Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர்.

 தமது இழிவான, சீரழிவான, பிழைப்புவாத, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தைகளை, இதன் மூலம் கவர்ச்சிப்படுத்த முனைகின்றனர்.

 

ஒரு சமூக இயக்கத்தில், ஒருவனின் செயற்பாடு என்பது வெளிப்படையானது. இப்படியிருக்க, இந்த சமூக இயக்கத்துடன் எப்படி இணைந்து நின்றான் என்று அவர்களால் நேர்மையாக சொல்ல முடிவதில்லை. அதைச் சொல்லும் எந்த தகவலும், மரணத்தையே வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட கிடையாது. மாறாக பொய்யாக, பிழைப்புவாத புலமையைக் கொண்டு சிலாகிப்பதே இவர்களின் வியாபார அஞ்சலியாகின்றது. சொற்களைக் கொண்ட வெற்று வார்த்தைகளால், மரணித்தவரை மகுடம் சூட்டும் புல்லுருவித்தனமான அரசியல் தான், மரண நிகழ்வுகளின் போது அரங்கேறுகின்றது.

 

அண்மையில் பராவின் மரண நிகழ்வும் இப்படித் தான், இதற்குள் தான் நிகழ்ந்தது. கிறிஸ்துவ போதகர்கள், இலங்கை இந்திய அரசின் கூலிக்கும்பல்கள் உட்பட, போலி மார்க்சியவாதிகள் வரை, அவரின் மரணத்தை தமது சொந்த இழப்பு என்று ஒப்பாரி வைத்தனர். இப்படி பிழைப்புவாத சந்தர்ப்பவாத புலம்பல், ஒரு மனிதனின் மரணத்தைக் கூட வியாபாரமாக்கியது.

 

மனித சமூகத்தையே இழிவாடி வாழ்கின்ற பல பொறுக்கிகள், பொதுவாழ்வுடன் தொடர்புடையவர்களின் மரண நிகழ்வுகளில் கூடுகின்றனர். அங்கே அரோகரா போட்டு கும்பலாகவே சாமியாடுகின்றனர்.

 

ஒரு மரணமும் ஏற்படும் சோகமும், துயரமும் விற்பனைக்குரிய ஒரு சரக்கல்ல. ஆனால் அதை விற்பனைக்குரிய பொருள் என்று கூறுகின்ற வகையில் தான், அனைவரும் கூடி நின்று வியாபாரமாக்குகின்றனர்.

 

ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ், புளட் என்று, மக்களுக்கு எதிரான எல்லாக் கூலிக் குழுக்களும் பராவின் மரண நிகழ்வில் கூடினர். போட்டா போட்டி போட்டுக் கொண்டு, அஞ்சலிகள், மதிப்பீடுகள். வானொலியில் நேரடி ஒலிபரப்பு என்று, விதவிதமான எத்தனையோ அரசியல் நாடகங்கள்.

 

இவர்களுடன் இலக்கியம் என்ற பெயரில் இழிந்து போன கழிசடைகள் எல்லாம் சேர்ந்து, மரணத்தையே ஒரு முழு வியாபாரமாக நடத்தினர். இப்படி எந்த விமர்சனமும், சுயவிமர்சனமுமற்ற, மக்கள் விரோத அரசியல் அரங்கேறியது.

 

நாம் அவரைப் பற்றி எழுதிய போது, விமர்சனத்தையும் குறிப்பாக்கி சுட்டிக்காட்டிச் சென்றோம். அது அவர் பற்றிய முழுமையான விமர்சனமல்ல எனச் சிலர், எம்மிடம் விமர்சனத்தை வைத்துள்ளனர். நாம் சாதக பாதக அம்சங்களைப் பார்க்க முனைந்தோம். புலியல்லாத தளத்தில் இரண்டு படுபிற்போக்கான அரசியல் போக்கையும் எதிர் கொண்ட பரா, சந்தர்ப்பவாத நடுநிலை எடுத்து இருந்தார். தனக்கென்ற ஒரு தனித்துவமான அரசியலை முன்வைக்கத் தவறி அதே நேரம், முழுமையாக அப்போக்குகளை தழுவுவதை எதிர்த்து நின்றார். இதையே நாம் குறிப்பான விமர்சனம் மூலம், சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த வகையில் இது ஒரு மயக்கத்தையும், தெளிவற்ற மலினத்தையும் உருவாக்கிவிட்டதாக கருதுகின்ற விமர்சனம் இருக்கும் என்றால், அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

 

மரணம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பது இயற்கையானது. ஆனால் அதை பலரும் மறுத்து, அரசியல் வியாபாரமாகச் செய்கின்ற போது, எமது விமர்சனத்தின் வீச்சு போதாமை உணரப்படுகின்றது.

 

அவரின் மரண நிகழ்வே, அவரைப்பற்றி அம்பலமாக்கிவிடுகின்றது. அவருக்கு என்று ஒரு கருத்து இருக்கவில்லை. அவர் எல்லாமாக இருந்தார். மரணத்தினக் பின் அப்படித் தான் அரங்கேறியது. அவருக்கு பிடித்த கிறிஸ்துவ பாட்டு, அவருக்கு பிடித்த சினிமா பாட்டு, அவருக்கு பிடித்த நாட்டுப்புறப்பாட்டு எல்லாம் பாடினர். அவரின் இந்த விருப்பு சார்ந்த அரசியலுக்குள் கொண்டாடப்பட்டது. இதை செய்யும் உரிமையைக், கொண்டு, அவரவர் இதை அரங்கேற்றினர். கிறிஸ்துவ பாதிரியர் கூட பாட்டுப்பாடி, மரணத்தை வியாபாரமாக்கினார். இந்தப் பரா, எப்படி மார்க்கிசவாதியாக இருக்க முடியும்? சிவப்புக்கொடியை போர்த்துவதால், அவரின் செயற்பாடுகள் மார்க்சிமாகிவிடுவதில்லை.

 

இப்படித்தான் பராவின் அரசியல் என்பது, சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. தனக்கென்று ஒரு கொள்கையை முன்னிறுத்தி, அதற்காக அவர் உறுதியாக போராடியது கிடையாது. இதனால் அவர் கோட்பாடற்ற எல்லாமாகி, எல்லோருமாக்கினார். தனிப்பட்ட நட்பு முதன்மை பெற, அரசியலோ விபச்சாரமாகியது.

 

அவரின் தனிப்பட்ட பண்பு சார்ந்த நட்பான அணுகுமுறை, கடுமையான தர்க்கங்களின் பின் கூட அவருடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியது. அந்தளவுக்கு அவரின் நட்பு சார்ந்த பண்பு பலமாக இருந்தது. கருத்து சார்ந்த வர்க்கப் பண்பு பலமற்றதாக இருந்தது. விளைவு பிற்போக்கு அரசியலுக்கு ஏற்ப அனைவரினதும் நண்பராகினார்.

 

புலம்பெயர் இலக்கிய சந்திப்புக்குரிய 20 ஆண்டு காலத்தின் மொத்த சீரழிவுக்கும், இவர் மிகமுக்கியமான பொறுப்பாளி என்பதே மற்றொரு உண்மை. அது எந்த மக்கள் இலக்கியத்தை படைத்ததும் கிடையாது. இலக்கியத்தின் பெயரில் கதைத்தும், குடித்தும், கூத்தடித்தும், கும்மாளமடிக்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகினர்.

 

இப்படி தமக்கென்று ஒரு சமூகப் பொறுப்பு சுமத்தப்பட்டு இருந்ததை அடியோடு நிராகரித்தனர். சமூக அக்கறை கொண்டோர், இவர்களால் எள்ளிநகையாடப்பட்டனர். இந்த 20 வருடத்தில் தான், பல தரப்பாலும் தமிழ் இனம் அழிக்கப்பட்டு, அவர்கள் சீரழிக்கப்பட்டு வந்தனர். இவர்களோ கண்ணை அந்த பக்கம் திறக்கவில்லை. அரசியல் பேசாத, பேசக் கூடாத இலக்கிய சந்திப்பாக்கினர்.

 

மனித அவலம் நிறைந்த இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இதற்கு எதிராக, என்ன பணியை சமூக அக்கறையுடன் ஆற்றினான் என்பது மிக முக்கியமானது. அது எதையும் இவர்கள் எடுத்த வைக்க முடியாது. படுபிற்போக்கான அரசியல் போக்குகளில் பின்னால் நிற்பது அல்லது வம்பளந்து பொழுதுபோக்குவதுமாக, புலியல்லாத அரசியல் தளத்தை சிதைத்தவர்கள் இவர்கள். உண்மையில் தமிழ் மக்களின் வாழ்வு மண்ணில் எப்படி பலரால் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதோ, அதையே இவர்கள் அவர்களுக்கு சார்பாக கோட்பாட்டுத்தளத்தில் செய்தனர்.

 

புலியல்லாத இலக்கியம் என்பது படிப்படியாக மார்க்சியதுக்கும், இடதுசாரியத்துக்கும் எதிராக மாறியது. இலக்கியச் சந்திப்பும், அதன் வாரிசுகளும் வலதுசாரி கடைக்கோடியில் நின்று வம்பளந்தனர். இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தவர்கள், அரசு பணத்தை இதன் பெயரில் பெற்றவர்கள், பாலியல் ரீதியாக அதில் உள்ள பெண்களை புணர்ந்தவர்கள் முதல் குடியில் மிதப்பது வரை பலவாக அது சீரழிந்தது. இதை எல்லாம் பரா ஏற்றுக்கொண்டு, சகித்துக் கொண்டு, அதை அனுசரித்துக் கொண்டு, அதைக் கொண்டோடியவர். ஒரு சந்தர்ப்பவாதியாக பிழைப்புவாதியாகவே இருந்தவர். இதை எதிர்த்து, அவர் போராடவில்லை.

 

மார்க்சியத்தின் மீதான அவரின் விருப்பு என்பது, சந்தர்ப்பத்துக்கு ஆட்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. அனைத்தும் தனிப்பட்ட நட்புக்கு உட்பட்டதாகியது. வர்க்க அடிப்படையில், சமூகத்தை நிகழ்ச்சி நிரலை அணுகியது கிடையாது.

 

புலம்பெயர்வுக்கு முந்தைய அவரின் கடந்தகால தொழிற்சங்கச் செயல்பாடுகள், அனுபவங்கள் இடதுசாரி தன்மை வாய்ந்தவையாக இருந்தது. ஆனால் அது தொழிற்சங்கங்களின் தவறுகளை உள்ளடக்கியதே. அவருக்கு தெரிந்த இதை எங்கும் மீளமீள முன்வைக்கும் போது, அவரை இடதுசாரியாகவே எப்போதும் காட்டியது. இடதுசாரியம் மீது காறித்துப்பும் புலியல்லாத மாற்றுத்தளத்தில், பரா இதை மீளமீள முன்வைத்தது என்பது மட்டும் தான் அவரை மதிப்பதற்கு ஒரே அடிப்படையாக இருந்தது. அதற்கு வெளியில் அவருக்கு எதுவும் தெரியாது. மறுபக்கத்தில் அவரின் கருத்துக்களை வெறும் அலட்டலாகவே இலக்கிய குஞ்சுகள் எடுத்தனர். இன்று அவர்கள் தான், அவரை உச்சிமோந்து தமது அரசியலுக்கு ஏற்ப அவரை விற்பனை பொருளாக்கியுள்ளனர்.

 

இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கவாதத்தை பரா முன்வைத்த போதும், அவர் மார்க்சிய அடிப்படையைப் புரிந்து கொண்டவரல்ல. அனுபவவாத அரசியலாகவே அது எப்போதும் வெளிப்பட்டு வந்தது. இதனால் இடதுசாரி சிந்தனை முறையில் நின்று, சமூகத்தை, சமூகப் போக்குகளை இனம் காணவும், வழிகாட்டவும் முடியவில்லை. இதனால் அவர் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தியவரல்ல. தொழிற்சங்கவாத அணுகுமுறையுடன் கூடிய தனிப்பட்ட நட்பு அரசியலை முன்னெடுத்து, ஒரு சந்தர்ப்பவாதியாகினார். இதனால் தான் அனைவரும் அவரின் மரணத்தில், அவரவர்களுக்கெனப் புடுங்கிக் கொள்ளும் வேட்டையில் இறங்கினர்.

 

இதனால் அவருக்கு எத்தனையோ முகங்கள். வலதுசாரிகள் முதல் கொலைகாரர்கள் வரை, அவரைப் போற்றினர். இப்படி அவர் எல்லாமாகவும் இருந்தார். தனக்கென்று ஒரு வர்க்க அரசியலை மட்டும் அவர் கொண்டிருக்கவில்லை.

 

 பி.இரயாகரன்
08.01.2007