ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இவை. இலங்கை அரசு ஒரு பாசிச அரசு. அதற்கு பேரினவாதம் என்ற ஒரேயொரு இனவாதம் என்ற முகமூடி கிடையாது. ஆனால் எதிர்ப்பரசியல் ஒரேயொரு இனவாத முகமூடியைப் போட்டுக்காட்ட விரும்புகின்றது. ஆனால் உண்மை அப்படியல்ல.
இலங்கை பாசிச அரசுக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அது தமிழ் மக்களைக் கொல்லும், சிங்கள மக்களை கொல்லும், தமிழக மீனவர்களையும் கொல்லும்.
அது தானல்லாத அனைத்தையும், தனக்கு அடங்காத அனைத்தையும் வன்முறை மூலம் அடக்கி ஒடுக்குகின்றது. வன்முறையல்லாத முறைகள் மூலம் மக்களை ஏமாற்றி அடக்கியாள்வது தான், ஜனநாயகத்தின் சிறப்பு. இதன் மூலம் சுரண்டி ஆள முடியாத வீங்கி வெம்பிய பாசிசக் கூட்டம், வன்முறை மூலம் மக்களை அடக்கியாள நினைக்கின்றது.
அரசை எதிர்க்கும் அனைத்து செயல்களையும் ஒடுக்கியபடி, மக்களைப் பிளந்து அதில் கொட்டமடிக்கும் அரசு, தமிழக மீனவர்களைச் சுட்டும் கொட்டமடிக்கின்றது. "லங்கா ஈ நீயுஸ்" மீதான அரசின் வன்முறை அரசியல் தான், தமிழக மீனவர்களைச் சுட்டுப் போடுகின்றது.
இது வெறும் இனவாதமல்ல. சுரண்டும் வர்க்கம் ஆளும் வர்க்கம் மூலம் முன்தள்ளும் பாசிசம். இப்படி இருக்க தமிழ்த்தேசிய அரசியல், இனவாதம் என்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுவது போல் இதை அணுகுகின்றது.
இது இலங்கையில் எழும் அனைத்துக் குரல்களையும் அரச குரலாக முத்திரை குத்திவிடுகின்றது. இலங்கை மக்களின் சுயாதீனத்தை மறுத்து, குளிர்காயும் தமிழ் இனவாத அரசியல் கூத்தை அரங்கேற்றுகின்றது. அங்கு நடப்பது என்ன? "லங்கா ஈ நீயுஸ்" போன்ற அரசு அல்லாத, ஆனால் சுரண்டும் வர்க்கத்தை சார்ந்த ஊடகங்கள் கூட ஒடுக்கப்படுகின்றது. தமிழ் இனவாதம் இதைக் கண்டு கொள்ளாது மூடிமறைத்து, இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் இனவாதத்தைக் கிளறி இலங்கை அரசைப் பலப்படுத்துகின்றது.
இப்படி தமிழ்தேசியம் இலங்கையில் சுதந்திரமான குரல் கிடையாது என்றும், சுதந்திரமான குரல்களுக்கு அரசு சார்பானதாக முத்திரை குத்திக்கொண்டு தான் இனவாதத்தில் குளிர்காய்கின்றது. அண்மையில் வெளியான மீனவர்கள் குரல்கள் கூட அரச சார்பானதாக, டக்ளஸ் எடுபிடித்தனம் என்று முத்திரை குத்தியது. சரி இலங்கை மீனவர்களின் கோரிக்கை என்ன? இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும்படியா கோருகின்றனர்! தமிழக தமிழ்தேசிய (புலித்தேசிய) கூட்டம், இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை சூறையாடும் உரிமையைக் கோருகின்றனர். தமிழக மீனவர்களின் கோரிக்கைக்குள், இதுவும் அடங்கியுள்ளது.
மார்க்சிய லெனினிய குழுவைச் சேர்ந்த ம.க.இ.க.வின் ஆதரவு பெற்ற வினவு தளம், இதற்கு தாளம் போடுகின்றது. தமிழ் இனவாதத்தையும், தமிழக தமிழ்தேசிய புலிதனத்தையும் வினவுவது என்பது, அதன் கோட்பாடாகிவிட்டது. வினவு "ஆழமானதும் அவசியமானதுமான" என்று கூறி படிக்கக் கோரிய, தமிழக புலித் தமிழினவாதிகளின் இனவாதக் கட்டுரை புலிகளுடன் கூடி கும்மியடிக்கும் இனியொருவில் வெளியாகியுள்ளது. இந்த இனவாதம் எப்படி புலித்தனமாக வெளிப்படுகின்றது என்பதைத் தனியாக பின்னால் ஆராய்வோம்.
இந்தப் படுகொலைக்கு எதிரான போராட்டத்தில், தமிழக மீனவர்கள் கோரிக்கைக்குள் உள்ளடங்கி இருப்பது என்ன? இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் உரிமையை தமக்கு தரும்படி கோருகின்றனர். இலங்கை அரசு நடத்தும் மீனவர்களின் படுகொலை அரசியலின் பின், இந்தக் கோரிக்கை அவர்களால் முன்வைக்கப்படுகின்றது. அதுவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகள் மூலம், மீன் பிடிக்கும் உரிமையைக் கோருகின்றனர். இந்திய ஆளும் வர்க்கம் எல்லைதாண்டும் பிரச்சனையைக் காட்ட, அதை எதிர்த்தல் என்ற போர்வையில் குறுகிய அரசியல் தளத்தில் எல்லைதாண்டும் உரிமை முன்தள்ளப்படுகின்றது. இது இலங்கை மீனவருக்கு எதிரானது.
இங்கு இந்தக் கோரிக்கை இந்தியாவில் உருவாகியுள்ள பாரிய மீன்பிடி மூலதனத்தை கொண்ட, அதன் குறிப்பான நலனுக்கு இசைவானது. இந்தியக் கரையோரங்களில் சிறு மீன்பிடியை அழித்து மீன்வளத்தை சூறையாடிய கூட்டம் தான், இன்று இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் உரிமையைக் கோருகின்றது. இந்தியா போன்று, இலங்கை மக்களின் வளத்தை அழிக்க முனைகின்றது. மறுதளத்தில் இங்கு கொல்லப்படுபவர்கள், பெருமளவில் இவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் தான். பெரும் மீன்பிடி முதலாளிகள் அல்ல.
இங்கு இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அதற்காக அவர்களைக் கொல்லுவது என்பது மன்னிக்க முடியாத பாரிய குற்றம். இதைச் செய்கின்ற குற்றவாளிகள், சிங்கள - தமிழ் மக்களை கொன்று குவித்த கூட்டம்தான்;. இங்கு எல்லை தெரியாது எல்லையைக் கடத்தல் என்பதுவும், நீர் ஓட்டத்தில் சிக்கி செல்வதுமல்ல பிரச்சனை. ஆவைகள் விதிவிலக்கானவை. இதுபோல் கச்சதீவை ஒட்டிய பிரதேசம் சார்ந்த பிரச்சனையுமல்ல.
குறுகிய தமிழ் இனவாத அரசியல் இலங்கை கடலில் மீன்பிடிக்கும் உரிமையை, படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கோருகின்றனர். அவர்களைப் பாதுகாக்க இந்தியக் கடற்படையை அனுப்பி எல்லை கடந்து தாக்க் கோருகின்றனர். எல்லை கடந்து இலங்கை கடலை ஆக்கிரமிக்கக் கோருகின்றனர். இதன் பின்னணியில் இவை உள்ளடங்கியுள்ளது. இதை வினவாது இருத்தல் தான், இந்தப் பிரச்சனையில் இடதுசாரிய சந்தர்ப்பவாதமாகும்.
வேடிக்கை என்னவென்றால் "இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன்பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா?" என்று வினவு வினவுகின்றது. இதுவரை சிங்கள மீனவர்கள் இன்னும் இந்தக் கடலில் மீன்பிடிக்க வரவில்லை. அப்படி பிடித்தாலும் அது இலங்கை தமிழ் - சிங்கள மீனவர்களின் பிரச்சனை. அதனால் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கும் உரிமை கிடையாது. அதனால் தமிழக மீனவர்களை கொல்லலாம் என்றும் இதற்கு அர்த்தம் கிடையாது.
வினவு கூறுவது போல் "இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?" இல்லை என்றால், இது போல் தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையிலான பிளவுமல்ல. சிறு மீனவர்களும், கடல்வளத்தை அழிக்காத மீன்பிடியை நாடும் தமிழக மீனவர்களும், தமிழ் (ஈழ) மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இணைந்து கடல்வளத்தை பயன்படுத்த முடியும். எல்லையும், இனமும் இதற்கு தடையாக இருக்கவேண்டியதில்லை. இந்த எல்லையில் தான் இதை நாம் அணுகுகின்றோம்.
இலங்கை அரசு தான் படுகொலை செய்து இதைத் தூண்டுகின்றது என்றால், தவறாக விளக்குகின்றது என்றால், தமிழக தமிழ் தேசியவாதிகளும் (புலித்தேசியவாதிகளும்) இதைத்தான் செய்கின்றனர். தமிழக மீனவர்களின் கோரிக்கை என்ன? மீன்பிடியில் உள்ள வௌ;வேறு வர்க்கங்களின் கோரிக்கை என்ன? தமிழக மீனவர்கள் கடல்வளத்தை சரியாக பயன்படுத்துகின்றனரா? இப்படியிருக்க படுகொலையை வர்க்கம் கடந்த இனவாதமாக விசிறிவிடுவது குறுகிய மக்கள்விரோத அரசியலாகும்;.
இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் உரிமையை கோரவில்லை என்று, தமிழக மீனவர்கள் கூறுகின்றனரா? இல்லை. அதையே அவர்கள் கோருகின்றனர். இப்படியிருக்க தமிழக தேசியவாதிகள் (புலிவாதிகள்), மார்க்சியலெனினிய குழுக்களும் தமிழக மீனவர்களின் கோரிக்கையை சார்ந்து கருத்துக்களை முன்வைக்கவில்லை. குறுகிய தமிழ் இனவாத அரசியல் சார்ந்த, இலங்கை மீனவர்களுக்கு எதிரான கோசத்தை முன்தள்ளுகின்றனர். இலங்கை மீனவர்களின் குரல்கள் அனைத்தும் இலங்கை அரச சார்பானதாக கூறிக்கொண்டு, இலங்கை மீனவர்களின் நலனை தாங்கள் பிரதிபலிப்பதாகக் காட்டி இலங்கை மீனவர்கள் மேல் நாட்டாமை செய்கின்றனர். இப்படி இந்திய மீனவர்களின் நலனை மட்டுமல்ல, இலங்கை மீனவர்களின் நலனையும் சாராது, குறுகிய தமிழ்தேசிய அரசியலை தண்டவாளத்தில் தங்களை ஏற்றுகின்றனர். மீன்பிடியில் உள்ள பெருமூலதனத்தை சார்ந்து நின்று கொண்டு, பன்னாட்டு மீன்பிடியை (இன்னும் இதற்குள் மீன் பிடிக்க வராத நிலையில்) மட்டும் எதிரியாக காட்டுகின்றனர். உள்நாட்டில் உருவாகும் பெரும் மீன்பிடி மூலதனத்தில் குறுகிய நலன்தான், படுகொலைக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் சாரமாகும். அது தமிழக தமிழ் இனவாதம் (புலிஇனவாதம்) சார்ந்து நின்று வெளிப்படுகின்றது. மார்க்சியலெனினிய இயக்கங்கள் இதை தாண்டி நின்று இதை அணுகவில்லை.
பி.இரயாகரன்
02.02.2010