இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

 


யுத்தம் முடிந்து இருவருடங்களாகும் இன்றைய நிலையில், இலங்கை தமிழ் மீனவர்களின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கிழக்கு மற்றும் தென் தமிழ் கரையோர பிரதேசக் கடல்வளம் சர்வதேச மீன்பிடிக் குத்தகைக்காரர்களான சீனர்கள், ஜப்பானியர்களாலும், உள்ளுர் அரசுசார் கிரிமினல்களாலும் சுரண்டப்படுகிறது. யுத்தத்தாலும், சுனாமியாலும், இயற்கை அனர்த்தங்களாலும் மீன்பிடிசார் சமூகம் பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பாரியளவில் இனவழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம், இன்று இந்திய இழுவைப்படகுகளின் நாசகார மீன்பிடிமுறையால் சூறையாடப்படுகின்றனர். தேசத்தின் மீன்வளத்தை அத்துமீறி திருடுவது மட்டுமல்லாமல், மீன்வள வளர்ச்சிக்கு ஆதாரமான கடலடித்தள வளங்களையும் இந்திய இழுவைப்படகுகள் நாசப்படுத்துகின்றது. இதைத் தட்டிக் கேட்பாரின்றி நியாயப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஏதிலிகளாக, யுத்தத்தின் பின்னும், இலங்கை அரசின் கொடும் முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மீனவர் சமுதாயம் சிறுகச் சிறுக முதலிட்டு உருவாக்கிய மீன்பிடி உபகரணங்களையும், வலைகளையும் கூட கடற்கொள்ளையர்கள் அழித்தொழிக்கின்றனர். இவர்கள் தமிழக மீனவர்கள் போர்வையில், கடல் கொள்ளையில் ஈடுபடும் மூலதனமாகும்;.

உலக அளவில் ஐந்தாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்ட இந்த இந்திய இழுவைப்படகுகள், தமது எல்லைக்குட்பட்ட கரையோர வளங்களை அழித்தது. இதன் மூலம் தன்சொந்த கரையோர சிறு மீன்பிடித் தொழிலாளர்களை பட்டினியாக்கி விட்டு, இன்று துளிர்க்க முயலும் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கின்றது.

இந்நிலைக்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தமிழ்சமூகமும், இடதுசாரி இந்திய தோழர்களும், இந்நிலையை தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான இன முரண்பாடாக சித்தரித்துக் காட்ட முயல்கின்றனர். இதன் அடிப்படையில், இலங்கை மீனவர்களை பலியிட்டு குறுகிய இனமுரண்பாட்டை மேலும் கூர்மையடையச் செய்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்;, இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை கொல்கின்றதென்பதாகும். கொலைகள் நிறுத்தப்படவேண்டுமென்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதில் முரண்பாடும் இல்லை. அதேவேளை இலங்கை இராணுவம், இனவெறி இராணுவம் என்பதிலும் முரண்பாடில்லை.

ஆனால் கொலைகளின் மறுபுறத்தில் இழுவைப் படகுகளால் நடாத்தப்படும் நாசகார மீன்பிடியும், அதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர் வாழ் நிலையையும், இக் கொலைகளைக் காட்டியே மூடிமறைக்கின்றனர். இந்திய அரசும், இந்தியாவை ஆளும் கட்சிகளும் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்துவதும், இதன் பின்னணியில் தான் அரங்கேறுகின்றது.


இதன் அடிப்படையில் நாம் :

இலங்கை அரசே!

    இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணம் மூலம் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் (இந்திய வள்ளம் உள்பட) வள்ளங்களை முடக்கு!!
    அதன் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடு!!
    கூலிக்கு வந்தவர்களை உடன் விடுதலை செய்!!!
    பிராந்திய மீன்பிடி மேலாதிக்கம் செலுத்தும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் வளங்கப்ப்பட்ட மீன்பிடி அனுமதியை உடனே நிறுத்து!!!
    கிழக்கு மற்றும் தென் இலங்கை மீன்பிடியை புனருத்தாரணம் செய்!!
    இறந்த தமிழக மீனவர்களுக்கும், இந்தியாவில் அத்துமீறி அழிந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்டஈடு வழங்கு!!

இந்திய அரசே!


    பாக்குநீரிணையில் இழுவைப்படகு மீன்பிடியை உடனே தடை செய்!!
    இலங்கை தமிழ் மீனவர்களுக்கு அவர்களின் அழிந்து போன மீன்பிடி உபகரணங்களுகான நஷ்டஈடு வழங்கு!!

இலங்கை அரசே! இந்திய அரசே!!


    மீனவர் கொலையை சர்வதேச மட்டத்தில் ஆராய ஆவன செய்!!!
    பாக்குநீரிணையின் இருகரையிலும் கரையோர மீன்பிடியை அபிவிருத்தி செய்!! அதை பாதுகாக்கும் மீன்பிடிக் கொள்கையை வை!!!

இந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும் - (பகுதி -1)

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – (பகுதி 2)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 03)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 04)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 05)

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (இறுதி பகுதி – 06)

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
(துண்டுப்பிரசுரம் 16.02.2011)

www.ndpfront.com

www.tamilarangam.net

www.ndpfront.net

www.tamilcircle.net

http://kalaiy.blogspot.com/