01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 1

இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறைக்கும், தேசியவாதிகளின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுப்பது தான், குறுகிய தேசியவாதமாகும். பாட்டாளிவர்க்கமோ இதில் இருந்து தன்னை தெளிவாக வேறுபடுத்தி நிற்கின்றது. லெனின் இதை மிகத் தெளிவாக 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." என்கின்றார். இதுவல்லாத அனைத்தும் மாக்சியமல்ல. இவை அல்லாத அனைத்தும், சுரண்டும் வர்க்கத்தின் கோட்பாடாகும்.

பூர்சுவா தேசியவாதம் என்பது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கு எதிரானது. ஒன்றுக்கு ஒன்று முரணானது. லெனின் 'பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.' என்றார். இந்த வகையில்தான் லெனினால் சுயநிர்ணயக் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது. அதாவது பூர்சுவா தேசியவாதத்தின் வர்க்க அடிப்படையை தனிமைப்படுத்தும் அரசியல் தான் சுயநிர்ணயம். இது ஒடுக்கும் பிரிவினையையும், ஒடுக்கும் ஐக்கியத்தையும் எதிர்த்து சுயநிர்ணயத்துக்காக போராடுகின்றது.

இந்த வகையில் லெனின் 'எல்லாத்தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக்கொள்வது, பிரிந்துபோகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேச உரிமைகளையும் எல்லாத் தனித்துவப்போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப்பார்ப்பது' மட்டும் தான் பாட்டாளிகளின் சர்வதேசக் கண்ணோட்டமாகும் என்றார். இந்த வகையில் தான் ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இன பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய கடமைகளை தெளிவுபடுத்துகின்றார்.

1.'ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்.' என்கின்றார்.

2.'சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம்' என்பதை வலியுறுத்த வேண்டும். ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறுகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின்.

ஒடுக்கப்பட்ட இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கும் இன பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியத்தை முன்னிறுத்தி கிளர்ச்சியை செய்ய வேண்டும். ஒடுக்கும் இனப் பாட்டாளி வர்க்கம் பிரிவினையை முன்னிறுத்திய கிளர்ச்சியை செய்யவேண்டும். பூர்சுவா தேசியவாதிகளின் எதிர்நிலை அம்சத்தை (ஒடுக்கும் தேசியம் முன்தள்ளும் ஐக்கியத்துக்கு பதில் பிரிவினையையும், ஒடுக்கப்பட்ட தேசியத்தில் பிரிவினைக்கு பதில் ஐக்கியத்தையும்) முன்னிறுத்தி போராடும் கடமையே இங்கு சர்வதேசியமாகின்றது. இதுவல்லாத எதுவும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல. அது சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். இதைத்தான் புதியதிசையும் இனியொருவும் முன்வைக்கின்றது.

ஒடுக்கும் இன பாட்டாளி வர்க்கம் பிரிவினையை ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கம் ஐக்கியத்தையும் முன்வைத்து அணிதிரட்டாத வரை, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது அடிப்படையில் மறுதளிக்கப்படுகின்றது. மாறாக சுரண்டும் வர்க்க கோட்பாடாக அது மாறிவிடுகின்றது.

இந்த வகையில் சுரண்டும் வர்க்கக் கோட்பாட்டைத்தான் புதியதிசையும் இனியொருவும் முன்வைக்கின்றது. இது தனது திட்டத்திலும் அரசியல் வழியிலும் "தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது." என்கின்றது. இப்படி லெனினை மறுத்து, தலைகீழலாக முன்வைக்கின்றது. இது மார்க்சியமல்ல, சர்வதேசியமுமல்ல. இதுதான் சுரண்டும் வர்க்கத்தின் தேசியம். புலிகள் முதல் அனைவரும் பிரிந்து போகும் சுயநிர்ணயத்தையே சுயநிர்ணயமாக எப்படி கூறிவந்தனரோ, அதைத்தான் இனியொருவும் இங்கு கூறுகின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் "முதன்மையானது பிரிவினையே", இதுதான் சுயநிர்ணயம் என்று கூறுகின்ற மார்க்சியத்தின் பெயரிலான கேலிக்கூத்தை பார்க்கின்றோம். மார்க்சியம் சொன்ன சுயநிர்ணயத்தின் தலைகீழ் வடிவம். ஆம் இது தான் பூர்சுவா வர்க்க கோசமாகும். ஐக்கியத்துக்கான போராட்டம் முதன்மையற்றது என்று கூறுகின்ற பிரிவினைவாதத்தை முன்வைக்கும், குறுகிய இனவாத தேசியத்தைப் பார்க்கின்றோம். இதைத்தான் புலிகள் முதல் அனைத்து இயக்கங்களும் செய்தன. அவர்கள் எப்படி அன்று தங்கள் குறுந்தேசியத்துக்கு மார்க்சிய சோடனை செய்தனரோ, அதை அன்று முன்னின்று செய்த போலி இடதுசாரிய மார்க்சிய வேடதாரிகள் போல்தான் இவர்களும். அதே உள்ளடக்கத்தைதான் இனியொருயும் புதிய திசையும் மறுபடியும் செய்கின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

22.02.2011


பி.இரயாகரன் - சமர்