"பொறிமகன்" என்றும் "ராம்" என்றும் தேசம்நெற்றில் புனைகதைகளை எழுதி "புகழ்" பெற்ற ரகுமான்ஜான் தனது "அயோக்கியத்தனங்களும்" "ரௌடியிசமும்" "போக்கிரித்தனங்களும்" (இவை அனைத்தும் ரகுமான்ஜான் தேசம்நெற்றில் பயன்படுத்திய அதே சொற்கள்தான்) அனைவருக்கும் தெரியவந்ததுடன் தனது சொந்தப் பெயரிலேயே வந்து மீண்டும் அதே கைங்கரியத்தை செய்துள்ளார். எது எப்படி இருப்பினும் ரகுமான்ஜான் சொந்தமுகத்துடன் இந்த தடவை வந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம்.

ஆனால் பொறுப்புடனும் ஆரோக்கியமாகவும் விடயங்களை முன் வைத்திருக்க வேண்டும். அதை ரகுமான்ஜான் செய்யத் தவறியுள்ளார். மீண்டும் புதிய மொந்தையில் பழைய கள்ளுத்தான்!

இணையத்தள ஜனநாயகமும் அயோக்கியத்தனங்களும் என்ற இந்தக் கட்டுரையை (இதை கட்டுரை என்று குறிப்பிடலாமெனில்) வரைந்ததன் மூலம் இரண்டு பணிகளை ரகுமான்ஜான் செய்து முடித்துள்ளார்.

முதலாவதாக "மத்திய கிழக்கில் .....மிகவும் உற்சாகமூட்டதக்கதாகும்" என தொடங்கிய ரகுமான்ஜான் தன்னை பற்றிய நியாயப்படுத்தல்கள் ஊடாக தனது "அயோக்கியத்தனங்கள்" பற்றிய ஒரு சுய விமர்சனத்தை தந்துள்ளார்.

இரண்டாவதாக கண்ணாடிச் சந்திரன், நேசன், இரயாகரன் ஆகியோருக்கெதிராக ரகுமான்ஜான் "வியூகம்" அமைத்துள்ளார். இதைத்தான் இன்றைய சமுதாயத்தின் கவலைக்குரிய விவகாரமாகவும் ரகுமான்ஜான் கருதுகிறார்.

ரகுமான்ஜான் தனது கட்டுரையில் அடிக்கடி " சொந்தப் பாதுகாப்பு கருதி" "பாதுகாப்புப்பற்றி" என தொடர்ச்சியாக பேசி வருகிறார். ஆனாலும் ரகுமான்ஜானுக்கு இருக்கும் "பாதுகாப்பு" பிரச்சனை ரகுமான்ஜானுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

 

 

 

ரகுமான் ஜான் புளட்டில் இருக்கும் போது தனக்கு பாதுகாப்பு பிரச்சனை என்று காலில் மண்படாமல் திரிந்தார். பின் இந்தியா, மத்திய கிழக்கு என வெளிநாடுகளில் இருந்தார். பின்னர் புளட்டில் இருந்து வெளியேறி பாதுகாப்பு பிரச்சனை என்று முழுமையாக அறைக்குள் ஒளிந்து கொண்டிருந்தார். என்.எல்.எப்.ரீ எமக்கு பாதுகாப்புக்காக தோழமையுடன் தந்துதவிய கைத்துப்பாக்கியும் கைக்குண்டுகளும் போதாது என்று ரெலோ இயக்க தலைவர் சிறிசபாரட்னத்துடன் நானும் ரகுமான்ஜானும் சென்று பேசியதன் பலனாக எமது இரண்டாவது சந்திப்பின் போது இயந்திர துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டுகளும் சிறிசபாரட்னம் தந்தார். அவற்றை உடனே ரகுமான்ஜான் தனது பாதுகாப்புக்கென தன்னுடன் தான் ஒளித்திருந்த அறையில் வைத்துக்கொண்டார்.

ஆனால் அப்போது கேசவன் கண்ணாடிச் சந்திரன் உட்பட எம் அனைவருக்கும் ரகுமான்ஜானுக்கிருந்த அதே பாதுகாப்புப் பிரச்சனை இருந்தது. ரகுமான்ஜானை தவிர நாங்கள் எல்லோருமே அதே பாதுகாப்பு பிரச்சனைகளுடன் தான் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற இடங்களுக்கு எமது தீப்பொறி பத்திரிகை, "புதியதோர் உலகம்" நாவல் போன்றவற்றை எடுத்து சென்று விநியோகித்தோம். எம்மிடம் அன்று எமது பாதுகாப்புக்காக இருந்தது வெறும் கைக்குண்டுகள் மட்டுமேதான். ஆனால் அதைவிட அன்று எம்மிடம் இருந்தது ஆயிரம் துப்பாக்கிகளுக்கு சமமான மன உறுதி, இலட்சிய உறுதி. இந்த உறுதியைக் கொண்டுதான் புளட்டில் அன்றிருந்த அராஜகவாதிகளை (புளட்டில் இருந்த அராஜவாதிகளை மட்டும்தான்) "புரட்சிகர வன்முறை" கொண்டு முகம் கொடுத்தோம். வெற்றி கண்டோம்.

மூச்சுக்கு மூச்சு தனது பாதுகாப்பு, தனது பாதுகாப்பு என்று சொல்லிகொள்ளும் ரகுமான்ஜான் எதற்காக விடுதலைப் போராட்டத்திற்கு வந்தார்?

பஞ்சுமெத்தையில் படுத்திருந்து தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித்தரவா? அல்லது யாராவது விடுதலையை வென்றுதர ரகுமான் ஜான் அரியணை ஏற காத்திருந்தாரா?

யாழ்ப்பாணத்தில் இருந்த ரகுமான்ஜான் புலிகளின் கெடுபிடிகளால் கொழும்புக்கு வந்தார். கொழும்பிலும் அதே பாதுகாப்புப் பிரச்சனை என்று சொல்லி அறைக்குள் ரகுமான் ஜான் ஒளித்திருந்தார். தீப்பொறி தமிழீழ கட்சியாகி கனடாவுக்கு அமைப்புக் கட்ட ரகுமான் ஜான் வந்தார். கனடாவிலும் தனக்கு பாதுகாப்பு பிரச்சனை என்றார்.  பின்னர் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக கூறி கனடாவில் அகதி அந்தஸ்து கோரினார். அதன் பின்னராவது இவரது "பாதுகாப்பு" பிரச்சனை அகன்று விட்டதா என்றால் அதுதான் இல்லை. டொரோண்டோவை விட்டு தூரப் போவதாக கூறி பல கிலோமீட்டர் தள்ளி வாழ்ந்து வருகிறார்.

நீண்ட நெடும் தூக்கத்துக்கு பிறகு முள்ளிவாய்க்காலில் புலித்தலைமை அழிக்கப்பட்ட பின்பு விழித்தெழுந்து "முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல தொடக்கம்" என குகைக்குள் இருந்து வெளிவந்து ரகுமான் ஜான் கர்ச்சித்தார். ஐரோப்பாவுக்கு சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார். மேடைகளில் ஏற முயன்றார். ரகுமான்ஜானின் படங்களுடன் கூடிய "வீர முழக்கங்கள்" இணையத்தளங்களில் வெளிவந்தன. இப்போதென்னவென்றால்

மீண்டும் பாதுகாப்பு பிரச்சனை என்று ஒரு பிரச்னையை ரகுமான்ஜான் தூக்கிப்போடுகிறார். ஏன்? இதுதான் ரகுமான்ஜானின் அரசியல் (அப்படி ஒன்று இருந்தால்) வங்குரோத்துத்தனம். ரகுமான்ஜான் தன் மீது விமர்சனங்கள் வந்தவுடன் அதை முகம் கொடுக்க திராணியற்று "தனது பாதுகாப்பு" என்ற கவசத்துக்குள் நுழைந்து கொள்கிறார். ரகுமான்ஜானுக்கு கனடாவில் பாதுகாப்பு பிரச்சனை என்றால் இதை யார் தான் நம்புவார்கள்? இன்று புலிகளும் இல்லை; அவர்களுடைய அடாவடித்தனங்களும் கனடாவில் இல்லை. அப்படியானால் ரகுமான்ஜானுக்கு பாதுகாப்பு பிரச்சனை எங்கிருந்து வருகிறது?

"நாம் முதலில் எமது தேசம் இன்றுள்ள நிலைமையை மனதில் இருத்திக் கொள்வோம். ஈழத்தமிழர் ஒரு யுத்தத்தில் முற்றாக தோற்கடிக்கப்பட்டு உள்ளார்கள். யுத்தத்தால் ஏற்பட்ட தோல்வியை விட, ஈழத் தமிழர் தமது அரசியல் தலைமையை முற்றாக இழந்து அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டு இருப்பது தான் மிகவும் பெரிய பாதிப்பை தருவதாக இருக்கிறது" என்று ரகுமான்ஜான் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

முதலாவதாக "ஈழத்தமிழர் ஒரு யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு உள்ளார்கள்" என்றும் "அவமானப்படுத்தபட்டுள்ளார்கள்" என்றும் ரகுமான்ஜான் சொல்வது முற்றிலும் தவறானது.

முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டது, அவமானப்படுத்தப்பட்டது புலிகளின் தலைமையும் அவர்களுடைய பாசிசத்தன்மை பொருந்திய கொள்கையும் தான். ரகுமான் ஜான் சொல்வது போல ஈழத் தமிழர் அல்ல.

"ஈழத் தமிழர் தமது அரசியல் தலைமையை முற்றாக இழந்து அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருப்பது" என்று ரகுமான்ஜான் சொலவது கூட ரகுமான்ஜானின் தவறான முடிவாகும். புலிகளின் அரசியல் தலைமை அழிக்கப்பட்டது, தமிழ் மக்கள் அரசியல் தலைமையை இழந்ததாக ரகுமான் ஜான் சொல்வது மாதிரி அர்த்தம் கொள்ளப்பட முடியாது. புலிகள், மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாக, மக்கள் நலன்களுக்கு எதிரானவர்களாக, உண்மையில் விடுதலைப் போராட்ட நலன்களுக்கு எதிரானவர்களாக ஆரம்பித்திலிருந்தே செயற்பட்டு வந்தார்கள். மக்களில் இருந்து அந்நியப்பட்டு வெகுதூரத்தில் நின்றார்கள். எனவே ரகுமான்ஜான் சொல்வதை போல புலிகளின் அழிவு, தமிழ் மக்கள் தமது தலைமையை முற்றாக இழந்ததாக ரகுமான் ஜான் சொல்வது போல அர்த்தமாகி விடாது. சரியோ பிழையோ தமிழ், முஸ்லீம் மக்களுக்கு என்று தலைமைகள் இருக்கினறன. அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உயிராபத்துகளுக்கு மத்தியிலும் ஏன் "பாதுகாப்புகளுக்கு" மத்தியிலும் நாட்டில் காலூன்றி நின்று தமது அரசியல் பார்வைக்கேற்ப தமது சக்திக்குட்பட்டு செயற்படுகின்றனர். இங்கு உண்மையான பிரச்சனை என்னவென்றால் ரகுமான்ஜான் சொல்வது போல "தமிழ் மக்கள் அரசியல் தலைமையை முற்றாக இழந்தது" அல்ல மாறாக தமிழ் மக்கள் சரியானதொரு மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை கிடைக்கப் பெறாதவர்களாக இன்றுவரை இருப்பதேயாகும்.

தமிழ் மக்களின் மீது இவ்வளவு கரிசனை இருப்பதாக காட்டிகொள்ளும் ரகுமான்ஜான் தனது கடந்தகால செயற்பாடுகளை திரும்பிப் பார்ப்பதில்லையா? உண்மையில் ரகுமான்ஜானுக்கு ஈழத்தமிழரில் ஆர்வம் இருந்திருந்தால் அக்கறை இருந்திருந்தால் கனடாவுக்கு வந்து அரசியல் செய்ய முடியாவிட்டால் திரும்பி போயிருக்கலாம். ஆனால் ரகுமான்ஜான் கனடாவில் அகதி அந்தஸ்து கேட்டு கனடாவில் குடியேறி கனடா பிரஜையானார். இவ்வளவு காலமும் மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காத ரகுமான்ஜான் முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் "புரட்சிகர உணர்வு" ஏற்பட்டு மக்கள் பற்றி பேசுகிறார்! புலிகள் இருக்கும்போது அவர்கள் அப்பாவி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும் முற்போக்கு சக்திகளையும் கொன்றொழிக்கும்போது, கட்டாயமாக வீடுகளில் ஆயிரக்கணக்கில் பிள்ளை பிடிக்கும்போது, லட்சக்கணக்கான மக்களை மனித கேடயமாக பயன்படுத்தும்போது இந்த ரகுமான்ஜானுக்கு இந்த மக்கள் மீது ஏன் அக்கறையே வரவில்லை?

"ஆயிரமாயிரம் பணிகள் எம்முன் குவிந்துள்ளன" , "வளங்களின் பற்றாக்குறை" என்று அன்று தீப்பொறியில் பேசிய அதே விடையங்களை தான் 25 வருடங்களுக்கு பிறகும் ரகுமான்ஜான் கூறிக் கொண்டிருக்கிறார். இன்னும் ஐம்பது வருடங்கள் சென்றாலும் இதையே ரகுமான்ஜான் கூறிக் கொண்டிருப்பார்.

இது எல்லாம் அரசியலுக்கு தகுதியில்லாதவர்கள் அரசியல் செய்ய முற்படுவதால் தோன்றும் ஒரு விடயமாகும். மேலும் "அடுத்தவரை சுரண்டி சேர்த்த" அல்லது "அரசாங்கம் வழங்கும் பணத்தை வைத்துக்கொண்டு" ரகுமான்ஜான் தன்னை பற்றிய சுயவிமர்சனத்தை வைத்திருக்கிறார். அரச குடியிருப்பில் இருந்து கொண்டு அரசாங்கம் வழங்கும் பணத்தில் அரசியல் செய்பவர்தான் இந்த ரகுமான்ஜான்.

இப்போது ரகுமான் ஜான் "வியூகம்" அமைத்திருக்கும் கண்ணாடிச் சந்திரன், நேசன், இரயாகரன் பற்றிய பிரச்சனைக்கு வருவோம்

கண்ணாடி சந்திரனுக்கும் ரகுமான்ஜானுக்கும் உள்ள தனிப்பட்ட அல்லது அரசியல் பிரச்சனைகளை (அப்படி ஒன்றிருந்தால்)அவர்களே தீர்த்து கொள்வதுதான் சரியானது. நான் புளட்டில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் அது தொடர்பாக ரகுமான்ஜானால் கண்ணாடி சந்திரன் மேல் வைக்கப்படும் குற்றசாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இருப்பினும் தற்போது எனது பதில் சுருக்கமாக இருக்கும்.

காரணம் புளட், தீப்பொறியில் எனது அனுபவங்களை ஒரு தொகுப்பாக விரைவில் வெளிக்கொணரவுள்ளேன். அந்த அனுபவத்தொகுப்பில் சகல விடயங்களும் மிக விபரமாக தெளிவாக வெளிக்கொணரப்படும்.

"கழகத்திற்கு கண்ணாடி சந்திரன் வள்ளம் வாங்கி கொடுத்தது பொய் என்று உறுதிப்படுத்துகிறேன்" என்று ரகுமான்ஜான் எழுதுகிறார். மட்டுநகர் சிறை உடைப்புக்கு பிறகு சிறைக்கைதிகளில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்துக்குள் ரகுமான்ஜானும் இந்தியா சென்று மத்திய கிழக்குக்கு பயணமாகி விடுகிறார். அதன் பின்தளத்தில் என்ன நடந்தது என்று ரகுமான்ஜானுக்கு தெரியாது.

இந்தியாவுக்கு ஆட்களை அனுப்புதல், படகுகளை ஒழுங்கு செய்தல், படகுகளை வாடகைக்கு அமர்த்துதல், படகுகள் வாங்குதல், எஞ்சின் வாங்குதல் எல்லாமே அப்போது தளத்தில் வேலை செய்த எமக்குத்தான் (பார்த்தன், யாழ் பல்கலைக்கழக சத்தியமூர்த்தி, யாழ் பல்கலைக்கழக கேதீஸ்வரன், கண்ணாடி சந்திரன், குமரன், சதீஸ், பெரிய முரளி, போத்தார், நேசன்) தெரிந்திருந்தது. நிலைமை இப்படி இருக்க ரகுமான்ஜான் எப்படி பொய் என்று உறுதிப்படுத்த முடியும்? (இது குறித்த மேலதிக தகவல்களை விபரமாக எனது புளட், தீப்பொறி அனுபவத் தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்)

"கண்ணாடி சந்திரன் தள இராணுவ செயற்பாடுகளுக்கு பொறுப்பாளராக இருந்த காலத்தில் பலர் சமூக விரோதிகள் என்ற பெயரில் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்டவர்கள் வறுமையில் வயிற்றுப்பசியின் காரணமாக திருடியவர்கள். இவர்கள் தவிர்க்க முடியாதபடி சமூகத்தில் விளிம்பு நிலையை சேர்ந்தவர்களாக தலித்துக்களாக இருந்தார்கள் என்பதும்தான் உண்மையானது" என்று ரகுமான்ஜான் எழுதுகிறார்.

கடந்தகாலத்தில் சமூகவிரோதிகள் என்று கொல்லப்பட்டவர்கள் "வறுமையில், வயிற்று பசி காரணமாக திருடியவர்கள், சமூகத்தின் விளிம்பு நிலையை சேர்ந்தவர்களாக தலித்துக்களாக " என்பது முற்றிலும் உண்மையானது மட்டுமல்ல மிகவும் கொடூரமானதும் கொடுமையானதும் தான்.

சில சமயங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அல்லது குடும்ப உறவினர்கள் சமூகவிரோதிகள் என்று சுடப்பட்டார்கள். இதை பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் செய்தன. இன்று இவற்றை திரும்பிப் பார்க்கும்போது எத்தனை மோசமான தவறுகளை நாம் இழைத்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த சமூகவிரோதிகளின் கொலைகளை ரகுமான்ஜான் ஏன் கண்ணாடி சந்திரனின் தலையில் போடுகிறார் என்பது என்னைப் பொறுத்தவரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் கண்ணாடி சந்திரன் தளப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் இத்தகைய முடிவுகள் அனைத்தும் அவை மிகவும் தவறான முடிவுகளாக இருந்தபோதும் அந்தந்த சமூகவிரோத செயல்கள் நடைபெற்ற பிரதேச குழுக்களின் முடிவாக, அல்லது அந்தந்த பிரதேசக்குழு சம்பந்தப்பட்ட முடிவாக, அந்தந்த பிரதேச குழுக்களால் நிறைவேற்றப்பட்டிருந்தது

அப்போது அந்தந்த பிரதேசக்குழுக்களில் இருந்த பலர் இன்னமும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இருக்கின்றனர். உண்மை இப்படி இருக்க ரகுமான்ஜான், கண்ணாடி சந்திரன் மேல் இந்தக் கொலைகளை செய்ததாக சொல்வது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்ட செயலாகவே எனக்குப் படுகிறது.

"சமூக விரோதிகள்" என கொலை செய்யப்பட்டது பற்றிய இன்னொரு பக்கத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1983 மார்கழி மாதத்துக்கு முன் ரகுமான்ஜான் தளத்துக்கு பொறுப்பாக இருக்கும்போது சுந்தரம் படைப் பிரிவினர் புளட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. அவர்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக மீரான் மாஸ்டர் தலைமையில் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் மீரான் மாஸ்டர், சிவா உள்ளிட்ட சுந்தரம் படைப் பிரிவினர் பங்கு கொண்டனர். இவர்களின் திட்டத்தை முன்னரேயே அறிந்த யாழ் பல்கலைக் கழக மாணவர்களான கேதீஸ்வரனும் சத்தியமூர்த்தியும் அப்போது தளப் பொறுப்பாளராக இருந்த ரகுமான்ஜானிடம் இந்த கொள்ளையை கைவிடும்படி கேட்டனர். அதற்கு அப்போது தளப்பொறுப்பாளராக இருந்த ரகுமான்ஜான் பிரச்சனைகளுககு நேரடியாக முகம் கொடுக்க பயந்து சத்தியமூர்த்தியையே மீரான் மாஸ்டரிடம் போய் கதைக்குமாறு சொல்லி மெதுவாக நழுவி விட்டார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களான சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனும் சுழிபுரம் சென்று பெரியதம்பிரான் கோவிலடியில் நின்ற சுந்தரம் படைப் பிரிவினருடன் இந்த கொள்ளையை கைவிடுமாறு கேட்டனர். சுந்தரம் படைப் பிரிவினர் கேதீஸ்வரனையும் சத்தியமூர்த்தியையும் கடுமையாக எச்சரித்து இதற்கு மேலும் தங்கள் செயற்பாடுகளில் தலையிட்டால் சத்தியமூர்த்தியினதும் கேதீஸ்வரனினதும் உடல்களின் மீது நடந்து சென்று சுந்தரம் படைப் பிரிவு செயற்படுவது தவிர்க்க முடியாதாகிவிடும் என பயமுறுத்தினர்.

இந்தத் தேவையற்ற ஒரு கொள்ளையையே அப்போது தளப் பொறுப்பாளராக இருந்த ரகுமான்ஜானால் தடுக்க முடியவில்லை.

இதன் பின் மானிப்பாய் தபால் கந்தோர், புளட் அனுமதியின்றி சுந்தரம் படைப்பிரிவினரால் கொள்ளையிடப்பட்டது. இதனையும் ரகுமான்ஜானால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சிவனடியார் மகாலிங்கம் என்பவரை சுழிபுரத்தில் வைத்து பட்டப்பகலில் அவரின் வீட்டுக்கு முன்னால் சுந்தரம் படைப் பிரிவினர் சுட்டு கொன்றனர். இவ்வளவுக்கும் அவர் செய்த குற்றம் தன்னை விட சாதியில் கூடிய சுந்தரம் படைப் பிரிவை சேர்ந்த பின்னாளில் புளட்டில் பல படுகொலைகள் செய்து பிரபலமான கந்தசாமியின் உறவுமுறையான கணவனை இழந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்ததுதான். ஆனால் இவரை சுட்டவர்கள் இவரை களவெடுத்த காரணத்தால் தான் சுட்டதாக சொன்னார்கள். இவரை சுட்டவர்களில் ஒருவர் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார். மற்றவர் இன்னமும் இருக்கிறார். இந்தக் கொலைகளை கூட அப்போது தளப் பொறுப்பாளராக இருந்த ரகுமான்ஜானால் தடுக்க முடியவில்லை.

ரகுமான்ஜான் தளப் பொறுப்பாளராக இருந்தபோது சமூக விரோதிகள் என்று நிறையப் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அந்தக் கொலைகளுக்கு புளட் உரிமை கோராமல் "சுந்தரம் படைப் பிரிவு", "காத்தான் படைப் பிரிவு", "சங்கிலியன் பஞ்சாயம்" என பல பெயர்களில் இந்தக் கொலைகளுக்கு உரிமை கோரப்பட்டன. அப்போது தளப் பொறுப்பாளராக இருந்த ரகுமான்ஜான் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போது சுடப்பட்டவர்கள் மட்டும் "சமூகத்தின் விளிம்புநிலையை சேர்ந்தவர்களாக, தலித்துக்களாக" இருக்கவில்லையா? (இந்த கொலைகள் பற்றிய முழு விடயங்களும் புளட், தீப்பொறி பற்றிய எனது அனுபவ தொகுப்பில் விபரமாக வெளிக் கொணரப்படும்).

 

நேசன் பற்றி:

"நேசனுடன் இப்படியாக ஒரு பகிரங்க அரங்கில் விவாதிக்க வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக விரும்பியதுண்டு" என ரகுமான்ஜான் கூறுகிறார்.

ரகுமான்ஜான் அவதூறுகளை அடுக்கி வைத்துவிட்டு, உண்மைக்கு புறம்பான விடயங்களை அடுக்கி வைத்து விட்டு, ஊகங்களை அடுக்கி வைத்து விட்டு, தனது கற்பனைகளை அடுக்கி வைத்து விட்டு என்னுடன் விவாதிக்க வேண்டும் என்கிறார். இவை விவாதத்துக்கு உரிய விடயங்கள் அல்ல என்ற போதும் ரகுமான்ஜானின் அவதூறுகளுக்கு பதில் சொல்கின்றேன்.

"தீப்பொறி அமைப்பினுள் நாம் இவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்தததாக ஒரு குறைபாட்டை முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்த போது கூறி வந்தவர் நேசன்" என்று ரகுமான்ஜான் எழுதுகிறார்.

இந்த ஒன்றுதான் - இந்த ஒன்று மட்டும்தான் - ரகுமான்ஜான் என்னை பற்றி எழுதியிருக்கும் உண்மை. மற்ற அனைத்தும் ரகுமான்ஜானின் கற்பனைகளில் உதித்த அவதூறுகளே.

நாம் தீப்பொறி குழுவாக செயற்படத் தொடங்கிய காலத்தில் இருந்து இரண்டே இரண்டு விடயங்களில் மட்டும்தான் செயற்குழுவில் செயற்குழுவினருடன் முரண்பட்டு விவாதிக்காமல் மௌனமாக எனது சம்மதத்தை தெரிவித்திருந்தேன்.

(1) உமாமகேஸ்வரனை கொல்வதற்கான ரகுமான்ஜானின் முன்மொழிவு. இதற்கு பொறுப்பாக கண்ணாடி சந்திரன் தலைமையில் இந்தியாவுக்கு சிலரை அனுப்புவது. இதற்கு செயற்குழுவில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த முடிவின் பின் குறுகிய காலத்துக்குள் கண்ணாடி சந்திரன் தீப்பொறியை விட்டு வெளியேறி விட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. (இது பற்றி மிகவும் விபரமாக எனது புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில் விபரமாக கூறவுள்ளேன்)

(2) கண்ணாடி சந்திரன் தீப்பொறியை விட்டு விலகிய பின், கண்ணாடி சந்திரன் தீப்பொறி இரகசியங்களை வெளியில் சொன்னால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது பற்றிய செயற்குழு கூட்டத்திலும் நான் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. (இது பற்றியும் மிகவும் விபரமாக எனது புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில் விபரமாக கூறவுள்ளேன்)

இந்த இரண்டு விடயங்களையும் தவிர, அரசியல் மற்றும் தீப்பொறியின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களிலும் குறிப்பாக ரகுமான் ஜானுடன் முரண்பாடான கருத்துகளும், பார்வைகளும் எனக்கு இருந்தன என்பதுதான் உண்மை. இதனையே "தீப்பொறி அமைப்பினுள் நாம் இவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்தததாக ஒரு குறைபாட்டை முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்த போது கூறி வந்தவர் நேசன்" என்று தனது வார்த்தைகளாலேயே ரகுமான்ஜான் தெளிவாக்கி இருக்கிறார்.

இந்த வெளிச்சத்தில் இருந்து ரகுமான்ஜான் என்மீது வைத்துள்ள அவதூறுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கேசவன் பற்றிய கேள்வி:

"கேசவனை யாழ்ப்பாணம் அனுப்புவது என்ற தீப்பொறியின் மத்திய குழு எடுத்த முடிவென்ற வகையில் அந்த குழுவில் இடம்பெற்ற அத்தனை பேருமே அந்த முடிவுக்கு கூட்டாக பொறுப்பானவர்கள்" என்று ரகுமான்ஜான் பொதுமையாக பேசுகிறாரே தவிர அந்த குழு கூட்டத்தில் என்ன நடந்தது என்று குறிப்பாக எதுவுமே சொல்லவில்லை. அவரால் அப்படி பேசவும் முடியாது. அன்றைய செயற்குழு கூட்டத்தில் கேசவன், ரகுமான்ஜான், தேவன், நான் ஆகிய நால்வர் மட்டுமே இருந்தோம். அந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுடனான தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது அவர்கள் சோர்ந்து விடுவார்கள் என்ற கருத்து ரகுமான்ஜானால் முன் வைக்கப்பட்டது. அப்போது யாரை அனுப்பலாம் என்ற கேள்வி வரவே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும், யாழ்ப்பாணத்தில் அனைத்து இடங்களையும் எங்கள் தொடர்புகளையும் நன்கு அறிந்தவருமான சுரேன் என்பவரை அனுப்பலாம் என்று நான் சொன்னேன். ஆனால் ரகுமான்ஜானோ கேசவனை அனுப்ப வேண்டும் அவர்தான் பிரச்சனையான விடயங்களை லாவகமாக கையாள்வார் என்று சொன்னார். நானோ திருகோணமலையை சேர்ந்த கேசவனுக்கு யாழ்ப்பாணம் நன்கு பரீச்சயமான இடம் அல்லாததால் பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இடங்கள் தெரியாத கேசவனால் சமாளிக்க முடியாது, சுரேனைத் தான் அனுப்ப வேண்டும் என மீண்டும் முன்மொழிந்தேன். அதற்கு தேவன் வழமை போலவே எதுவும் பேசாமல் இருந்தார். அதற்குள் கேசவன் அப்படியென்றால் நானே போகிறேன் என்று கூற தேவனும், ரகுமான் ஜானும் அதற்கு சம்மதித்தனர். எனது கருத்து ரகுமான் ஜான் கூறிய "தீப்பொறி அமைப்பினுள் நாம் இவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்தததாக ஒரு குறைபாட்டை முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்த போது கூறி வந்தவர் நேசன்" என்ற வகையில் வழமை போலவே நிராகரிக்கப்பட்டது. கேசவன் யாழ்ப்பாணம் சென்றார். புலிகளால் கைது செய்யப்பட்டார்; பின் புலிகளால் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் நடந்தது இவ்வாறிருக்க ரகுமான்ஜான் உண்மைக்கு புறம்பாக நான் இந்த முடிவுகளுக்கு இட்டு செல்ல, அதீத நெருக்குதல்களை கொடுத்ததாகவும் சர்ச்சைகளை அமைப்புக்குள் ஏற்படுத்தி கேசவனை யாழ் அனுப்பிய பிரதான பாத்திரம் என்றும் கூறுகிறார்.

அந்த குழுவில் இருந்தவன் என்ற அடிப்படையில், அந்த முடிவுக்கு பொறுப்பானவனே ஒழிய, தனிப்பட்ட முறையில் எனது கருத்து அந்த முடிவுக்கு எதிரானது.

அரசியலில் பாடம் கற்று கொள்ளாத, நடைமுறையில் பாடம் கற்று கொள்ளாத, வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளாத, யதார்த்த நிலைமைகளில் இருந்து முடிவு எடுக்க தெரியாத ரகுமான்ஜானின் சிறுபிள்ளைத்தனமான முடிவும், முன்மொழிவும் தான் கேசவன் புலிகளால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தீப்பொறி தேவன் இன்னமும் கொழும்பில் இருக்கின்றார். அவரைக் கேட்டால் கூட உண்மையில் செயற்குழு கூட்டத்தில் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.

கேசவன் புலிகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து "ஏன் கேசவனை யாழ்ப்பாணம் அனுப்பினீர்கள்? அவர் அநியாயமாக பிடிபட்டுவிட்டார்" என்று ஏக்கத்துடன் சுரேன் என்னிடம் கேட்டார். நான் "உன்னைத்தான்(சுரேனை) அனுப்பும்படி சொன்னேன். ஆனால் ரகுமான்ஜானும் தேவனும் கேசவனை அனுப்ப முடிவு செய்தார்கள்" என்று சொன்னேன். தீப்பொறி சுரேன் இன்னமும் கொழும்பில் இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை அவரிடமும் அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு சம்பவத்தையும் இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும். என்.ஜே.வி.பி. யில் இருந்த தோழர் சுனிமெல் என்ற தென்னிலங்கையை சேர்ந்த இடதுசாரி ஒருவர் புளட்டில் இணைந்திருந்தார். தோழர் சுனிமெல் புளட் உடைவின் பின் எம்மை தொடர்பு கொண்டு தென்னிலங்கையில் ஜேவிபியாலும் அரசாங்கத்தாலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், புளட்டில் இருக்க தனக்கு விருப்பமில்லையாதலாலும், தனக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டார். கேசவன் சுனிமெல்லுடன் பேசி, சுனிமெல் வவுனியாவில் என்னுடன் தங்கவைப்பது என்று முடிவாகியது. பல மாதங்கள் கழிந்த நிலையில், தென்னிலங்கையில் நிலைமைகள் மோசமடைய, தோழர் சுனிமெல் தீப்பொறியில் இணைந்து செயற்பட விரும்புவதாக என்னிடம் கூறினார். இவரின் இந்த வேண்டுகோளை யாழ்ப்பாணத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நான் முன் வைத்தேன். தோழர் சுனிமெல்லை தீப்பொறியில் இணைக்க முடியாது என்றும், அவர் தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்து, அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்று நிருபித்த பின்புதான், தீப்பொறியில் இணைத்துக்கொள்ளப்படலாம் என ரகுமான்ஜான் உள்ளிட்ட பெரும்பான்மையோர் கடுமையாக விவாதித்து, தோழர் சுனில்மெல்லை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எனது கருத்தை நிராகரித்தனர். இந்த முடிவை வவுனியா சென்று தோழர் சுனிமெல்லிடம் தெரிவிக்குமாறு ரகுமான்ஜான் என்னிடம் கூறினார்.

அப்போது நான் இந்த முடிவில் எனக்கு ஒரு துளியேனும் உடன்பாடு இல்லை என்றும், இந்த இனவாத கருத்தை என்னால் சுனிமெல்லிடம் தெரிவிக்க முடியாது என்றும் சொன்னேன். இதனால் சுனிமெல்லுக்கு இதனை தெரிவிக்க கேசவன் வவுனியா அனுப்பப்பட்டார். கேசவன் வவுனியா வந்து என்னுடன் இருந்த சுனிமெல்லிடம் இதனை தெரிவித்த போது, தோழர் சுனிமெல் கொதித்தெழுந்து "நீங்கள் பச்சை இனவாதிகள்" என்று கூறிவிட்டு, தான் இறந்தாலும் பரவாயில்லை தென்னிலங்கை செல்கிறேன் என்று புறப்பட அவரை வண்ணன்(புலேந்திரன்-இங்கிலாந்து) பஸ்ஸில் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்பி வைத்தார். ரகுமான்ஜான் எவ்வாறு சுனிமெல்லுடன் நடந்து கொண்டார் என்பது பற்றிய உண்மைகளை வவுனியா வண்ணன் (புலேந்திரன்-இங்கிலாந்து), தீப்பொறி கபிலன்(இந்தியா), தீப்பொறி தவராசா (வவுனியா) தீப்பொறி யோகன் (வவுனியா) ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். இதற்கு பிறகும் ரகுமான்ஜான் தன்னை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறி "புரட்சி" பற்றி பேசுவது முரண்நகைக்கு உரியது.

ரகுமான்ஜானால் முன்வைக்கப்பட்ட (2), (3) இல் வரும் ரகுமான்ஜான் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அதாவது "தோழர் கேசவனை (ரகுமான் ஜான்)காட்டிக் கொடுத்த", "நான்(ரகுமான் ஜான்) புலிகளின் உளவாளியாகவே கழகத்துக்குள் நுழைந்த" போன்றவற்றுக்கு என்னால் எதுவித பதிலும் சொல்ல முடியாது. ரகுமான் ஜானின் வெறும் கற்பனை கதைகளுக்கு என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்? ஸ்தூலமாக, ஆதாரங்களுடன் எழுதினால் தான் என்னால் பதில் சொல் முடியும்.

"கிட்டுவுக்கு கல்லெறிந்தது பற்றிய பிரச்சனையும் தீப்பொறி மத்தியகுழு எடுத்த முடிவு. அந்தக் குழுவில் நீங்களும் இருந்தீர்கள்" என்று ஆரம்பிக்கும் ரகுமான்ஜான் "இப்போது நீங்கள் இந்த இரகசியத்தை பகிரங்கப்படுத்தி பலருக்கு ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன் அந்த செயற்பாட்டில் உங்களுக்கு உள்ள முக்கியபங்கை அப்படியே மறைத்து விட்டு எனது (ரகுமான் ஜானின்) பெயரில் போடுவதை எவ்வாறு உங்களால் நியாயப்படுத்த முடிகிறது. நீங்கள் புலிக்கு என்னை காட்டி கொடுத்ததாகவே நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்" என்கிறார்.

புலிகள் டெலோவை அழித்த பின்பு, தீப்பொறியின் அடுத்த கட்ட செயற்பாடுகள் என்னவென்று தீப்பொறியின் செயற்குழு கூடி ஆராய்ந்தது. அப்போது புலிகளின் பாசிச தன்மை பற்றியும், அவர்கள் தொடர்ந்து ஏனைய அமைப்புகளையும் இதே வழியில் அழிக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது. அப்படியானால் நாம் அப்போது என்ன செய்யலாம் என்ற கேள்வி எழவே, புலிகள் தான் இப்போது எமக்கு பிரதான எதிரி என்றும், இத்தகைய கொடுமைகளை செய்த கிட்டுவை விட முடியாது என்றும், கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இதை ரகுமான்ஜான் தான் முக்கியமாக வலியுறுத்தினார். இந்த நிலையில் அப்போது செயற்குழுவில் இருந்தவர்களில் என்னைத் தவிர அனைவரும் ரகுமான்ஜானின் கருத்தை ஆமோதித்தனர்.

"டெலோ அழிப்பு புலிகளின் பாசிச தன்மையின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. கிட்டுதான் இவற்றை எல்லாம் தலைமை தாங்கிச் செய்தார் என்பதிலும், அவர் ஒரு மோசமானவர் என்பதிலும், ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் இன்று இருக்கும் நிலையில், எந்த விதமான அரசியல் கொள்கைகளோ, திட்டங்களோ, அடுத்த கட்டம் பற்றிய எந்தவொரு முடிவுமே, இல்லாமல் கிட்டு மீதான நடவடிக்கை ஒரு தேவையற்ற விசப்பரீட்சை" என்று நான் தெரிவித்தேன். எனது இந்தக் கருத்து "தீப்பொறி அமைப்பினுள் நாம் இவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்தததாக ஒரு குறைபாட்டை முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்த போது கூறி வந்தவர் நேசன்" என்று ரகுமான்ஜான் சொல்வது போல நிராகரிக்கப்பட்டது.

அத்துடன் ரகுமான்ஜான் அந்தக் கூட்டத்தில் வைத்து, "நேசன் நீ என்ன கிட்டு மீதான நடவடிக்கைக்கு பயப்படுகிறாயா? என்று கேட்டார். நான் உயிருக்கு பயந்து போராட்டத்துக்கு வந்தவனல்ல என்பது ஒரு புறமிருக்க, எனது தெளிவான அன்றைய நிலைப்பாடு, நாம் எங்கே செல்கிறோம் என்ற தெளிவான கொள்கை இல்லாமல், தெளிவான திட்டம் இல்லாமல், அடுத்த கட்டம் பற்றிய தெளிவான முடிவில்லாமல், இருக்கும்போது கிட்டு மீதான நடவடிக்கை தேவையற்றதொன்று என்பதேயாகும். இந்த விடயத்திலும் கூட அந்த செயற்குழுவில் நான் அங்கம் வகித்த காரணத்தால், செயற்குழுவின் முடிவுகளுக்கு நானும் பொறுப்பு என்பதை தவிர, எனது கருத்து செயற்குழுவின் முடிவுகளுக்கு எதிரானதாகும். அந்தக் குழுவில் அங்கம் வகித்து, இன்னமும் உயிரோடு கொழும்பில் இருக்கும் தீப்பொறி தேவனிடம் கேட்டு பார்த்தால் உண்மை தெரிய வரும். எனவே கிட்டு மீதான நடவடிக்கைக்கு முக்கிய பங்காளி ரகுமான்ஜான் தான் மட்டுமல்ல, அதன் கதாநாயகனும் ரகுமான் ஜானே! (இது பற்றியும் மிகவும் விபரமாக எனது புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில் விபரமாக கூறவுள்ளேன்)

"நீங்கள் புலிகளுக்கு என்னைக் காட்டிக் கொடுத்துள்ளதாக நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்" என்கிறார் ரகுமான்ஜான். 1992 இல் கணிசமான தீப்பொறி அங்கத்தவர்கள், தீப்பொறியை விட்டு வெளியேறினர். அவர்களில் நானும் ஒருவன். 1992 இல் தீப்பொறியில் இருந்து வெளியேறியதில் இருந்து, 2009 மே18 இல் புலிகள் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்படும் வரை, கிட்டு மீதான நடவடிக்கை எம்மை தவிர, வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் 2009 மே 18க்கு பிறகு, ரகுமான்ஜான் மேற்கொண்ட ஐரோப்பாவுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தின் பின், வெளியாருக்கு கசிந்திருந்தது. எனது நண்பர்கள் பலர் என்னை தொடர்பு கொண்டு, "தீப்பொறிதானாம் கிட்டு மீதான நடவடிக்கை நிகழ்த்தியது" எனக் கேட்டார்கள். நானோ இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதை பற்றியும் நான் கதைக்க விரும்பவில்லை, என்றும் சொன்னேன். இந்த நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து தீப்பொறி வண்ணன்(புலேந்திரன்-வவுனியா) தொலைபேசியில் அழைத்து, "25 வருடமாக நண்பனாக இருக்கிறீர்கள்; எங்கள் வீட்டிலும் தங்கி இருந்திருக்கிறீர்கள்; ஆனாலும் சில விடயங்களை நீங்கள் எனக்கு மறைத்து விட்டீர்கள்" என சூட்சுமமாக பேசினார். "என்ன விடயம்?" என்று திருப்பி கேட்டேன். கிட்டு மீதான நடவடிக்கை என்றார். யார் இப்படி ஒரு விடயத்தை அவருக்கு சொன்னது என்று கேட்டேன். "ரகுமான்ஜான்" என்று பதிலளித்தார். அவரிடம் விபரமாக கேட்டபோது, அவர் சொன்னார், இங்கிலாந்து வந்திருந்த ரகுமான்ஜான், வவனியா சண் வீட்டுக்கு விருந்துண்ண வந்தபோது, சண் வீட்டில் தானும்(வண்ணன்), யூட்(வவுனியா), சிறி(பாசறை ரவி - உரும்பிராய்) சந்தித்து ரகுமான்ஜானுடன் கதைத்தபோது, ரகுமான்ஜான் கிட்டு மீதான நடவடிக்கை பற்றிய தகவலை, யாரும் எதிர்பாராத வகையில், பெருமையாக வெளியிட்டதாக சொன்னார் இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்களில் இணையத்தளங்களிலும் இவ்விடயங்கள் பகிரங்கமாக வெளிவரத் தொடங்கின.

உண்மை இப்படியாக இருக்கையில், ரகுமான்ஜான் "இப்போது இந்த இரகசியத்தை பகிரங்கப்படுத்தி பலருக்கு ஆபத்துக்களை" ஏற்படுத்தியதாகவும், "நீங்கள் புலிகளுக்கு என்னை காட்டி கொடுத்துள்ளதாக நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்" என்றும், என் மீது சுட்டுவிரல் நீட்டுகிறார். 2009 மே18 வரை, எவருக்கும் வெளியில் தீப்பொறியை சேர்ந்த எவருமே வெளியில் வெளிவிடாத ஒரு விடயத்தை, ரகுமான்ஜான் தன் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக வெளிவிட்டு விட்டு, அதை பூதாகாரமாக்கிவிட்டு, அதை வைத்தே "பாதுகாப்பு" என்று அரசியல் நாடகமாடுகிறார்.

"தர்மலிங்கமோ சண்முகநாதனோ, புலிகளிடம் மோசமான சித்திரவதையை அனுபவித்த போது" புலிகளிடம் சொல்லாத விடயத்தை, "கைதான கேசவன் கூட அத்தனை சித்திரவதைகளின்" போதும் புலிகளிடம் சொல்லாத விடயத்தை "ஏன் இளங்கோ கூட புலிகளுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் புலிகளிடம் சொல்லாத" விடயத்தை கேவலமான தனது அரசியல் பிழைப்புக்காக வெளிவிட்டது ரகுமான்ஜான் தான். ஆனால் உண்மையில் ரகுமான்ஜான் தனது

அரசியல் பிழைப்புக்காக தன்னை மட்டுமல்லாமல் அனைவரையும் காட்டி கொடுத்துள்ளார். ரகுமான்ஜான் மறைந்த போராளிகள் பற்றியும், மக்கள் பற்றியும் பேசுவதெல்லாம், வெறும் அரசியல் லாபத்துக்கு தான்.

 

சிங்கக் கொடி போட்ட ரீசேர்ட் விடயம் குறித்து:

" 2009 மே 18 இன் பின்னர் நீங்கள் உங்களது தாயாரின் அந்தியேட்டி கிரியைகளில் பிராம்டனில் (கனடாவில்) நடைபெற்ற போது சிங்கக் கொடி போட்ட ரீசேர்ட் அணிந்து வந்தீர்கள். அதுவும் நீங்கள் இதன் பின்னர் தாயாரின் மரண வீட்டுக்கு சென்று வந்தவர், அங்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது, மகிந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கண்டு விட்டார் என்று கூறிக் கொண்டு இதனைச் செய்தீர்கள்" என்கிறார்.

ரகுமான்ஜான் முற்போக்கு அரசியல் பேசிக் கொண்டு "முன்னேறிய பிரிவினருக்குள்" தன்னையும் ஒருவனாக காட்டிக் கொண்டு சாக்கடை அரசியல் செய்யும் "முதல் நபர்" ரகுமான்ஜான்தான் என்பதற்கு அவர் மேலே தேர்ந்தெடுத்த, ரீசேர்ட் விடயம் நல்ல ஒரு உதாரணம் மட்டுமே.

எனது தாயார் 2009 ஜூலை நடுப்பகுதியில் இலங்கையில் இறந்தார். அதற்கு நான் இலங்கை சென்று வந்தேன். எனது தாயாரின் அந்தியேட்டி கொழும்பில் தான் (கனடாவில் உள்ள பிராம்டனில் அல்ல) நடைபெற்றது. ஆனால் ரகுமான்ஜான் கனடாவில் அந்தியேட்டி பற்றியும் சிங்கக்கொடி போட்ட ரீசேர்ட் பற்றியும் பேசுகிறார். ஏன் ரகுமான்ஜான் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு சென்று பேசுகிறார்? அதற்கு காரணம் உண்டு. ரகுமான்ஜான் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பவரின் நிலையில் இருக்கிறார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பவன் எப்படி தன் கண்ணில் பட்ட சிறுசிறு துரும்பையெல்லாம் பற்றிப்பிடித்து வெளியேற முற்படுவானோ அதேபோல சிறுசிறு விடயங்களை எல்லாம் பற்றிப் பிடித்து அதிலிருந்து தான் வெளியே வர முயல்கிறார். ஆனால் எந்த துரும்புமே அவரை காப்பாற்ற முடியவில்லை. அதில் ஒன்று தான் சிங்கக்கொடி போட்ட ரீசேட்.

இரண்டாவதாக "சிங்கக் கொடி போட்ட ரீசேட் போட்டது" என்று சொல்வதன் மூலம் என்னை "மகிந்தாவின் ஆள்", அல்லது "மகிந்தாவின் அடிவருடி" என்று காட்ட முற்படுகிறார். புலிகள் எப்படி தமக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் "அரசின் கைக்கூலிகள்" "துரோகிகள்" என்று முத்திரை குத்தினார்களோ அதே தந்திரோபாயத்தை தான், இங்கு ரகுமான்ஜான் கையாளுகிறார். ரகுமான்ஜான் கருத்து, நடைமுறையில் "புலிகளின் மறு விம்பமே". ஆனால் ரகுமான்ஜான் "முன்னேறிய பிரிவினர்" என்ற போர்வைக்குள் மறைந்து நின்று இதைச் சாதிக்கிறார். மனோரஞ்சனையும், கண்ணாடி சந்திரனையும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளாக, "மகிந்தவுக்கு காவடி தூக்குபவர்களாக" பட்டியலிட்டு விட்ட ரகுமான்ஜான், "சிங்கக் கொடி போட்ட ரீஷசேட்" போட்டதென்று சொல்லி என்னையும் மூன்றாவது ஆளாக அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளார். இப்படி செய்வதன் மூலம் புலிகளின் தலைமை அழிந்தாலும் புலிகளின் கொள்கை வழியே தான் செல்வதென்று கங்கணம் கட்டி நிற்கிறார் ரகுமான்ஜான்.

இவ்வளவற்றையும் கூறிவிட்ட ரகுமான்ஜான், "ஸ்ரீ லங்கா அரசின் அடிவருடிகளான மனோரஞ்சன் கோஸ்டியுடன் இணைந்து செயற்படும் இவர்களின் அரசியலானது எமது தேசம் சார்ந்த அரசியலுக்கு நேரெதிரானது" என்று கூறும் ரகுமான்ஜான், அடுத்த பந்தியிலேயே, தனது தொப்பியை மாற்றிக் கொண்டு, "இப்போதுங் கூட மகிந்த சார்பு அரசியலை செய்பவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைக்கட்டும் நாம் எமது கருத்துக்களை முன் வைப்போம்" என குழம்பியவராக முரண்பாடாக பேசுகிறார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு அவல நிலைதான் இது! "அரசின் அடிவருடிகள்" என்கிறார்; "அரசின் கைக்ககூலிகள்" என்கிறார்; "தேசம் சார்ந்த அரசியல்" என்கிறார்; "கருத்துக்களை முன் வைக்க" சொல்கிறார்; " விவாதம் நடத்துவோம்" என்கிறார்; எப்படியெல்லாம் குழம்பி பேசுகிறார்!

ரகுமான்ஜான் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்.

நான் இலங்கை சென்று வந்த போது சிங்கக்கொடி போட்ட ரீசேர்ட் அல்ல, சிங்க இலச்சினை பொறித்த ரீசேர்ட்டும் வாங்கி வந்தேன், அதைப் போட்டும் திரிகிறேன். இனியும் போடுவேன். சிங்க இலச்சினை போட்ட ரீசேர்ட்டுக்கும் மகிந்த ராஜபக்செக்கும் உள்ள உறவை ரகுமான்ஜான் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். "மேலும் இதனால் உங்கள் நண்பர்கள் பலரது கண்டிப்புக்கு உள்ளானது" என்று ரகுமான்ஜான் எழுதுகிறார். எனது நண்பர்களுக்கு (எனது நண்பர்களை பற்றித்தான் எழுதுகிறேன்) ரகுமான்ஜான் போல குறுகிய வறட்டுதனமான பார்வைகள் கிடையாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு "முதுமைப்பருவக்கோளாறு" கூட கிடையாது.

ரீட்டாவின் பாலியல் வல்லுறவு குறித்து மிகவும் விபரமாக எனது புளட் தீப்பொறி அனுபவத் தொகுப்பில் விபரமாக கூறவுள்ளேன்.

"எவ்வளவு காலத்துக்கு தான் நீங்கள் சந்திரனுக்கு தலையையும் சம்மாட்டிக்கு வாலையும் காட்டிக் கொண்டு திரியப் போகிறீர்கள்" என்று ரகுமான் ஜான் எழுதியிருக்கிறார்.

குருநகர் நண்பர் நான் புளட்டில் இருந்து வெளியேறிய போது, என் உயிர் காத்த நண்பர். அன்று தொட்டு இன்று வரை, எனது உயிர் நண்பனாக மட்டுமல்ல, உயர்ந்த மதிப்புக்குரிய நண்பனாகவும், எனது குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் போலவும் இருந்து வருகின்றார். கண்ணாடி சந்திரன் எனது மிகவும் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவருமே என்னை முழுமையாக புரிந்து கொண்டுள்ளனர். எனவே ரகுமான்ஜான் தனது மூக்கை இதற்குள் நுழைக்காமல் இருந்து கொண்டால், அதுவே இப்போதைக்கு போதும்.

முடிவாக "எமது போராட்டத்தில் ஒரு தடவை ரௌடியிசம் ஆட்சி செய்தது போதும் இதற்கு மேல் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்போம். தேவைப்பட்டால் இந்த ரௌடியிசத்தை புரட்சிகர வன்முறை கொண்டு முகம் கொடுக்க தயாராக வேண்டும்" என்கிறார் ஜனநாயகத்தினதும் உண்மையினதும் "காவலனாகிய" ரகுமான்ஜான்.

இதில் எனக்கும் கூட முழுமையான உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு எழும் கேள்வி ரகுமான்ஜானுக்கும் "புரட்சிகர வன்முறை"க்கும் உள்ள தொடர்பு ஆகும். ரகுமான்ஜான் புரட்சிகர வன்முறை என்பதை புத்தகத்தில் படித்து, வெறும் எழுத்தளவில் மட்டுமே தெரிந்து கொண்டவர். நடைமுறையில் இவர் பூச்சியம் தான்.

ஆனால் கண்ணாடிச் சந்திரனுக்கோ அல்லது எனக்கோ "புரட்சிகர வன்முறை" என்பது எழுத்தளவில் மட்டுமல்லாது, தேவைப்படும்போது அதுவே நடைமுறையாகவும் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

ஏன் ரகுமான்ஜான் "வியூகம்" வகுத்து நிற்கும் இரயாகரன் கூட "புரட்சிகர வன்முறையை" தேவைப்படும் போதெல்லாம் நடைமுறையில் கையாண்ட ஒருவர். புலிகள் இவரை கைது செய்து சிறைவைத்த போது, சிறையில் இருந்து தப்பியது மட்டுமல்ல, அதன் பின்பு யாழ் பல்கலைக்கழகத்தில் புலிகளின் அராஜகங்களுக்கெதிராக "தனது பாதுகாப்பு" என்பதையும் பொருட்படுத்தாது போராடியவர். எம்போன்றோருக்கு ரகுமான்ஜான் "புரட்சிகர வன்முறை" பற்றி பாடம் சொல்வதை நிறுத்தி விட்டு, "புரட்சிகர வன்முறை" யின் நடைமுறை எப்படி என்பதை எங்களிடமிருந்து குறைந்தபட்சம் கற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுகிறேன்.