அரசியல்ரீதியாக வக்கற்றவர்கள், மக்களை தலைமை தாங்க வேண்டிய அரசியலையும் பொறுப்பபையும் ஏற்காத கூட்டம், மக்களின் கிளர்ச்சியை ஏகாதிபத்திய - இராணுவ கூட்டுச்சதி என்கின்றனர். இப்படி அரசியல் ரீதியாக மக்களின் கிளர்ச்சியை கொச்சைப்படுத்துவது தான், ஏகாதிபத்திய சதி அரசியலாகும்.

மக்களின் கிளர்ச்சியை தொடர்ந்து அதிகாரம் ஏகாதிபத்திய கைக்கூலிகளிடம் மாற்றப்பட்டுவிட்டது. இது எதனால், எந்த சூழலில், யாரால் ஏற்பட்டது என்ற உண்மையை மூடிமறைக்க, இதைத் திரிக்கின்றனர். ஐயோ, இது அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய சதிப் புரட்சி என்கின்றனர். மக்கள் இந்தச் சதியில் ஈடுபடும் வண்ணம், ஏகாதிபத்தியங்கள் தான் அவர்களை இறக்கியது என்கின்றனர். இப்படி மக்கள் நடத்திய போராட்டத்தை ஏகாதிபத்திய சதி என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை முன்தள்ளுகின்றனர்.

 

 

 

இந்த மக்கள் கிளர்ச்சியின் அரசியல் விளைவு என்ன? மக்கள் தமக்கான ஒரு தலைமை தேடுகின்றனர் என்பதையே இது வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க கட்சியின் தேவையையும் இது வலியுறுத்துகின்றது. அது இன்று முன்னெடுக்கப்படாத அரசியல் சூழலை, சர்வதேச ரீதியாக இம் மக்கள் கிளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது. இந்த அரசியல் உண்மையையும், அதற்கான பணியையும் மறுக்கவே இதை ஏகாதிபத்திய சதி என்கின்றனர். மக்கள் வாழ முடியாத சூழலில் நடத்திய கிளர்ச்சியை, ஏகாதிபத்திய சதியாக திரித்துக் காட்டுகின்றனர்.

உலகெங்கும் மக்கள் அதிருப்தியுற்று, வாழ்க்கையை அமைதியாக நடத்த முடியாது திண்டாடுகின்றனர். உழைப்பு கடுமையாகி, வாழமுடியாத கூலிகளுக்குள் சிறைவைக்கப்படுகின்றனர். உழைத்து வாழும் மக்கள், கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் இழந்து வருகின்றனர்.

இதை எதிர்த்துப் போராடவும், வழிகாட்டவும் வக்கற்ற துரோக தொழிற்சங்கங்கள். போலி கம்யூனிச கட்சிகள். போராட்டங்களை இடைநடுவில் வைத்து காட்டிக்கொடுத்து, போராடிய மக்கள் மேலான அடக்குமுறைகளுக்கே துரோக தொழிற்சங்கங்கள் உதவி வருகின்றன.

மக்கள் தமக்கான தலைமை அற்ற, போராட்டத்தில் நம்பிக்கையிழந்த அதிருப்தியில் வாழ்கின்றனர். இதனால் ஒடுக்குமுறைக்கு இணங்கிப் போகும் வாழ்க்கை முறைக்குள், நம்பிக்கையைத் தேடினர். ஆனால் இணங்கிப் போதல், மேலும் அடிமைத்தனத்தை வாழ்வாக்கி வந்தது.

எங்கும் அதிருப்தியும் கொந்தளிப்பும் கொண்ட சூழல்தான், திடீரென மக்கள் கிளர்ச்சியாக வெடித்துக் கிளம்புகின்றது. அதற்கென்ற தலைமை இருப்பதில்லை. இதனால்தான் மறுபடியும் ஏகாதியங்த்தியங்கள் தமது புதிய தலைமை மூலம், இம்மக்களை ஏமாற்றி ஆளுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இது முன்கூட்டியே திட்டமிட்டு ஏகாதிபத்தியம் நடத்திய புரட்சி சதியல்ல.

அப்படி கூறுவது மக்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பையும், பாட்டாளி வர்க்கக் கட்சிக்குரிய அரசியல் கடமையையும் செய்யாத அரசியலை பாதுகாத்து, அதை செய்ய விரும்பாத அரசியல் காரணங்களை முன்வைத்தலாகும். இந்த நிலைமை உருவாகக் காரணம், பாட்டாளி வர்க்க கட்சி இன்மையும், அந்த அரசியல் கடமையை செய்ய மறுத்தலுமாகும்.

அரபு மக்களின் கிளர்ச்சி, அதன் அனுபவம், ஆட்சி மாற்றம் உருவாக்கிய அரசியல் வெற்றிடம், புதிய பாதைக்கு வழிகாட்டுகின்றது. மக்கள் தமக்கான தலைமையை உருவாக்குகின்ற தேவையையும், அதன் அவசியத்தையும் இது உருவாக்கி இருக்கின்றது. இதை மறுக்கின்ற, திரிக்கின்ற அரசியல் திரிபுதான், இதை ஏகாதிபத்தியம் நடத்திய சதிப் புரட்சியாக காட்டுகின்றது. அரசியல்ரீதியாக வர்க்க அரசியலை நீக்கம் செய்ய, மக்கள் கிளர்ச்சியை ஏகாதிபத்திய சதியாகக் காட்டுகின்றனர். இப்படி காட்டுகின்றவர்கள், மக்களுக்கான ஒரு அரசியலை முன்வைத்து, அதற்காக நடைமுறையில் போராடாதவர்கள் தான்.

 

பி.இரயாகரன்

15.02.2011