தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது,  இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால்  அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை  விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

1991 ஜெயின் டயரி – ஹவாலா ஊழல்

1991-இல் தில்லியில் தற்செயலாகப் பிடிபட்ட ஹவாலா தரகன் ஜே.கே. ஜெயினிடம் அவன் இலஞ்சக் கணக்கு எழுதிவைத்திருந்த டைரி பிடிபட்டது. இன்று ஸ்பெக்ட்ரம்-ராடியா விவகாரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரசு, பாஜக தலைவர்களின் இரகசியங்களைக் கசியவிட்டு, ‘எல்லோரும் திருடர்கள்தான்’ என்று நிரூபிக்க முயல்வதைப் போலவே, அன்று பல்வேறு ஊழல்களில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த பிரதமர் நரசிம்ம ராவ் ஜெயின் டயரியைக் கசியவிட்டார். கமிஷன் பெற்றவர்களின்  பட்டியலில் 115 பேர் இருந்தனர். ரூ.68 கோடி வரை கமிஷன் தரப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவிலால், அத்வானி, சுக்லா எனப் பெருந்தலைகள் எல்லாம் இந்த ஊழலில் கை நனைத்திருந்தனர். சட்டப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி 1997 ஏப்ரலில் அத்வானிக்கும் சுக்லாவுக்கு எதிரான  வழக்கு தள்ளுபடியானது. பின்னர் அனைவருமே சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

1992 அர்சத் மேத்தா ஊழல்

ஒவ்வொரு அரசுடமை வங்கியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு அரசாங்கப் பத்திரமாக மாற்றி வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. தரகர்கள் வழியாக வாங்கப்படும் இந்தப் பத்திரங்களுக்கு வங்கிகள் வழங்கும் அத்தாட்சி ரசீதை, முப்பது நாள் அவகாசத்துக்குள் வங்கிகளில் பிணையாக வைத்துப் பொதுமக்கள் பணத்தைக் கடனாகப் பெற்ற பங்குச் சந்தைத் தரகரான அர்சத் மேத்தா, பங்குச் சந்தையில் சூதாடி கோடிகோடியாகச் சுருட்டியதுதான் இந்த ஊழலாகும். வங்கி அதிகாரிகளும் ஓட்டுக்கட்சிகளும் பெரும் தரகு முதலாளிகளும் மேத்தாவைப் பினாமியாகக் கொண்டு நடத்திய இக்கொள்ளையில் ஏறத்தாழ ரூ.2500 கோடிக்கு மேல் சுருட்டப்பட்டது. அர்ஷத் மேத்தாவுக்கு எதிராக 72 கிரிமினல் வழக்குகளும், 600-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மற்ற வழக்குகள் ஆமை வேகத்தில் வழக்குகள் நகர்ந்து கொண்டிருக்கும்போதே 2002-இல் மேத்தா மரணமடைந்தான்.

1995 ரிலையன்சின் போலிப் பத்திரங்கள்

ரிலையன்சு ரூ 1.06 கோடிக்குப் போலிப் பங்குகளை வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்றது கண்டறியப்பட்டதால் மூன்று நாட்களுக்கு ரிலையன்சின் பங்கு வர்த்தகம் பம்பாய் பங்குச் சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல அரசு நிறுவனமான ’யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’வுக்கு 47 கோடி ரூபாய்க்கு போலிப் பங்குகளை ரிலையன்சு விற்றிருந்ததும் தெரியவந்தது.  உடனே கொதித்தெழுந்த அம்பானி, பம்பாய் பங்குச் சந்தையில் இருந்து விலகி தில்லிச் சந்தையோடு இணையப் போவதாக மிரட்டினார். உடனே பம்பாய் சந்தை சமரசப் பேச்சு நடத்தி அம்பானிக்குப் பணிந்தது.

1996 காலணி ஊழல்

1982 முதல் மராட்டிய கூட்டுறவுச் சங்க காலணித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25000 கடனாக வழங்கப்பட்டு வந்தது. நொடித்துப் போன சங்கங்களை மோசடி – தில்லுமுல்லுகள் மூலம் அதிகாரிகள் துணையோடு பெருமுதலாளிகள் கைப்பற்றி, போலியாக தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டி கடன்களைச் சுருட்டினர். ஆண்டுதோறும் ரூ 500 கோடி வரை இவ்வாறு சுருட்டப்பட்டது. தாவூத் ஷூ, மெட்ரோ ஷூ, மிலானோ ஷூ முதலான கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளும் சிட்டி பேங்க், மராட்டிய மாநில நிதிக் கழகம், ஓமன் வங்கி, பஹ்ரைன் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் உயரதிகாரிகளும் குற்றப்பத்திரிக்கையில்  சேர்க்கப்பட்டுள்ள போதிலும், 15 ஆண்டுகளாகியும் வழக்கு இன்னும் நகரவேயில்லை.

1997 சி.ஆர்.பி. நிதி நிறுவன ஊழல்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கிய சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தின் தலைவரான சி.ஆர்.பன்சாலி, போலி ஆவணங்கள் – போலி நிறுவனங்களின் பெயரால் முத்திரைத் தாள் தயாரிப்பதில் திறமைசாலி. இதனையே மூலதனமாகக் கொண்டு சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தைத் தொடங்கி, பங்கு பத்திர வியாபாரத்தை நடத்தினான். அடிமாட்டு விலைக்கு மொத்தமாகப் பங்குகளை வாங்கி, விற்பதென்பது இவனது தொழில் உத்தி. பன்சாலியின் முறைகேடுகளைப் பற்றி பங்கு பரிமாற்றக் கழகம் முன்னரே அறிந்திருந்தபோதிலும் சி.ஆர்.பி.யை அங்கீகரித்தே வந்தது. ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கே. சின்ஹா, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த நம்பிக்கையில் பங்குகளை வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு 1997-இல் பட்டை நாமம் சாத்தி ரூ.1200 கோடியை பன்சாலியும் அவனது கூட்டாளிகளான பெருமுதலாளிகளும் அதிகாரிகளும் சுருட்டினர். 1997-இல் கைதான பன்சாலி  மூன்று மாதங்களைச் சிறையில் கழித்துவிட்டு, பிணையில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டான்.

2001 கேதான் பரீக் மோசடி

கேதான் பரீக் எனும் பங்கு சந்தைத் தரகன், பிரபலமான  10 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்(கே10) பங்குகளை 2000-வது ஆண்டில் வாங்கிக் குவித்ததன் மூலம் பங்குகளின் விலை மடமடவென உயர்ந்தன. “கே10″ பங்குகளை ஊதிப் பெருக்குவதற்காக 4 அந்நிய நிதி நிறுவனங்கள் பரீக்குடன் சேர்ந்து கொண்டு, ரூ 1,47,000 கோடி ரூபாயை பரீக் நடத்திய ஊக வணிகத்தில் முதலீடு செய்து, பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாகச் சுருட்டின.  2001-இல் டாட்.காம் வீழ்ச்சியின்போது மும்பை போட்டித் தரகர்கள் “கே10″ பங்குகளைக் கொத்துக் கொத்தாக விற்று விலையை வீழ்த்தினர்.

இச்சரிவைத் தடுத்து நிறுத்த பல்வேறு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனாகக் கொடுத்தன. இக்கடன்களுக்குப் பிணையாக பரீக் கொடுத்திருந்த பங்குப் பத்திரங்கள் சந்தை வீழ்ச்சியால் வெறும் காகிதமாகிப் போயின.  ரூ.4669.50 கோடிகளை கேதானின் பங்குகளில் முதலீடு செய்திருந்த யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா எனும் அரசுத்துறை பரஸ்பர நிதி நிறுவனம் இதனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நம்பிக்கையோடு யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் பணம் கரைந்து போனது. 1992-இல் ஏற்கெனவே கேத்தன் பரீக் செய்த வேறொரு ஊழல் விசாரிக்கப்பட்டு 2008-இல் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2001-இல் செய்த ஊழல் விசாரணை இன்னும் முடியவில்லை. 2017 வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் இவனுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், கேத்தான் பரீக் இன்னமும் பங்குச்சந்தையில் சூதாடுவதாகக் கூறியிருக்கிறது செபி.

2003 போலிப் பத்திர ஊழல்

பத்திரங்கள் விற்பனையாளனான தெல்கி என்பவனுடன் அரசு அச்சுக்கூடத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் சேர்ந்து நடத்திய மோசடி இது. அரசு அச்சகத்தில் இருந்து பழைய அச்சு எந்திரம், அரசு அச்சகத்தின் தொழில்நுட்பங்கள்,இறக்குமதி செய்யும் காகிதம், மை, அச்சிடப்போகும் பத்திரத்தின் எண்வரிசை என அனைத்தும் தெல்கிக்காகக் கடத்தப்பட்டது. 9 மாநிலங்களில் விற்பனை வலைப்பின்னலை உருவாக்கி போலிப் பத்திரங்களை விற்றதோடு, ஒரிஜினல் பத்திரங்களுக்குச் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, இக்கும்பல் வியாபாரத்தை விரிவுபடுத்தியது.

இந்த விசயம் மெதுவாகக் கசிந்து 2001-இல் கர்நாடக போலீசு தெல்கியைக் கைது செய்த போதிலும், அவனது வியாபாரம் சிறைக்குள் இருந்தபடியே தொடர்ந்தது. அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி போட்ட பொதுநல வழக்குக்குப் பின்னர்தான் தெல்கியின் ஊழல் அவசரமாக விசாரிக்கப்பட்டது. தெல்கியிடமிருந்து 90 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவனுக்குத் துணையாக இருந்த போலீசு இணை கமிஷனர் சிறீதர் வாக, மும்ப நகர போலீசு கமிஷனர் ஆர்.எஸ். சர்மா, தமிழக போலீசு உயரதிகாரி முகம்மது அலி போன்ற பெருந்தலைகள் கைதாகினர். இவர்கள் விற்ற போலிப் பத்திரங்களின் மதிப்பு ரூ.30,000 கோடி. ஆனால், 53 லட்சம் பெறுமானமுள்ள பத்திரத் தாள்களை மட்டுமே கைப்பற்றியதாக பெயருக்கு ஒரு வழக்கு கர்நாடகத்தில் போடப்பட்டது. பிற மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என  2010-இல் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

2009 சத்யம் மோசடி

சர்வதேச அளவில் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகத்திற்கான “தங்க மயில்” விருது பெற்ற சத்யம் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு,  தன் நிறுவனத்திற்கு ரொக்க சேமிப்பு ரூ.5040 கோடி இருப்பதாக 2001 முதல் பொய்க்கணக்கு காட்டி, முதலீட்டாளர்களைக் கவர்ந்து பத்து ரூபாய் மதிப்புள்ள பங்கினை ரூ 188.70-க்கு உயர்த்தி, பங்குகளில் பெரும்பகுதியை விற்று  2003 டிசம்பர் முதல் 2007 மார்ச்சுக்குள்  ரூ.1252 கோடியைச் சுருட்டினார். உண்மையில் அந்நிறுவனத்திடமிருந்த கையிருப்பு ரூ.320 கோடிதான்.

கணக்கு காட்டிய 5040 கோடிக்கும், 320 கோடிக்குமான இடைவெளியை நிரப்ப, தனது மகன்கள் பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றை சத்யம் ரூ.7000 கோடி கொடுத்து விலைக்கு வாங்குவதாக செட்டப் செய்தார். அதாவது, இல்லாத ரொக்கத்தை கொடுத்து இரண்டு கம்பெனிகளை வாங்கியதாகக் காட்டி மோசடி செய்வதே ராஜுவின் திட்டம். சில முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் தில்லுமுல்லுகள் வெளியாகி கைது செய்யப்பட்டார். இவரது கள்ளக் கணக்குக்குத் தணிக்கை சான்றிதழ் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கழுத்தறுக்கத் துணை நின்றது பிரபல பன்னாட்டு தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜூ, தனது மோசடிக்கு ஆதாரமான ஆவணங்களை அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுப் பின்னர்தான் கைது செய்யப்பட்டார். சொகுசு மருத்துவமனையில் ‘சிறைவாசம்’ புரிந்த ராமலிங்க ராஜுவுக்கு பிணையும் வழங்கப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது.

2010 கேதான் தேசாய் கொள்ளை

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரது வீட்டிலிருந்து ரூ.1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கீகாரமளிப்பதற்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி லஞ்சம் வாங்கியதுடன், நாட்டிலுள்ள 200 சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 சீட்டுகளை ஒதுக்கீடாகப் பெற்று அவற்றை இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்துள்ளான் தேசாய். 2010 ஜூனில் பிணையில் வந்த இந்த கிரிமினலை, 2010 நவம்பரில் குஜராத் பல்கலைக்கழகம் தனது செனட்டிற்குத்  தேர்ந்தெடுத்தது.

- இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவை தவிர 1996-இல் நடந்த நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவின் யூரியா ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல், அண்மையில் நடந்துள்ள ஆதர்ஷ் ஊழல்.. எனத் தொடரும் ஊழல்களையும், மாநில அளவில் நடைபெற்றுள்ள  ஊழல்களையும் பட்டியலிட பக்கங்கள் போதாது. இவற்றில் பங்குச்சந்தை, போலிப்பத்திரங்கள், ஹவாலா மற்றும் நிதிநிறுவன ஊழல்கள் போன்றவை தாராளமயக் கொள்கைகளின் நேரடி விளைவுகள். கேதான் தேசாய், காலணி ஊழல் போன்றவை தனியார்மயத்தின் விளைவுகள்.
__________________________________________

-  அப்துல்லா, புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011
__________________________________________