இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்
இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கதிற்கான இருவகை சூழல்கள் காணப்படுகின்றது.
1.கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்)
1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக்கல்லும், மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும்.
இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.
1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்
2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
1.1. ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்
இக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்பகாலத்தில் கடலாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது.
இந்த மாற்றங்களுக்கு கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்தவகையான உயிரினங்கள் அக்கடல் பகுதியில் உருவாகின்றது என்பதை தீர்மானிக்கின்றது. இக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால் கடல் அறுகு, சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக்கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும், வெள்ளைறால், மட்டறால், வெள்ளைநண்டு, குழுவாய்நண்டு போன்ற நண்டு இனங்களும், ஆடாதிருக்கை, புலியன் திருக்கை இன திருக்கைகளும், இங்கு உருவாகி ஆழ்கடல் சென்று பருவகாலத்தில் இனபெருக்கத்திற்கு தான் பிறந்த இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக தோப்புகாட்டு முனங்குக்கும் தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி, நாவாந்துறை, பண்ணை பாசையூர் ஈறாக கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது.
1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
இக்கள கடலுக்கு ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழம் இருந்தால் அதன் கடலடி நிலம் மணலாலும், சிறு முருகை கற்தளத்தையும் கொண்டதாக இருந்து வருகிறது. இப்பகுதியின் கடலடித் தாவரங்களாக பெரும்பாலும் சாட்டாமாறு காடுகளும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லின பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன்கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்டு இனமும், கட்டித்திருக்கை, கருவால்திருக்கையும் இக்கடல் பிரதேசத்தில் உருவாகிறது. அத்துடன் இக்கடல் பிரதேசத்தில் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினத்தின் வாழ்விடமாகவும் இது உள்ளது. கணவாய் இப்பகுதியில் சாட்டமாறு, மற்றும் கடல் தாளையின் தண்டுகளில் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த கள கடலின் கரை பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால் முட்டைகள் கணவாய் குஞ்சுகளாக பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்தவிடத்தை சென்றடைகின்றன. இக் கணவாய்கள் ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில் களம் கண்டி பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.
ஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக் குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் இருக்கும் ஆழமான ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அதை காடன் என்று அழைக்கப்படும். இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது கிட்டத்தட்ட முழுவளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். சினைத்து இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக் கடலுக்கு முட்டையிட சிறையாக்கள், கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும். பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை, செட்டிபுலம், புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் தொடர்கிறது.
2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம்.( இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்.)
இது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்குநீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால், மேற்கு வாய்க்கால், காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதிற்குள் அடங்கும் இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இக்கும் - 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 1979 - 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான பிரித்ஜோப் நான்சென் செய்த ஆவின்படி இப்பகுதியின் ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசமாகும். இப்பகுதி மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனக் கணிக்கப்பட்டது. இதே ஆய்வின்படி இப்பகுதியின் கடலடித்தளம் பாரிய கடலடித்தள ஊழசநட சநநக எனப்படும் முருகைகளை (பவளப்பாறைகளை)க் கொண்டுள்ளது. அதனால் பவளப்பாறைகளை தன்னகத்தே கொண்ட கடலடிப் பிரதேசத்திற்கே உரித்தான தாவரவியலைக் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் அடிப்படையில் இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளைறால், சாக்குக்கணவாய், கல்லுத்திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகிறது.
இந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும்.
மேற்கூறிய தலைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேச முன்பு என் இளமைக்காலங்களில் இருந்து ஒரு நினைவு மீட்டல்:
எனது கிராமம் இலங்கையின் பொருளாதர அடிப்படையில், ஒப்பீட்டளவில் அனேகமாக நடுத்தரவர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர். அவரை ஐயாமாமா என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை எங்கு கண்டாலும் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டு பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ஐயாமாமா என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை "சர்க்கரை சம்மாட்டி" என்று அழைப்பார்கள். சிறிமா ஆட்சிக் காலத்தில் அவர் பதின்மவயதில் இருந்தபோது, அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார்.
கடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும், சர்க்கரை மூட்டைகளுடனும் தலை மறைவானார். பலவருடங்கள் கழித்து எழுபத்தி ஒன்பதாமாண்டு, Toyota Rosa வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். நெருங்கிய அவரின் குடும்பத்தினர் அவர் மனைவி தமிழச்சி தான் என்றும், அவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினார். மாமா வரும் போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன்முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன் தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள் உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களும் படகும் அவரின் மனைவியின் உறவினர்களும் சில தென்னிலங்கை தொழிலாளிகளும் கடலால் கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு சர்க்கரை கடத்தியவனிடமிருந்து இவர் களவாடியதனாலும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் "சர்க்கரைச் சம்மாட்டி" என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. சம்மாட்டி என்றால் வழமையாக "முதலாளியாகவே" விளங்கி கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்களிடமுண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச்சமூகத்தில் அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக்காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. உதாரணமாக பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள், மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச்செலவு போக, மீதமானது படகும் வலையும் ஒருவருக்கு சொந்தமானால் அவருக்கு இரண்டு பங்கும் தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம் வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்கு தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது, கெட்டது நடந்தால் ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதேபோலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொது செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை "உழைப்பெடுத்தல்" என்று கூறுவர்.
சர்க்கரைச் சம்மாட்டி எனது மாமனும்; சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு கடல்வலைய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாக தொழில் செய்ய முடியாததனால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த வீரய சூரைய என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டது. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்திலொரு நாள் வீரய சூரைய பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள்பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவர் புலியில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்தி விட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள்பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்விஜி பீடி கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழ்ஈழ ஆதரவாளராக வலம் வந்ததுடன் வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் எல்லாம் இழந்தவர்; ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர். இன்று அதே பிள்ளைகளுடன், அவர் தனது குடும்பத்தின் அன்றாட செலவுக்காக கடலில் இருந்து வரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து மாதகல் கரையிலும், பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோதும் சரி தவறுகளுக்ககப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி அன்று இருந்தது. இன்று அவர் அன்றாடம் காச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்;டப்படும் வேளை அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ இன்று ஒருவருமில்லை.
மணலை மைந்தன்
தொடரும்