29- 30.01.2011 ஆகிய இரு தினங்கள் தனது இரண்டாவது மாநாட்டினை ஜரோப்பிய நகரம் ஒன்றில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடத்தியிருந்தது. முதல் மாநாட்டின் பின் (18 மாதங்கள் கழிந்த நிலையில்) சில புதிய உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த மாநாடு நிகழ்ந்தது. இதில் இலங்கை உள்ளிட்ட பல ஜரோப்பிய நாடுகளிலும் இருந்து 19 உறுப்பினர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.

 

தோழமையையும் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளையும் கொண்ட உறுதியுடன் மாநாடு தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டதுடன் ஒரு அரசியல்திட்டம் மற்றும் வேலைமுறைகள் என்று பல்வேறு விரிந்த தளத்தில் தன்னைத்தான் ஒழுங்கமைத்து கொண்டுள்ளது.

•அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியது இந்த மாநாடு. உலகெங்கும் இருக்கக்கூடிய இலங்கையைச் சார்ந்த மார்க்சிய லெனிய மாவோசிய சிந்தனை கொண்டவர்கள் முதல் புதிய ஜனநாயக புரட்சிகர அரசியலை நேசிக்கின்ற அனைத்து சக்திகளையும்; பிரதிநிதித்துவப்படுத்தியது. அதேவேளையில் இது இலங்கைக்கான ஒரு கட்சி அல்ல என்பதனை மிகவும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக் கொண்டது.

 

•இலங்கையில் வர்க்க ரீதியான அணிதிரட்டலைக் கோரிய, புரட்சிகரமான சர்வதேசியத்தினை முன்னிறுத்திய அதன் எல்லைக்குள் தன்னை அணிதிரட்டியும், கருத்துக்களை முன்வைத்தும் போராடும் ஒரு முன்னணிக்குரிய கடமையினை முன்னெடுக்கும் என இந்த மாநாடு மிகத் தெளிவாக உறுதிபூண்டது.

•இலங்கையில் புரட்சியை முன்னெடுக்க ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியும், புதிய ஜனநாயக புரட்சியினை முன்னெடுக்க ஒரு முன்னணியும் இன்று இல்லாத நிலையில், எமது அமைப்பின் பணி அதனை மையப்படுத்தியதான ஒருங்கிணைந்த ஒரு வேலைத்திட்டத்தினைக் கோரிய ஒரு போராட்டத்தினையும் நடாத்த உறுதி கொண்டது.

•மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை சார்ந்த வர்க்கப் போராட்டத்தினையும், புதிய ஜனநாயக புரட்சிக்கான ஒரு முன்னணியையும் சார்ந்த சிந்தனை முறையில் புரட்சிகர கூறுகளை இன்று புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்ற சூழல் காணப்படுகின்றது. இக்கருத்துள்ள அனைவரையும், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுச் சூழலையும் அதன் முக்கியத்துவத்தையும் இந்த மாநாடு இனம் கண்டுகொண்டுள்ளது. யாரெல்லாம் மக்களிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றனரோ அவர்கள் அனைவரும் பு.ஜ.ம.மு உடன் உள்ளனர் என்ற உண்மையை இந்த மாநாடு தனது கருத்தில் எடுத்துள்ளது. இதற்கு அப்பால் தான் ஏனையோரின் முரண்பாடுகள் உள்ளதனை இம் மாநாடு குறிப்பாக கவனத்தில் எடுத்துள்ளது.

•இலங்கையில் வாழும் மக்கள் தான் தமக்கான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையும் முன்னணியினையும் நிறுவி, அனைத்து மக்களிற்குமான ஜனநாயகப் புரட்சியினை முன்னெடுக்க முடியும். இதுவல்லாத அனைத்தும் அரசியல் பித்தலாட்டங்களையும் எதிர்வுகூறல்களையும் அந்நிய சக்திகள் சார்ந்த தலையீடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. அதனை நிராகரித்து இலங்கை மக்களின் சொந்தப் போராட்டத்தினை முன்னிறுத்தி, அதனை சார்ந்து நிற்பதென மாநாடு உறுதி கொண்டது.

•பரந்துபட்ட மக்களை அணிதிரட்டாத, தங்கள் அரசியல் கருத்துக்கள் செயற்பாடுகள் அனைத்தையும் மக்கள் முன் பகிரங்கமாக முன் வைக்காத, இரகசிய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்புக்களை இந்த மாநாடு நிராகரித்துள்ளது. இவை இலங்கை மக்களுக்கு எதிரான சதியாக இனம் காட்டியது. நாட்டிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களிலும், பல தளங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இரகசிய அரசியல் மற்றும் இரகசிய இராணுவ சதிகள் மூலம் இலங்கையில் வாழும் மக்களின் வாழ்வின் மேல் திணிக்கின்ற எத்தகைய தீர்வு முயற்சிகளையும் நிராகரித்ததுடன், அதனை எதிர்த்து போராடவும் பு.ஜ.ம.மு தனது வேலைத்திட்டத்தினை முதன்மைப்படுத்தியது.

•கடந்தகாலத்தில் பு.ஜ.ம.முன்னணியையும் அதன் அரசியல் மற்றும் வேலைத்திட்டத்தினையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் தனிநபர்களை அமைப்பாகக் காட்டிய சேறடிப்புக்களையும், அமைப்பு பற்றிய அவதூறுப் பிரச்சாரங்களையும் குறிப்பாக இனங்கண்டு, இவற்றினை மேற்கொண்ட நபர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

•இனவாதத்தினை முன்னிறுத்தி இலங்கை மக்களை தொடர்ந்தும் பிளக்கின்ற அரசியல் போக்கிற்கு எதிரான போராட்டத்தினை கூர்மைப்படுத்தவும் அதேவேளை சாதாரண சிங்கள பொதுமக்களை எதிரிகளாக முன்னிறுத்தும் குறுந் தமிழ்; தேசிய முனைவுகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவும் உறுதிகொண்டு தன்னை ஒரு முன்னேறிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது.

•இன்று உடனடியாக இனம் காணப்பட்டுள்ள பல வேலைகளை முன்னெடுக்கும் நோக்கில் பல வேலைக் குழுக்களையும் தனக்கான ஒரு செயற்குழுவினையும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அமைத்துக் கொண்டது.

இலங்கை மக்களின் விடுதலைக்காக போராடுவது தான் முன்னணியின் முதன்மையான அரசியல் பணியாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி வரையறுத்துக் கொண்டுள்ளதுடன் கூடவே, சர்வதேசியத்தை முன்னிறுத்திய கடமைகளையும் எல்லைகளையும் வரையறுத்துக் கொண்டது.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

29-30.01.2011