Language Selection

மணலை மைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.

இதேபோன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவும், புலம்பெயர் சந்தர்ப்பவாத திடீர் குறுந்தேசியவாதிகளில் இருந்து, புலிகளின் எச்சசொச்ச பாசிச கட்டமைப்புகளும், முன்னாள் இலங்கை அரசின் அடிவருடிகளான புளட் முதல் ரீ.பீ.சீ வானொலி வரை அனைத்தும் இன்று இக்கொலைகளை அடிப்படையாக வைத்து தமது நலனில் நின்று அரசியல் செய்கின்றனர்.

இக் கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென்பது மானிடதர்மம் என்ற சமூக கூட்டுப்பொறுப்பு என்பதற்கப்பால் ஒவ்வொருவரின் தனிமனித கடமையும் ஆகிறது. இதன் அடிப்படையில் எவரும் இக்கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்கலாம்.

ஆனால் இவர்களின் இக்கொலைகளுக்கெதிரான குரல் இரு இனங்களுக்கிடையிலான ஏற்கனவே இருக்கும் பிளவை அதிகரிக்க வகை செய்வதாகவும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பதாகவும் உள்ளது.

 

 

 

ஆம், இந்திய இடது மார்க்ஸ்சிஸ்ட்டுகள் தொடக்கம் புலம்பெயர் குறுந்தேசிய தமிழ் வலது பாசிச சக்திகள் வரை, இந்திய மீனவர் விவகாரத்தில் இவர்களால் முன்வைக்கப்படும் விவாதத்தில் இரு விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.

முதலாவது "சர்வதேச" தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி மீனவர் பிரச்சனையை, சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை, இந்திய தமிழ் மீனவர்களுக்குமிடையிலான இனமுரண்பாடாகக் காட்ட முனைகின்றனர்.

இரண்டாவது, இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் இயற்கைவளங்கள் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல், வரையறையற்ற மீன்பிடித்தொழிலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் .

இதன் அடிப்படையில் இலங்கை மீனவர் சமூகத்திற்கெதிராக, செயற்படுகின்றனர். அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.

இக்கட்டுரை சிலதரவுகளின் பின்னணியில் மேற்கூறிய இவர்களது இரண்டு நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்துவதுடன், இவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை சாடி நிற்கின்றது.

 

வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை

இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம்; சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 – 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகுகடன்கள் மீன்பிடி கூட்டுறவுச்சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

 

அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித்தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.

இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில்நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறு வள்ளங்களுக்கும், கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரை கடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலனை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களுக்கிடையிலான வட்டிக்கு வழங்கும் முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தது.

2. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில்நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிற்காலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்கள தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்)

3. நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவுவிலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களை பெறமுடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தென் இலங்கையர்க்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக யா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.

4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவைகடல் /களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றர் இல் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமேடை கேரளா கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.

5. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டது.

இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

தொடரும்.

 

மணலை மைந்தன்

 

பிற்குறிப்பு: இக்கட்டுரையில் இலங்கையின் தெற்கு மற்றும் முல்லைத்தீவிலிருந்து அம்பாறை வரையான கிழக்குக்கரையின் மீன்பிடி பற்றி பேசுவது தவிர்க்;கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இதை எழுதுபவர் யாழ்- மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர் என்பதல்ல. அதேவேளை அங்குள்ள மீன்பிடிசார் குறைபாட்டை மூடிமறைப்பதற்காகவுமல்ல. இன்று விவாதத்திலுள்ள விடயம் இந்திய மீனவர்கள் கொலைசெய்யப்படுவதும், வடபகுதி மீனவர்களின் அவலமும் இந்திய மீனவர்களின் கடல்மேலாதிக்கமுமாகும். தெற்கு மற்றும் கிழக்கின் மீன்பிடி யுத்தம், சுனாமி, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அது புனருத்தாரணம் செய்யப்படவில்லை. இதனால் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மீன்பிடி சமூகம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையாளருக்கு தெரிந்தவரை அங்கு கூட தமிழ் சிங்கள மீன்பிடி தொழிலாளர்களுக்குகிடையில் சொல்லத்தக்க அளவிலான முரண்பாடுகள் இருந்ததில்லை. ஆனால் இன்று அரசு சார்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் முதலாளிகள் பாரிய முதலிட்டு, தடைசெய்யப்பட்ட, இயற்கை வளத்தை அழிக்கும் டைனமைட் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று இலங்கையில் கிழக்கு துறைமுகங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமுத்திர மீன்பிடி (200 கடல்மைல்களுக்கப்பால்) கலங்கள் பாவிக்க அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அங்குள்ள பிரச்சனைகள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதப்படும்.