Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எந்த ஒரு விடையத்தையும் தங்கள் குறுகிய அரசியலுக்கு ஏற்ப குறுக்கிக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால், உண்மை விடையம் திரிபடைந்துவிடும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். "கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள். ஈழ நிலவரம் இவ்வாறு இருக்க எஞ்சியிருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான். நீண்டகால அரசியல் நோக்கில் ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாகவும் இருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவுபடுத்தும் நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு." என்கின்றார் இனியொரு கட்டுரையாளர் அகில். இனியொரு சபா நாவலன் என்ன கூறுகின்றார் "தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று." என்கின்றார்.

இவர்கள் தொடர்ந்து சொல்ல வருவது எல்லை கடந்த இந்திய மீனவர்களினால், இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாகும்.

1. இது ஈழப் போராட்டத்துக்கு உதவிகரமானது.

2. எல்லை கடந்த தமிழக மீனவர்கள் என்ற வர்க்கமற்ற தங்கள் இனம் சார்ந்த இனவாதக் கொள்கை, பன்நாட்டு மீன்பிடிக்கு எதிரானது.

3. சிங்கள மீனவர்கள் இலங்கை தமிழர்களின் கடல்களில் மீன்பிடித்தல் என்பது, இலங்கை தமிழருக்கு எதிரானது. தங்கள் மீன்பிடித்தல் என்பது அப்படியல்ல. அப்படி இனவாத அளவுகோல்களை முன்னிறுத்திய தர்க்கங்கள்.

 

 

 

அதேநேரம் சுய முரண்பாட்டுடன், தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிப்பதில்லை. இந்திய மீனவர்கள் எல்லைகடந்து மீன்பிடியைக் கோரவில்லை என்கின்றனர். எல்லை கடந்து இலங்கைக் கடற்படை இந்தியக் கடலில் சுடுவதைத்தான் தாங்கள் இதில் காண்பதாக கூறுகின்றனர். அதேநேரம் நீர் ஓட்டத்திலும், எல்லை தெரியாது தான் இந்திய மீனவர்கள் எல்லை கடக்கின்றனர் என்கின்றனர். இப்படி முழுமையை திரித்தும், இனவாத எல்லைக்குள் ஒன்றைச ஓன்று சார்ந்த குறுகிய விளக்கங்கள் மூலம், அதை முழுமையான ஒன்றாக காட்ட முனைகின்றனர். இனவாதிகளும், மார்க்சிய லெனினிய வாதிகளும் ஓன்றை ஓன்று வினவாது மூடிமறைத்து, மீனவர் பிரச்சனையை இனவாத எல்லைக்குள் வர்க்கமற்ற ஒரு விடையமாக காட்டி திரிக்க முனைகின்றனர்.

முக்கியமான விடையம் இந்திய எல்லையின் மீன்வளத்தை அழித்தது யார்? சிறு மீனவர்களின் வாழ்வை நாசமாக்கியவர்கள் யார்? தமிழக மீனவர்களின் படுகொலையின் பின்னணியில், இந்திய பெருமூலதனத்தின் (மீன்பிடி மூலதனம் உள்ளடங்க) நலன் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? இந்திய அரசின் மீன்பிடிக் கொள்கைக்கும், அவர்களின் கொள்கைக்கும் இடையில் முரண்பாடு உண்டா?

வர்க்க ரீதியாக இந்திய மீனவர்கள் பிளந்திருக்க, அவர்களின் கோரிக்கைகள் முரண்பட்டு நிற்க, தமிழன் என்ற பொது அடையாளத்தின் கீழ் வர்க்கமற்ற கோரிக்கையை முன்னிறுத்துவது ஒடுக்கப்பட்ட மீனவர்களுக்கு எதிரானது. இது இலங்கை சிறு மீன்பிடி மீனவர்களுக்கு எதிரானது. இந்திய மீன்வளத்தை அழித்து சிறு மீனவர்களின் வாழ்வை சிதைத்து அழித்து கொழுத்த மூலதனத்தை கொண்ட இந்திய மீன்பிடிதான், இன்று எல்லை கடந்து இலங்கை மீன் வளத்தை அழிக்கின்றது. பன்னாட்டு மீன்பிடி, தமிழக சிறு மீன்பிடியை அழிக்கவில்லை. இந்திய பெரு மூலதனத்தைக் கொண்ட இந்திய மீன்பிடிதான், தமிழக சிறு மீன்பிடியை முதலில் அழித்தது. எல்லை கடந்த மீன்பிடியில் இவர்களின் பங்கும், அதன் கோரிக்கையும், இந்திய அரசு சார்ந்தும், தமிழக இனவாதம் சார்ந்தும் தன்னை முன்னிறுத்துகின்றது. இது இந்திய - இலங்கை சிறு மீன்பிடிக்கு எதிரானது.

அதேநேரம் பன்நாட்டு மீன்பிடி, யுத்தத்தின் பின் உட்புகுகின்றது. இது இலங்கைக் கடலில், இந்திய பெரும் மூலதனம் சார்ந்து, பன்நாட்டு மீன்பிடியாக வருகின்றது. பன்நாட்டு நிறுவனம் பற்றி பேசிக்கொண்டு, இந்திய பெருமூலதனம் அதுவல்ல என்று மறுப்பதில் இனவாதம் முதன்மை பெறுகின்றது. பெரும் மூலதனம் கொண்ட மீன்பிடி இலங்கைக்குள் புகும் போது, அதுவும் பன்நாட்டு மீன்பிடிதான். பன்நாட்டு மீன்பிடி பெரும் மூலதனத்தாலானது. இது மேற்கு சார்ந்ததாக இருக்கவேண்டியதில்லை. தென்கொரியா, இந்தியா, சீனா… என்ற பெரு மூலதனங்களைக் கொண்டதாக இவை இருக்கின்றது.

அடுத்த வாதத்தையும் தர்க்கத்தையும் பார்ப்போம்;. இங்கு மீண்டும் ஈழப்போர் என்ற புலி நோக்கில் நின்று, மீனவர் பிரச்சனை திணிக்கப்படுகின்றது. "ஈழப் போராட்ட"த்தை ஈழ மக்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று நடத்தவில்லை. அது ஈழ மக்களுக்கு எதிரான உழைப்பில் இருந்து அன்னியமான அராஜகவாதக் குழுக்களால், அன்னிய சக்திகளின் துணையுடன் அவர்களின் தேவையுடன் நடத்தப்பட்டது. இதுதான் உண்மை. இப்படி ஈழப்போராட்டத்தை அழித்தவர்களுடன் கூடி கூச்சல் எழுப்பி நின்றவர்கள் நீங்கள். மக்களுக்காக என்றும் குரல் கொடுத்தது கிடையாது. இப்படியிருக்க "கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள்" என்று, இலங்கை அரசை மட்டும் குற்றம் சாட்டுகின்றீர்கள். நீங்கள் யார்? இதில் உங்கள் பங்கு என்ன? உண்மையில் நாதியற்ற இன்றைய நிலையை உருவாக்கியவர்கள் புலிகள்தான். புலிகளின் பின் நின்று, மக்கள் விரோத கூச்சல் எழுப்பிய கூட்டமும் நீங்களும் தான், இலங்கை தமிழ் மக்களை நாதியற்ற நிலைக்கு தள்ளியவர்கள், இன்று மீனவர்களை இனவாதம் மூலம் நாதியற்ற நிலைக்கு தள்ளிச் செல்லுகின்றனர்.

புலிகள் என்ற மக்கள் விரோத துரோக இயக்கம், தமிழ் மக்களைச் சார்ந்து நின்றது கிடையாது. அவர்களிள் அன்றாட உழைப்பு சார்ந்து தங்களை இணைத்துக் கொண்டது கிடையாது. தமிழ் மக்களை ஓடுக்கி, அவர்களின் உழைப்பை பிடுங்கித் தின்ற கூட்டம், உழைப்பின் வளத்தையே சூறையாடினர். அதை மூடிமறைக்க, வெறும் இனவாத யுத்தத்தை முன்னிறுத்தினர். இந்த இனவாத குறுகிய அழிவுயுத்தம் தான், புலிகளின் மக்கள் விரோதத்தை மூடிமறைக்கும் அங்கியாகியது. மக்களை சார்ந்து அவர்களின் சமூக பொருளாதார அரசியல் நலனை முன்னிறுத்தாத நிலையில், தமிழக மீனவர்கள் "ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாக" வும் எப்படி இருந்திருக்க முடியும். இங்கு கடத்தல்காரர்களும், யுத்தத்தை சார்ந்து வளர்ந்த வியாபாரிகளும் தான், புலிகளுடன் கடலில் வியாபாரம் செய்தனர். கடத்தல்காரர்களும், யுத்த வியாபாரிகளும், மீனவர் போர்வையில் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து நடத்திய மாபியா வியாபாரம், தமிழக மீனவர்களின் அன்றாட பிழைப்பையும் உயிர் வாழ்வையும் கேள்விக்குள்ளாகியது. இதில் சில அரசியல்வாதிகளும் பங்குபற்றினர். சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நடத்திய வியாபாரம் போன்றது. இதில் எல்லைப் புற மக்களும், காட்டை நம்பி வாழ்ந்த அப்பாவி மக்களும், இந்தியப் பொலிசின் வன்முறைக்கும் படுகொலைக்கும் உள்ளான விடையத்துக்கு ஓத்தது. இந்திய காடுகளை பன்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு பெரு மூலதனத்துக்கும் தாரை வார்க்கின்ற நிகழ்வு இங்கு பொருந்தும்.

1983 களில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை, இந்திய நலன் சார்ந்த ஆயுதப் பயிற்சியாகவும் கூலிக் குழுக்களாகவும் மாற்றியது. இதே போல் தான் தமிழக மீன்பிடியை பயன்படுத்தி, தமிழக கடத்தல்காரர்களும், யுத்த வியாபாரிகளும், இனவாத அரசியல்வாதிகளும், புலிகளுடன் சேர்ந்து இலாபம் ஈட்டும் தொழில் செய்தனர். இது மீனவர்களின் வாழ்வை அழித்ததுடன், பலரின் உயிரைப் பலிகொண்டது. மக்கள் நலன் சார்ந்த, மீனவர் நலன் சார்ந்த கொள்கையை புலிகள் என்றும் எங்கும் கொண்டிருக்கவில்லை. இது இலங்கை முதல் இந்தியா வரை பொருந்தும். புலிகளின் மக்கள் விரோத நலனும், தமிழக கடத்தல்காரர்களும், யுத்த வியாபாரிகளின் நலனும் "ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாக" வும் இருந்தது கிடையாது. இப்படியிருக்க அதை உந்து சக்தியாக காட்டுகின்ற தமிழினவாதிகளின் இன்றைய அரசியல், தொடர்ந்தும் மீனவர்களுக்கு எதிரானது.

"இலங்கையில் இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தெற்காசியாவில் புதிய மாற்றங்களோடு மேலெழும் என்பது தவிர்க்கவியலாத சமூகப் புறநிலை." என்று கூறும் சபா நாவலனின் கூற்று, மீனவர்கள் எல்லைகடத்தல் தென்னாசிய மாற்றங்களுக்கு அவசியமானது என்ற மறைமுகமான முழக்கம், குறுகிய இனவாதத்தைச் சார்ந்தது. தமிழக இலங்கை தமிழரை சார்ந்த குறுகிய (புலியிசம்) இனவாதம். சிங்கள மக்களும் கூட "இலங்கையில் இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில்" தான் வாழ்கின்றனர். இனவாதம் மூலம் மறுக்கின்ற இந்த உண்மை, இந்திய மேலாதிக்கத்தை பின்பக்கமாக திணிக்கின்ற குறுகிய அரசியல். தமிழ்பேசும் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை, சிங்கள மக்களுடன் இணைந்து முன்னிறுத்தும் வேலைத்திட்டத்தை மறுக்கின்ற இனவாதப் பித்தலாட்டம். "தெற்காசியாவில்" அதுவும் இலங்கையில் சிங்கள மக்களை எதிரியாக முன்னிறுத்துகின்ற அரசியல் வேலைத்திட்டங்கள்;, தமிழன் என்ற இனவாதத்தை காக்கின்றது.

இந்திய - இலங்கையின் கூட்டுச் சதியும், தமிழினவாத இனக் கூச்சலும் சேர்ந்து, இந்திய சிறு மீன்பிடியை இல்லாதாக்கின்றது. இந்திய பெரும் மூலதன மீன்பிடியை இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கின்ற நோக்கில், படுகொலைக்கு எதிரான இனவாதப் போராட்டம் குறுகிய கோசத்துக்குள் முடங்கிப் போகின்றது. இதை மூடிமறைக்க முன்தள்ளுவது தான் "ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவுபடுத்தும் நீண்டகால அரசியல் நோக்க"ம் என்று கூறி, இலங்கை இந்திய மீனவர்களின் முதுகில் குத்துகின்றனர்.

4. "இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழக மீன் பிடிச் சமூகங்களின் வாழ்வுரிமையையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்." என்பது முற்றிலும் தவறனது. மாறாக இது சிறு மீன்பிடியை மட்டும் பாதிக்கும். இந்திய பெரு மூலதனம் சூiறாடுவதற்கு ஏற்ற மீன்பிடிக் கொள்கையை தான், இந்திய இலங்கை அரசுகள் மீனவர்கள் மேல் திணிக்கும். "ஓட்டு மொத்தம்" என்பதினூடு வர்க்க மற்ற இனவாத அடிப்படைக்குள் இதைப் புகுத்துவது, ஒடுக்கப்பட்ட மீனவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான அரசியல் அடிப்படையைக் கொண்டது.

அடுத்து இந்திய இலங்கை அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் "ஒட்டு மொத்த தமிழக மீன் பிடிச் சமூகங்களின் வாழ்வுரிமையை" பாதிக்கும் என்பது எப்படி தவறோ, அப்படி இது முதலில் இலங்கை மீனவர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். இலங்கை கடலில் மீன்பிடிக்கும் உரிமை பற்றியதாக "இந்திய இலங்கை அரசுகள் எடுக்கும்" முடிவுகளாகும்;. அது பெரும் மூலதனத்துக்கு ஏற்ற கொள்கையாக இருக்கும் என்பது மிகத் தெளிவானது. இது பன்நாட்டு மூலதனத்தை மட்டுமல்ல, இந்திய பெரும் மூலதனத்துக்கும் ஏற்ற கொள்கையைதான் அமுல்படுத்தும்.

குறுகிய தமிழ் இனவாதம் இதையெல்லாம் பூசிமெழுகி "ஒட்டு மொத்த" தமிழக மீனவர்களைக் காட்டி, இலங்கை மீனவர்கள் தம்மால் பாதிக்கப்படவில்லை என்று காட்டி, பாதித்தால் அது சிங்கள மீனவர்களால் தான் என்ற இனவாதக் கதையை பல முனையில் சொல்லுகின்றனர்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

06.02.2011

 

1. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

2. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

 

 

.