08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

துனிசிய, எகிப்திய மக்களின் எழுச்சிகள், ஏன் மக்கள் அதிகாரத்தை நிறுவும் புரட்சியாகவில்லை?

அரபுலகில் தொடரும் மக்கள் கிளர்ச்சிகள், மக்களின் சொந்த அதிகாரத்தை நிறுவவில்லை. மறுபடியும் மக்களுக்கு எதிரான, ஏகாதிபத்திய தலைமையிலான சர்வாதிகாரத்தையே உருவாக்குகின்றது. இது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தலைமையையோ, இஸ்லாமிய அடிப்படைவாத தலைமையையோ உருவாக்கவில்லை. ஏன் முரணற்ற முதலாளித்துவ தலைமையையும் உருவாக்கவில்லை. மறுபடியும் மக்களை தொடர்ந்து ஒடுக்கும், புதிய ஏகாதிபத்திய தலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. மக்களே தங்களைத் தாங்கள் தலைமை தாங்கும் வண்ணம், தமக்கான ஒரு தலைமையை கொண்டிருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் தான், மக்களின் கிளர்ச்சிகள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றது. அடக்குமுறையும், வாழ்விழந்த மக்களின் எதிhப்புகளும் தான் ஆட்சியாளரை தூக்கியெறியும் கிளர்ச்சியாக மாறியது.

இன்றைய ஏகாதிபத்தியங்களின் உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அதன் நலனுக்கு ஏற்ப, அரபுலகில் நீடிக்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சிகள் தான் இது. இருந்த போதும், தலைமை தாங்கும் குறிப்பிட்ட ஆட்சியாளர்களை தூக்கியெறியும் எல்லைகை;குள் முடங்கிவிடுகின்றது. இது மீண்டும் ஒரு மக்கள் விரோத ஆட்சிக்கே வழிகாட்டியுள்ளது. தங்கள் உயிர்களை இழந்தபடி வீதியில் இறங்கிப் போராடும் மக்களும் இதை விரும்பாத போதும், அவர்களிடம் தமக்கான தலைமை கிடையாது. புதிய தலைமையை ஏகாதிபத்தியங்கள் தான் மீண்டும் தீர்மானிக்கின்றது. இதுதான் ஜனநாயகம்.

இதற்கு மாறாக மக்கள் தமக்கான ஒரு தலைமையை உருவாக்காத வரை, அதிகாரத்தைக் தாம் கைப்பற்றாத வரை, ஏகாதிபத்தியங்களின் பொம்மைகள் தான் தொடர்ந்தும் மக்கள் விரோத ஆட்சிகளை உருவாக்குவார்கள். இன்று துனிசியா, எகிப்து முதல் அரபுலகில் நடந்த, நடக்கின்ற மக்களின் கிளர்ச்சிகளும், அதைத் தொடர்ந்து உருவாகும் ஆட்சிகளும், ஏகாதிபத்தியத்தின் நலனை பேணும் வண்ணம் நடக்கின்ற ஒரு அதிகார மாற்றங்கள் தான். மக்களின் கிளர்ச்சிகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருந்த போதும், நடைபெறும் மாற்றங்கள் தொடர்ந்தும் மக்களுக்கு எதிரானது தான்.

ஏகாதிபத்திய நலனை பேணும் வண்ணம் உருவான சர்வாதிகாரிகள், தேர்தல் மூலம் தான் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள். அதாவது தமக்கு விரும்பியவர்களை வெற்றி பெற வைப்பவர்கள். தம்மைத்தாம் வெல்ல வைப்பவர்கள். இதுதான் மூன்றாமுலக நாடுகளின் பொதுவான ஜனநாயகமும், தேர்தல் முறைமையுமாகும்.

இந்த தெரிவுகளை ஜனநாயகம் என்று மேற்கு பிரச்சார ஊடகங்கள் போற்ற, ஏகாதிபத்திய நலனை பேணிய சர்வாதிகார ஆட்சிகள் மக்களை ஒடுக்கி வந்தது. இதன் நீண்டகால விளைவுதான், மக்களின் தன்னியல்பான எழுச்சியும் கிளர்ச்சியுமாகும். இதனால் ஏகாதிபத்திய நலன்கள் கேள்விக்குள்ளாக, மக்களின் எழுச்சியை தமதாக்க தாம் பாதுகாத்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் காய் நகர்த்துகின்றனர். இப்போராட்டத்தை ஜனநாயகத்தின் குரலாக, பிரச்சாரம் செய்கின்றனர். இதன் மூலம் மறுபடியும் ஒரு மக்கள் விரோத கூலிக் கும்பலிடம், தங்கள் சர்வாதிகார ஆட்சியை கைமாற்றுகின்றனர். இந்த வகையில்தான் மக்களின் கிளர்ச்சியை அடுத்து ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ஆட்சி மாற்றங்களும், தொடரும் இரகசிய பேரங்களும் அமைகின்றது. மக்கள் கிளர்ச்சியின் பின் மக்கள் மத்தியில் ஒரு மாற்று தலைமையின்மை என்பதால், ஏகாதிபத்தியம் இதை ஜனநாயகத்தின் குரலாக காட்டி அதை அறுவடை செய்கின்றது.

மக்களின் தலைமை என்பது, பாட்டாளி வர்க்கக்தின் தலைமையாகும். இதுவல்லாத எதுவும் மக்கள் தலைமையை உருவாக்குவதில்லை. பாட்டாளி வர்க்க கட்சியை நீண்டகால நோக்கில் முன்னிறுத்தி மக்களை வழிநடத்தாத வரை, மக்கள் கிளர்ச்சிகளுக்கு தலைமையற்றுப் போகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு சாதகமான, அராஜகவாத நிலைமை உருவாகின்றது. இதை ஏகாதிபத்தியம் தனக்கு ஏற்ற, தலைமையாக மறுபடியும் மாற்றுகின்றது. கட்சியற்ற மக்களின் புரட்சியை முன்தள்ளும் அனாகிஸ்ட்டுகளின் வழிமுறைக்கும், அதன் இறுதி அரசியல் விளைவுக்கும், அரபுலகின் இன்றைய கிளர்ச்சி மறுபடியும் ஒரு அரசியல் எடுத்துக்காட்டு.

அரபு உலகம் என்றால் மதமும், மத அடிப்படைவாதமும் என்று காட்டுகின்ற அனைத்தையும், இந்த மக்கள் கிளர்ச்சி தவிடு பொடியாக்கியிருகின்றது. மேற்கு முன்தள்ளும் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்தையும், அரபுலகம் என்றால் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சாரங்களையும் மையப்படுத்திய அரசியல் முன்னெடுப்பை, மக்கள் தம் இந்தக் கிளர்ச்சி மூலம் தகுந்த பதில் கொடுத்துள்ளனர். இந்த எல்லைக்குள் இடதுசாரியம் பேசியதும், வர்க்க அடிப்படையில் மக்களை திரட்டாத ”கம்யூனிச” பித்தலாட்டங்கள் அனைத்தும் பொய்யானது என்பதை இந்த கிளர்ச்சி பதிலளித்துள்ளது. மக்கள் தமக்கான ஒரு தலைமையை தேடுகின்றனர் என்ற உண்மையை, இது முகத்தில் அறைந்து கூறுகின்றது. அரபுலகில் மக்களின் எழுச்சி, இதைத்தான் உலகுக்கு தெளிவாக பறைசாற்றியுள்ளது.

பி.இரயாகரன்

11.02.2011


பி.இரயாகரன் - சமர்