உதாரணம் 2 :
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக்கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்து விடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில் விடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள் சிறையாக்களின் வாழ்விடமாமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன்பிடியில் ஈடுபடுவதனால் தற்போது விடுவலை தொழில் முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .
உதாரணம் 3 :
காரைதீவு கற்கோவளம் தொடக்கம் பருத்தித்துறை வரையான பகுதியின் கடலடித்தளம் சிங்கறால் வளர்ச்சிக்கான சாதகமான தன்மை கொண்ட பகுதி. இப்பகுதியில் சாட்டாமாறும் முருகைகளும் அதிகமாவுள்ளது. முருகைகள், பதுங்கி இருக்கும் பொந்துகளை கொண்டதனால் சிங்கறால்கள் உற்பத்தியாகும் இடமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அதேபோல் மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்குமான கடற்பிரதேசமும் சிங்கறால் உற்பத்தியாகும் இடங்களாகும்.
சிங்கறால் ஏற்றுமதி இலங்கையில் எண்பதுகளிலேயே ஆரம்பித்தது. மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும் காலத்தில் தொழிலாளிகள் வள்ளங்களில் சென்று நீரில் குழிபுகுந்து கைகளாலேயே இந்த சிங்கறால்களை பிடிப்பர். ஒரு றால் பிடித்தால் ஒருநாள் சீவியத்திற்கு காணும் என்பார்கள். இப்பிரதேசத்தில் இந்தியர் தொழில் செய்வதன் மூலமே, சிங்கறால் இந்தியாவிலிருந்தும் சிங்கபூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பல கோடி அந்நியச் செலாவணிகளை இந்தியர்கள் சம்பாதிக்கின்றனர். ஆனால் சிங்கறால் உற்பத்தியாகும் கடல் பிரதேசம் பெருமளவில் இலங்கையின் வட பகுதியிலேயே அமைந்துள்ளது.
இதனாலேயே மீனை விட பெறுமதி வாய்ந்த சிங்கறாலைக் குறிவைத்து பல நூற்றுக்கணக்கான இந்திய நாசகார இழுவைப்படகுகள் மேற்கூறிய பிரதேசங்களில் இழுவைமடியை உபயோகித்து சிங்கறால்களைப் பிடிக்கின்றனர். ஏற்றுமதிக்கு தகுதியான சிங்கறால்கள் உயிருடன் பிடிக்கப்படல் வேண்டும். ஆகவே கையால் பிடிப்பது அல்லது இழுவைமடி மூலம் பிடிப்பது போன்ற இரண்டு முறைகளே உண்டு. வலை மூலம் முயன்றால் கால்கள் உடைந்து அவை இறந்து விடும். இலங்கையில் இழுவைப்படகு தடைசெய்யப்பட்டுள்ளதனால்; தொழிலாளிகள் கைகளாலேயே சிங்கறால் பிடிப்பது வழக்கம். இது இயற்கை சார்ந்து, கடல்வளத்திற்கு பங்கமேற்படாமல் செய்யப்படும் தொழிலாகும். எல்லை கடந்து இந்தியர்கள் இழுவைமடி மூலம் சிங்கறால் பிடிக்கும் போது பல லட்சம் பெறுமதியான இறால்களைப் பிடிக்கின்றனர். அதேவேளை தான் பிடித்திருக்கும் மரக்கொப்பையே வெட்டுபவனைப் போல கண்மூடித்தனமான சிங்கறால் பிடி மூலம் அதன் எதிர்கால உற்பத்தியையும் அதற்கு ஆதாரமான கடலடித்தள தாவரவியலையும்; முருகைகளையும் அழிக்கின்றனர். இழுவை மடிமூலம் பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் சிங்கறால் பிடித்த இந்திய இழுவைப்படகுகளையே அப்பகுதி தொழிலாளிகள் சிறைப்பிடித்தனர் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்று.
உதாரணம் 4
மேற்கண்ட உதாரணத்தில் கூறியது போல சிங்கறால் பிடிப்பதற்காக இந்திய இழுவைப்படகுகள் இலங்கையின் வடகரையில் கரையோரத்தில் மடியிழுப்பதால் பாதிப்படைவது சிங்கறால் வளர்ச்சி, கடலடித்தள தாவரவியல் மட்டுமல்ல, இந்தியர்களின் மடியிழுப்பால் பாதிக்கப்படுபவர்கள்; ஐப்பசி மாதத்திலிருந்து சித்திரை வரையான மாரிக்கும், வசந்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கரையோரம் வரும் கட்டா, பாரை, சூபாரை, கருங்கண்ணிப்பாரை, காலை, அறக்குளா, போன்ற பதினைந்து வகை இன மீன்களை நம்பி, அறக்கொட்டியான்வலை பாவித்து தொழிலில் ஈடுபடும் கிட்டத்தட்ட 1800 மர வள்ளங்கள் மற்றும் கண்ணாடி இழைப்படகுகள் மூலம் தொழில்புரியும் 6000 தொழிலாளிகளுமே.
மேற்படி தொழிலாளர்களை இரண்டுவகையில் இழுவைப்படகுகள் நேரடியாக பாதிக்கின்றன. முதலாவது, மேற்கூறிய மீன்கள் பருவகாலத்தில் கரைப்பகுதிக்கு வர முன்பே ஆயிரக் கணக்கான இந்திய இழுவைப்டகுகள் தமது பாரிய பிடிதிறன் மூலம் மீன்களைப் பிடித்து விடுகின்றனர். இதனால் கரையோரப்பகுதிக்கு வரும் மீன்களின் தொகையில் பாரிய வீட்சி ஏற்படுகிறது. அதிலிருந்தும் தப்பி வரும் மீன்களையும் இவர்கள் கரையோரம் வந்து சிங்கறால்களுக்காக மடி இழுக்கும் போது அள்ளி விடுகின்றனர். இரண்டாவதாக, மீதமாக இருக்கும் மீன்களைப் பிடிக்க தொழிலாளர்களால் படுக்கப்படும் வலைகளையும் வெட்டி அழித்துவிடுகின்றன இந்திய இழுவைப்படகுகள். இனவிருத்திக்கான மூலத்தையே அழித்துவிடுகின்றனர். இவ்வகையில் இலங்கை மக்களுக்கு சொந்தமான கடல்வளங்களை களவாடுதல் மட்டுமல்லாமல்; அவர்களில் பல இலட்சங்கள் பெறுமதியான படுப்புவலைகளை வெட்டுவதன் மூலமும் பொருளாதார நட்டத்தையும், வறுமைச் சுமையையும் இந்தியர்கள் எம் தொழிலாளிகள் மீது சுமத்துகின்றனர்.
உதாரணம் 5
இதே அடிப்படையில் தான் மன்னார் பகுதியில் கரைவலைத் தொழில் செய்யும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்படுகின்றனர். கரைவலைத் தொழிலானது வெள்ளம் நுகைக்கும் போது கரைக்கு கூட்டமாக வரும் மீன்களை வலையால் வளைத்து பின்பு அவ்வலையை கரைக்கு இழுப்பதாகும். இந்திய இழுவைப்படகுகள் அம்மீன்கள் கரைக்கு வருமுன்பே கரையிலிருந்து ஒரு கடல்மைல் தூரத்திலிருந்து பிடித்து விடுவதனால்; கரைவலைத் தொழிலும் அது சார்ந்து வயிற்றைக் கழுவும் தொழிலாளிகளின் குடும்பங்களும் பாதிப்படைக்கின்றனர். வடபகுதியில் கரைவலைத் தொழில் செய்வோர் மிகவும் வறிய நிலையிலுள்ள தொழிலாளர்களாகும் என்பதை இங்கு நாம் நினைவிற் கொள்வது நன்று.
மணலை மைந்தன்
தொடரும்