ மீற்றருக்கு உட்பட்ட மீன்பிடியில் தங்கூசிவலை (நைலோன் வலை), சுருக்கு வலை, மடிவலை என்பன இலங்கை அரசால் நீண்டகாலமாகவே தடைசெய்யப்பட்டும் விட்டது. இந்திய (தமிழக) மீனவர்களின் இழுவைப்படகுகள் (ரோலர்கள்) இக் கண்டமேடைக்குள் உள்நுழைவதால், இந்த 200 மீற்றர் ஆழ நீர்த்தடாகத்தில் ஒருவிதமான பேரிரைச்சல் ஒலியை இது எழுப்புகிறது. இதனால் மீனினங்கள் கரையில் இருந்து கலைந்தும் விடுவதுடன், பாதுகாப்புக்காக தரையோடு படுத்தும் இவர்களின் மடிவலை இழுவைக்குள் வகையாகவும் மாட்டுப்பட்டும் விடுகிறது. இவ் அசாதாரண நிலமை, மீன்களின் இனவிருத்தியைக் கொடுமையாகப் பாதிப்பதோடு கரையோர மீன்பிடித் தொழிலையும் வெகுவாக நாசப்படுத்துகிறது..
தங்கூசி வலையின் கண்கள் 'பிளேட்'டைப் போலக் கூர்மை கொண்டவை. இதில் அகப்படும் மீன்களைப் பிரித்தெடுப்பதில் மீனின் உடலைப் பாதுகாப்பதற்கான இயற்கையாக அமைந்துள்ள மீனின் இழையம் அதிக பாதிப்புக்கும் உள்ளாகுகிறது. சேதத்துக்கு உள்ளாகும் இம் மீன்களின் மேற்பரப்பு, நீருக்கு வெளியே பக்றீரியாக்களால் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியும் விடுகிறது. இதனால் அவை உடன் மீன் பாவனைச் சந்தையில் விலைபோகாத தரம்குறைந்த மீன்களாக எளிதில் மாறியும் விடுகிறது. தங்கூசிவலை ஆறேழு மாத தொடர்பாவனையின் பின்னர் பாவிக்க முடியாதும் போய்விடுகின்றன. இதன் பின்னர் இவைகள் கடலிலோ அல்லது கரையோரச் சுற்றாடலிலோ போடப்பட்டும் (கைவிடப்பட்டும்) விடுகிறது. இதனால் கடலிலுள்ள உயிரினங்களும், கடலோரப் பறவைகளும் ஊர்வனங்களும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றன. இவ்வலைகள் எளிதில் உக்கிப் போக முடியாதவை என்பதால் இதன் பாதிப்புக்கள் நீண்டகாலத் தொடர்பாதிப்புக்களாகவே அமைந்தும் விடுகின்றன. இது கடலையும் சுற்றுச்சூழலையும் வெகுவாக மாசடையப் பண்ணுகிறது.
சுருக்கு வலையில் அகப்படும் மீன்கள், சின்னதில் இருந்து பெரியதுவரை வளமாக மாட்டிக் கொள்கிறது. இவ்வகையான வலைகொண்டு பிடிப்பது உலகில் விரும்பத்தகாத ஒன்று. கடலில் மிதந்து வாழும் நுண்ணுயிர் தாவரங்கள், இவ் வலைவீச்சால் அழிந்தும் போவதால் இது கடலின் அடிப்படை உற்பத்தியை இல்லாமலே ஒழித்தும் விடுகிறது.
மடிவலைகள் இழுவைப் படகுகளால் (ரோலர்கள்) மட்டுமே பயன்படுத்தப்படும் பெரும் மீன்பிடியாகும். கடலின் அடித்தளத்தோடு வழித்து அள்ளிச் செல்கின்ற இந்த மீன்பிடி, உலகில் விரும்பத்தகாத (மட்டுப்படுத்தப்பட்ட) தடைசெய்யப்பட்ட ஒரு மீன்பிடி முறையாகும். இலங்கையில் ரோலரை அறிமுகம் செய்த நோர்வே, தனது நாட்டில் மட்டுப்படுத்திய தடையாக இதை அறிவித்துள்ளது. இரு சமாந்தர இழுவை வலுவைக்கொண்ட இரட்டை மடிவலைமுறை ரோலர்களை கொண்ட நோர்வே நாடு, மணல் அடித்தளத்தைக் கொண்ட இறால் மீன்பிடிக்கு மட்டுமே மட்டுப்படுத்தி இதை அனுமதிக்கிறது.
இந்தியாவில் (தமிழகத்தில்) இருந்து இலங்கைக்குள் அத்துமீறும் ரோலர்கள், கண்டமேட்டுக்குள் நுழைகிறது. அங்கிருந்து மீன்முட்டைகள் முதல், அனைத்து மிதக்கும் கடற்தாவரம் நுண்ணுயிர்கள் முதற் கொண்டு, பூக்கற்கள் (பவளப்பாறை) ஈறாக, கண்டமேடையின் நீர்ப்பிரதேச இனத்து இயற்கை வளங்களையும் அதன் வாழ்வாதாரம் அனைத்தையும் அழித்தும் விடுகிறது. இந்த நாசகார மூர்க்கத்தன மீன்பிடிமுறை கண்டமேடைகளில் ஒரு துளியளவேனும் அனுமதிக்க முடியாது. இந்த மீன்பிடியை கடலை நேசிக்கும் எந்தவொரு மீனவனும் சரி, சராசரி மனிதனும் சரி விரும்பவே மாட்டான்.
தென்னிந்தியக் கரைகளில் மீன்பிடி தொழிலின் நெரிசல் காரணமாகவும், ருசிமீன்கள் மற்றும் இறால், அள்ளுகொள்ளை மீன்பிடிக்காகவும் இவர்கள் இலங்கைக் கரைகளை நாடுகிறார்கள். இயற்கைக் காலநிலைகளை இதற்கு ஒப்புக்காகச் சாட்டாகச் சொன்னாலும், இவர்களின் வருகை பெரும் மீன்பிடிக்கானதே. ஐஸ்கட்டிகளைச் சுமந்தும், இலட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேல் செலவளித்தும் இங்கு வருவது தற்செயலான கரை தட்டல்கள் (அடைவுகளும்) அல்ல. சனி போய் ஞாயிறு திரும்புகிறார்கள். பின்னர் திங்கள் போய் செவ்வாய் வருகிறார்கள். மீண்டும் புதன் போய் வியாழன் வருகிறார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் விரதநாள் என்பதாலும், மாமிசச் சந்தை மிக அரிதான நாள் என்பதாலும் இவர்கள் செல்வதில்லை. ஓய்வெடுக்கிறார்கள். இலங்கையில் கூட இந்துமத மீனவர்கள் வெள்ளிக்கிழமையில் தொழிலுக்குச் செல்வதில்லை. அதேபோல கிறீஸ்தவ மீனவர்கள் ஞாயிறுக்கிழமை தொழிலுக்குச் செல்வதில்லை. பெரும் மீன்பிடி தொழில் வெள்ளிக்கிழமையில் தென் - இந்தியச் சந்தைகளில் சந்தைப்படுத்த முடியாது என்பதால் எந்த மதத்தவரானாலும், பெரும் மீன்பிடி இங்கு வெள்ளியில் நடப்பதுமில்லை.
வாரம் முழுவதையும் செலவழித்து, தொலைதூரம் சென்று, ஐந்து இலட்சங்களுக்கு மேல் செலவழித்து இலங்கைக் கரையில் மூன்று நாட்களில் அள்ளிவரும் மீன்களின் பெறுமதி எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள். இது இவர்களுக்குக் கட்டுப்படி ஆகுதென்றால், இதை எப்படி சிறு மீன்பிடி என்று சொல்லுவது? சிறு மீன்பிடி இந்தியாவில் இருந்து இலங்கைக் கரைக்கு வந்து மீன்பிடிப்பது, இன்றைய எரிபொருள் மற்றும் இதர காரணிகளின் விலைவாசியில் கட்டுப்படியற்ற ஒரு தொழில் முறையாகும். இலங்கைக் கரையிலிருந்து 8 கிலோ மீற்றருக்குள் மீன்பிடிக்கும் சாதாரண இலங்கை மீனவனுக்கே இன்றைய விலைவாசி உதைப்பைத் தாங்கித் தொழில் பார்க்க முடியவில்லை என்றால், இந்தியாவில் இருந்து வந்து எப்படி ஒரு சாதாரண மீனவன் தொழில் செய்வது?
ஒரு காலத்தில் இந்தியாவில் (20 வருடங்களுக்கு முன்) 5 கடல் மைல் தொலைவிலேயே தாராளமான மீன்கள் கிடைத்தன. இன்று ஒரு விசைப்படகுத் தொழிலாளி 1000 ரூபாவுக்கு எரிபொருளை ஊற்றி எரித்துச் சென்றாலும் மீன்கள் கிடைப்பதில்லை. 450 கி.மீ தொலைவிலுள்ள ஆந்திரா வரை ஓடினால்தான் தொழிலில் ஓரளவுக்கு இலாபத்துக்கு மீன்பிடிக்க முடிகிறது. இப்படி இன்று தொலைதூரம் ஓடுவதால் விசைப்படகுகளின் இயந்திரத் தேய்மானம் அதிகமாகிறது. இயந்திரத்தைப் பழுதுபார்ப்பதற்கு சில சமயம் 50 ஆயிரம் வரை பல்லைக் கடித்துக் கொண்டு செலவழிக்க வேண்டியும் வருகிறது. நாட்டிலுள்ள மீன்வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்ய இந்தியா 'ஓசன் சாட்' -2 என்ற செயற்கைக் கோளை ஏவியுள்ளது (செப். 23-'09). ஆனால் இந்தமக்களுக்கு அதனால் ஒரு நன்மையும் கைக்கு வரவில்லை. கரையில் இருந்து குண்டிமண்ணைத் தட்டிவிட்டு போகும்படியான துரத்தல்தான் ஆக்கிரமிப்பாக வந்து தொலைக்கிறது.
மன்னார் வளைகுடாப் பகுதி தெற்காசியாவின் முதன்மையான பல்லுயிரினங்கள் வாழும் சூழலைக் கொண்ட பகுதியாகும். 10 500 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்தில் 3600 க்கும் அதிகமான கடல் உயிரினங்கள் சீவிக்கின்றன. பிராந்திய வல்லாதிக்கத்தைக் கொண்ட இந்தியா மிக நீண்ட கால பூகோள அரசியல் முரண்பாடுகளைக் கவனத்தில் கொண்டே, கச்சதீவை இலங்கைக்குக் கைமாற்றாகக் கொடுத்தது. இருப்பினும் வளைகுடாவின் செயற்பாடுகள் தொடர்பாக அதிக கவனத்துடனும் தன் ஆளுமையுடனும் பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகிறது. '
இன்று கடற்கரை சார்ந்த மீன்பிடியானது துறைமுகம் சார்ந்த மீன்பிடியாக மாற்றப்படுகிறது. இது கரையில் வள்ளத்தைக் கட்டுவதற்கோ, கடலுக்குள் இறக்குவதற்கோ தமது அனுமதியை (லைசன்ஸ்)க் கோருகிறது. கடல் இனி மீனவருக்குச் (மீனவர்கள் என்று நான் குறிப்பிடுவது, ரோலர் சொந்தக்காரரை அல்ல) சொந்தமில்லை. அது அரசுக்குச் சொந்தமானது என்பதை முகத்தில் அறைந்தாப் போல் சொல்கிறது. ஆனால் இது பலருக்கு உறைக்கவில்லை.
பெரும் மீன்பிடி மூலதனக்காரரான ரோலர்காரருக்கு, துறைமுகம் சார்ந்து கட்டுவதே வசதியானது. (இவர்கள் நினைத்த எல்லாக் கரைகளிலும் அவர்கள் நினைக்கும் பாட்டுக்கு ஒட்டக் கரையில் கட்டவும் முடியாது -இது இயற்கை சார்ந்து-). இவர்கள் பெரும் பணக்கார பேர்போன அரசியல்வாதிகளாகவும், சினிமாக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தான் (இவர்களின் ரோலர்தான்) சிலோனில் போய் மீன்பிடிக்கிறார்கள். அதுவும் மடிவலை. உலகத்தில் தடைசெய்யப்பட மடிவலையில், அதில் இரண்டைப் பிணைத்து இரட்டை மடிவலைத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அதுவும் கண்டமேடுகளில். குடாக்களின் கரையில் இருந்து 2 கி.மீ வரையும் வந்து பிடிக்கிறார்கள். அவர்களின் ரோலர் எதுவரை வரமுடியுமோ அதுவரை வந்து பிடிக்கிறார்கள். ஈரமுள்ள எந்த மனிதனும் உலகத்தில் இந்த (மடிவலை) மீன்பிடியை விரும்பியதில்லை. இவ்வாறு கண்டமேடைகளிலும், குடாக்கடலிலும் இழுவை மடிவலையில் மீன்பிடிப்பவர்கள் இதயமே இல்லாதவர்கள்.
எப்பொழுது சொந்த நாட்டுக்குள் மீனவர்களுக்கு, 'லைசன்ஸ்'சும் ஒடுக்குமுறைச் சட்டங்களும் வருகிறதோ, அப்போதே கடல் அவர்களுக்குகச் சொந்தமற்றதாகி விடுகிறது. எப்பொழுது இவ்வாறு கடல் அரசுக்குச் சொந்தமாகிறதோ, அப்போது அரசுகளுக்கு இடையிலான நாட்டு எல்லைச் சட்டம் (இல - இந் எல்லைகடத்தல் பிரச்சனை), மற்றும் உள்நாட்டு மாநில கடல் எல்லைப் பிரச்சனைகளும் தலைதூக்குகிறது. இதனால்தான் உள்நாட்டில் மாநில கடல்சட்டங்களும், இந்திய மத்திய அரசுச் சட்டங்களும் வேறு வேறாகவும் இருக்கிறது. இருப்பில் இலங்கை இந்திய மீனவர்கள் எல்லை கடப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடப்பவர்கள் கடலில் மீன்பிடிக்கும் உரிமையை இழப்பர் எனவும் இருநாட்டுச் சட்டங்களும் கூறுகிறது. ஆனால் ஒரு நாட்டில் - இந்தியாவில் - மட்டும் ஒரு விசித்திர வழக்கு வந்துள்ளது. இதை 'சாலமன்' அரண்மனையில் அன்று வந்த வழக்குப்போல நினைத்துக் (இரண்டு தாய்கள் ஒரு பிள்ளையை தனது பிள்ளை என்று கோருவது) குழம்பவேண்டாம். இது தெளிவானது.
இலங்கையில் தொடர்ந்தும் இந்திய ரோலர் மடிவலை (இரட்டை) மீன்பிடி அதிகாரத்தைக் கோரியும், உள்நாட்டு கடல் மேலாண்மைச் சட்டத்தை எதிக்காமலும் வழக்குகள் நீதிமன்றம் ஏறுகின்றன. உள்நாட்டு மீனவர்களை ஒடுக்கும் 12 மைல் கடல் மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்தும் மற்றும் கரையோர மீனவ மக்களின் எந்தக் கஸ்டமும் நாளாந்த வன்முறையும் நீதிமன்றத்தில் வழக்காக ஏறவில்லை. இந்தியக் கரையோரத் 'தாதா'ச் சண்டித்தனங்கள் கூட வழக்கிலும் இல்லை. நிலுவையிலும் இல்லை. 'தாதா' கலாச்சாரம் எப்படி இந்தியக் கரைகளில் முளைத்தது? இலங்கை இனவாத அரசு சுடுகிறது என்பதாலா?? எந்த மீனவ மனிதஉரிமை ஆர்வலரும் மீனவர்களின் நீதியை (அரச-நீதி) கோரவில்லை. இப்படியான வழக்கு எதுவும் நிலுவையிலும் இல்லை!. ஆனால், இன்றைய செய்திகள் இப்படி அமைகிறது...
''எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள. தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்''
(நன்றி: 'இனியொரு' - ஆதாரம்: http://inioru.com/?p=20015)
இதில் ''பேசு பொருள்'' இதுதான்!. ''எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத (வெளிநாட்டு வல்லரசு விஸ்தரிப்பு விடயத்தில் மட்டும்).அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள். தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே''. !
வளரும்
பங்குனி '2011