"தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?" என்று தலைப்பிட்ட வினவு கட்டுரை, உள்ளடக்கத்தை குறுக்கிக் காட்டுகின்றது. இதே உள்ளடக்கத்தில் தமிழ் சிங்கள மீனவர்களின் மோதலா எனில் இல்லை. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ் - சிங்கள மக்கள் மோதலா எனின் இல்லை.

மோதல் மக்களின் வாழ்வுக்கு வெளியில் நடக்கின்றது. அவர்களின் கோரிக்கை அல்லாத தளத்தில் நடக்கின்றது. மக்களின் கோரிக்கையை தமது வர்க்க மற்றும் அரசியல் தேவைக்கு ஏற்ப குறுக்கியும் திரித்தும் முன்னிறுத்துகின்றனர்.

தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசும் சரி, அதைக் கண்டிக்கும் தமிழக தமிழ் தேசியமும் (புலித் தேசியமும்) சரி, சாராம்சத்தில் ஒன்றைத்தான் செய்கின்றனர். மீனவர்களின் நலனில் இருந்து இதை அணுகுவது கிடையாது. தங்கள் குறுகிய அரசியல் நோக்கில் இருந்து இதைத் திணிக்கின்றனர்.

 

 

 

படுகொலை எதிர்ப்பு அரசியலை, மீனவர்கள் நலன் அல்லாத அரசியல் தளத்தில் திணிக்கின்றனர். குறுகிய தமிழ் தேசியம் என்னும் புலித் தேசியத்தில் தான், இது குவியப்பட்டு இயங்குகின்றது. இதை வினவாதே என்பது வினவுவின் அரசியல் மட்டுமல்ல, அதையே சரியான உண்மைகள் கொண்டது என்றும் வழிகாட்டுகின்றனர்.

இப்படி ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவு, குறுகிய இனவாதத்தை வினவுவது கிடையாது. தமிழக ஈழ இனவாதிகளின் குறுகிய அரசியலுக்கு குடைபிடித்து, இனவாதத்தை வழிகாட்டுகின்றனர். இந்த வகையில் அவர்கள் தங்கள் கட்டுரையில் "இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில்." என்று தமிழக புலித் தமிழ் தேசியவாதி இனியொருவில் எழுதிய கட்டுரையை வழிகாட்டுகின்றனர். அந்தக் கட்டுரையோ பொய்களும், இனவாதத்தாலும் ஆனது. தமிழக மீனவர்களின் நலன் சார்ந்ததல்ல. படுகொலைகளை எதிர்த்தல் என்ற அடிப்படையைத் தாண்டி, மீனவர்களின் நலனில் இருந்து அணுகவில்லை. மாறாக தமிழக புலித் தேசியம் சார்ந்த குறுகிய தமிழ்தேசியம் சார்ந்த கண்ணோட்டத்தின் ஊடாக, இந்தப் படுகொலையை அணுகுகின்றனர். இதை வினவாத எல்லைக்குள், வினவுவின் அரசியல்.

தமிழக மீனவர்களின் கோரிக்கையில் ஒன்று, இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் அனுமதி பற்றியது. ஆம், அவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கும் அனுமதியைக் கோருகின்றனர். இது நீர் ஓட்டத்தில் சிக்கியும், எல்லை தெரியாது எல்லை கடந்து செல்லும் மீனவர்கள் பற்றிய விடையமல்ல. இலங்கைக் கடலில் மீன்பிடிக்க எல்லை கடக்கும் மீனவர்களின் விடையத்தில் இருந்து இது வேறானது. அது பற்றிய விவகாரமல்ல. அது உலகெங்கும் நடப்பதுதான். எல்லை கடந்து மீன்பிடிப்பதை திரித்துக் காட்டுவது, இட்டுக் கட்டுவது இனவாதிகளின் குறுகிய அரசியலாகும். இது இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு எதிரானது.

எல்லை கடந்து மீன்பிடித்தல், இலங்கை மீனவர்களைப் பாதிக்காதா? இந்தக் கேள்வியை எழுப்புவது இந்திய மீனவர்களை கொல்வது சரியென்ற அரசியல் அர்த்தத்திலல்ல. இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் எல்லை கடந்து மீன்பிடித்தல் தான் பிரச்சனை என்று கூறுவதால், அது பொய்யாகிவிடுமா? இலங்கைக் கடற்படை எல்லை கடந்தும் கொல்வதால், அது உண்மை அல்லவென்று ஆகிவிடுமா? கூறுங்கள்.

இலங்கைக் கடற்படை கொல்லுதல் என்பது, இலங்கை மீனவர்கள் நலனின் இருந்தல்ல. அதற்கு வேறு நோக்கம் உண்டு. குறிப்பாக கடந்த 30 வருட யுத்தத்தில், இந்தக் கடல் தான் யுத்தத்தின் போக்கை தீர்மானித்தது. யுத்தம் முடிந்த பின் அதைக் கட்டுப்படுத்தி கண்காணிக்க முனைகின்றது. இதனால் எல்லை கடந்த மீன்பிடித்தலை தடைசெய்ய விரும்புகின்றது. இந்தியா மூலம், அதை செய்யத் தூண்டுவதன் மூலம், இலங்கை தன் பாதுகாப்பை பலப்படுத்த முனைகின்றது. இந்தியா விரும்பியோ விரும்பாமலோ, இதை செய்யும் நிலைக்கு இன்று வந்துள்ளது. இந்தப் படுகொலைகள் மூலம்

 

1. எல்லை கடந்த இந்திய மீன்பிடியை தடைசெய்து, கண்காணிப்பை தன் கையில் எடுக்கும் படி இலங்கை நிர்ப்பந்தித்துள்ளது.

2. இதன் பின் அனுமதியின் (சிறப்பு வரி உள்ளடங்க) பெயரிலான எல்லை கடந்த பெரும் மூலதனத்தின் மீன்பிடியை, இருநாட்டு கண்காணிப்பின் கீழ் இலங்கைக் கடலில் அனுமதிக்க முனைகின்றது.

இந்த வகையில் மீன்பிடியில் பெருமூலதனத்தின் நலன் உள்ளடங்கிய வகையில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணமுனைகின்றது. இந்த ஏற்பாடுகளின் பின்தான், பன்னாட்டு மீன்பிடி இப்பிரதேசத்தில் புகும் வாய்ப்புகள் உண்டு. இங்கு

1. இதனால் தமிழக சிறு மீன்பிடியாளர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் இலங்கைக் கடலில் மீன்பிடிப்பது தடுக்கப்படும்.

2. இலங்கை மீன்பிடியை, இந்திய பெரும் மூலதனம் கொண்ட எல்லை கடந்த மீன்பிடி அழிக்கும்.

3. தடைசெய்யப்பட்ட மீன்பிடி, இலங்கையின் மீன்வளத்தையே அழிக்கும்.

4. எல்லை கடந்த மீன்பிடி சமூகத்திற்கு இடையில் உள்ள சமூக உறவுகள் அழிக்கப்படும்;.

இந்தப் படுகொலை மூலம் இலங்கை இந்திய அரசுகள், கூட்டாக அடைய உள்ள முடிவுகள் இதுதான். இது தமிழக சிறு மீன்பிடியையும், இலங்கை மீனவர்களையும் அழிக்கின்ற கூட்டு முயற்சியாகும்.

இப்படியிருக்க இந்த விடையத்தில் மீனவர்கள் நலன் சார்ந்து நின்று, இதை யாரும் அணுகவில்லை. தமிழக சிறு மீன்பிடி மற்றும் இலங்கை மீன்; பிடி சார்ந்து நின்று, கோசங்களையும், கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

இலங்கை இனமோதலுக்குள் இந்த விடையத்தை குறுக்கிவிடுகின்றனர்.

தொடரும்

 

பி.இரயாகரன்

04.02.2011