Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்

முதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.

 

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.

 

இதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம் புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.

 

எல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இயங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர். மக்களின் தலைக்கு மேல் இதை சுமத்திவிடத் தான், ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் அiவு அரங்கேறுகின்றது.

 

எப்படி மக்கள் யுத்தத்தை விரும்பவில்லையோ, அப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதையும் மக்கள் விரும்பவில்லை. இப்படி மக்களின் விருப்புக்கு எதிரானதே, அரசியல் கட்சிகளின் முடிவுகள். அகிம்சைக்கு பரிசு பெற்ற ஆனந்தசங்கரி கூட, ஓப்பந்தத்தை கிழிப்பதை ஆதரிக்கும் ஒரு பாசிச யுத்த வெறியனாக வெளிவந்துள்ளான்.

 

செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துகளின் சரி பிழைகளைக் கடந்து, அதைக் கையெழுத்திட்டவர்களை கடைபிடிக்கக் கோருவது மட்டும் தான், குறைந்தபட்சம் மக்கள் அரசியலாகும். இதை யாரும் செய்ததில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் யாரும் அரசியல் செய்வது கிடையாது.

 

தாம் தேர்ந்தெடுத்த சுயநலமான சொந்த விதிகளுடன் தான், இந்த ஒப்பந்தம் உருவானது. இப்படி புலிகளும் அரசும் மக்களின் பெயரில் செய்து கொண்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தமோ, தனது உயிருக்காக போராடியபடி படுக்கையில் கிடந்து நாறியது. இறுதியில் அதை திருகிக் கொல்வது என்று அரசு முடிவு எடுத்து, அதைக் கொன்றுள்ளது. இதைக் கருணைக்கொலை என்று யுத்த விரும்பிகளும், இதனால் இலாபமடையும் கும்பல்களும் கருத்துரைத்துள்ளது. தமிழ் கூலிக் குழுக்கள் முதல் ஜே.வி.பி வரை இதையே, தமது ஒப்பாரியாக பாடுகின்றனர். அரசு விரும்பும் யுத்தம் தான், தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றனர். இதற்கு வெளியில் எந்த மாற்றும் அவர்களிடம் கிடையாது. தம்மிடம் ஒரு பொம்மை ஆட்சியை தரும்படி கோருகின்றனர். எப்படி அவர்கள் இருப்பு பேரினவாத அரசு சாhந்து உள்ளதோ, அப்படியான ஒரு ஆட்சி தான், தமிழ் மக்களின் தீர்வும் என்கின்றனர். வளர்ப்பு நாய்கள் அப்படித்தான் வாலாட்டியும், குலைத்தும் கேட்கின்றது.

 

புலிகளும் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தம் மக்களுக்கானதல்ல என்பதை, நாம் ஆரம்பம் முதலே கூறிவந்துள்ளோம். மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஒரு ஒப்பந்தம் ஒன்றைத் தான், இரண்டு மக்கள் விரோதிகளும் செய்திருந்தனர். தமது குறுகிய நலனை அடையும் வகையிலான இந்த ஒப்பந்தம், கூனிக்குறுகி சேடம் இழுத்தபடியே நடமாடியது. சர்வதேச தலையீட்டால் ஒப்பந்தத்தின் உயிர் பிரிய மறுத்தது. பாவம் தமிழ் மக்கள். அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களை வேட்டையாடியது ஒப்பந்தம்.

 

இந்த ஒப்பந்தம் ஒரு பக்கத்தில் பொதுவான யுத்த வன்முறையைக் குறைத்தது. அதே நேரம் இந்த ஒப்பந்தம் புதிய வன்முறையை உருவாக்கியது. புலிகள் தமது குறுகிய நலனுக்கு ஏற்ப, தமக்கு சாதகமாகத் தான் செய்தனர். தமது குறுகிய நோக்கில், முழு தமிழ் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் ஒவ்வொருவரையும் தமது கண்காணிப்பு முறைக்குள் கொண்டு வந்தனர். புலிகளின் வழமையான உருட்டல் மிரட்டல்கள் முதல் படுகொலை வரையான பாசிச சூழலுக்குள் மக்களைச் சிக்கிக் வைத்தது. இங்கு வரி, கப்பம் முதல் அனைத்தும் மாபியா வழியில் அரங்கேறியது. மக்கள் அச்சம், திகில், மிரட்சி என பாரிய மனநோய்க்கு உள்ளானார்கள்.

 

மறுபக்கத்தில் பேரினவாதமும் புலிகளும் தாம் மோதிக்கொள்ளும் யுத்தத்தை நிறுத்தியது. இதனால் இந்த ஒப்பந்தம் மூலம், மனித இழப்புகள் குறைவடைந்தது. யுத்தச் சுமை குறைந்தது. ஆனால் மக்களை நிமிர விடாது, புலிகள் தேர்ந்தெடுத்த கொலைகளை தொடங்கினர். கடத்தல்கள், காணாமல் போவதையும் தமது அரசியலாக்கினர். இப்படி மகிந்த அரசு பதவிக்கு வரமுன்பாக 1000 பேர் வரை புலிகள் கொன்றனர். இப்படித்தான் அமைதி சமாதான காலத்தில் புலிகள் செயல்பட்டனர்.

 

இப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது புலிகளைப் பொறுத்த வரையில், கொல்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான ஒன்றாக மாறியது. அதேநேரம் மக்கள் யுத்தக் கெடுபிடியில் இருந்த விடுபட்டு சிறிது மூச்சுவிட்டனர்.

 

மறுபக்கத்தில் புலிகளின் இந்த விருப்புடன் இணங்கிச் சென்ற அரசு, ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில்லை என்பதில் வெற்றி பெற்றது. புலிகள் அதைக் கோரவில்லை. அரசும் அதை முன் வைக்கவில்லை. சமாதானம் அமைதி என்ற பெயரில் அவர்கள் மக்களுக்கு எதிராக இப்படித் தான் நாடகமாடினர். மக்களுக்கு எதிராகவே இருப்பதில், எதிரிகளாக கருதிக்கொள்ளும் இவர்களிடையே என்ன அதிசயிக்கத்தக்க ஒற்றுமை.

 

அமைதியை, சமாதானத்தை அடையும் பாதையில் இருதரப்பும், எந்த அக்கறையும் எடுக்கவில்லை. புலிகள் அதைக் கோரவுமில்லை, அரசு அதைக் கொடுக்கவுமில்லை.

 

விளைவு அரசியல் நெருக்கடியாக மாறியது. அரசியல் பேச்சு வார்த்தை என்பதில், புலிகள் கோட்டை விட்டனர். அரசியல் தீர்வுக்குப் பதில், தமது குறுகிய நலன் சார்ந்த விடையங்களையே புலிகள் அரசியலாக பேசினர். இதனால் அரசு அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தையில் வெற்றி பெற்றது. பேரினவாத அரசின் நெருக்கடி என்பது, தமிழ் மக்களுக்கு வழங்கும் அரசியல் தீர்வில் தான் அடங்கியுள்ளது.

 

புலிகள் வரி, கப்பம், கொலைக்குள் மூழ்கியபடி, அனைத்தையும் கோட்டைவிட்டனர். தமிழ் பேசும் மக்களின் தீர்வு என்ன என்ற கேள்வியை, அரசை நோக்கி புலிகள் எழுப்பவேயில்லை. இடைக்கால அதிகாரம் பற்றி பேசியவர்கள், தமது குறுகிய நலனில் தான். அரசோ குறுகிய நலனின் பின்புலத்தைச் சுட்டிக்காட்டியே, இலகுவாக புலிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துவதில் வெற்றிபெற்றது.

 

அரசியல் ரீதியாக தோற்றுப் போன புலிகள், யுத்தத்ததை தொடங்குவதன் மூலம் வெல்லமுடியும் என்ற நம்பிக்கையையும், அனுமானத்தையும் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக நம்பத் தொடங்கினர். யுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக தொடங்க விரும்பினர். ஆனால் சுனாமி இலங்கையை தாக்கியதால், புலிகள் விரும்பிய வலிந்த யுத்தம் பின் போடப்பட்டது. சுனாமியின் கோரமோ மனிதப் பிணமாக, புலிக்கு அது பண மழையாகியது. இதை யுத்த வெறிக்கு ஏற்ப, ஆயுதக் கொள்வனவில் திருப்பிவிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களோ, அனாதைகளாக கேட்பாரின்றி நாதியற்று இழிந்து போனார்கள்.

 

நவீன ஆயுதம் மூலம், யுத்தத்தை வெல்ல முடியும் என்று மேலும் பலமாக புலிகள் நம்பினர். இப்படியான உணர்வுகள், அரசியல் பேச்சுவார்த்தையை செய்யும் அரசியல் இன்மை, ஆளுமையின்மை, போன்றவற்றின் தாக்கத்தினால் அரசியல் பேச்சுவார்த்தையை முற்றாகவே நிறுத்தியது. புலிகளின் அரசியல் நெருக்கடியோ முத்தி முதிர்ந்து வந்தது. ஆயுதத்தை சதா வழிபட்டுக் கொண்டு இருக்க, உள் முரண்பாடுகள் அதிகரித்தது. கருணாவின் பிளவு, இதை மேலும் அகலமாக்கியது. தொடர்ச்சியான நெருக்கடியில் இருந்து மீள, யுத்தமே ஒரேயொரு மாற்று வழியாகியது. இது புலிகள் முன் இருந்த இலகுவான தீர்வாகியது.

 

யுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக புலிகள் தொடங்கினர். யாழ்குடாவில் மக்கள் படை என்ற பெயரில் பரவலான தாக்குதலைத் தொடங்கினர். ஆங்காங்கே உதிரியாக, அடுத்தடுத்த பல தாக்குதலை நடத்தினர். ஆனால் அவைகள் திட்டமிட்ட இரகசிய அழித்தொழிப்பு மூலம், முற்றாக முடக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் மீள முடியாத நெருக்கடி.

 

புலிகள் வலிந்து யுத்தத்தை திணிக்க முனைந்தனர். கிழக்கில் மணலாறு பிரச்சனை, மூதூர் மீதான தாக்குதலை புலிகள் வலிந்து நடத்தினர். விளைவு இதிலும் தோல்வி பெற்றனர். அரசு புலிகளை இப்படியும் அம்பலப்படுத்தினர். அரசு அமைதியாக இருக்க, புலிகள் வலிந்து தாக்குவதாக காட்ட முடிந்தது. அதைக்காட்டியே புலிகளை அழிக்கத்தொடங்கியது. பல பிரதேசத்தை முற்றாகக் கைப்பற்றியது. இப்படி புலிகள் விரும்பிய யுத்தம், புலிகளின் நெருக்கடியை குறைக்கவில்லை, அதிகரிக்க வைத்தது. புலிகளின் இராணுவம் பற்றி அமைப்புக்குள்ளும், வெளியிலும் இருந்த மிகை நம்பிக்கைகள், படிப்படியாக தகரத் தொடங்கியது.

 

இப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் இருக்கவே, யுத்தம் தொடங்கியிருந்தது. ஒருவிதத்தில் யுத்தம் என்பது ஒரு மோதலாக தொடங்கி, முழுநிறைவான யுத்தமாக நடக்கின்றது. நாள் ஒன்றுக்கு ஒருவர் இருவர் பலியானது என்பது படிப்படியாக, இன்று 10 பேர் பலியாகுமளவுக்கு யுத்தம் நடக்கின்றது.

 

இப்படி பிரகடனப்படுத்தாத முழு நிறைவு யுத்தம் நடக்கின்றது. சந்தேகம் கொண்ட அனைவரையும் கொல்லுகின்றது அல்லது அவர்கள் காணாமல் போகுமளவுக்கு சூழல் மாறிவிட்டது. அரசு திட்டமிட்ட ஒரு இரகசியமான அழித்தொழிப்பை நடத்துகின்றது. இதில் பலியானவர் எண்ணிக்கை என்பது, ஆயிரமாயிரமாக தாண்டிச்செல்லுகின்றது.

 

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறல்களை, இனம் தெரியாத கடத்தல், காணாமல் போதல் என்றே சுய வக்கிரத்துடன் பதிவிடுகின்றது. அதேநேரம் யுத்த நிறுத்த ஒப்பந்தம், முழுநிறைவான யுத்தத்தை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கலை உருவாக்கி வந்தது.

 

அரசின் கை மேலோங்கியுள்ள நிலையில், யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரசுக்கு பாதகமாகவே காணப்பட்டது. இது புலிக்கு சார்பானதாக கருதுமளவுக்கு, அரசின் வெற்றிகள் மதிப்பிட்டன. யுத்தத்தை வலிந்து தொடங்கிய புலிக்கு, எதிர்பாராத வகையில் இந்த ஒப்பந்தம் தற்காப்பை வழங்கியது. அரசு இதைக் கிழித்தெறிவது தனது யுத்தத்துக்கு, யுத்த நோக்கத்துக்கு அவசியமாக கருதியது. இதனால் ஒப்பந்தத்தை தடையாக கருதியது.

 

இந்த வகையில்

 

1. இந்த ஒப்பந்தம் மூலம் யுத்தக் குற்றங்களும், யுத்த நிறுத்த மீறல்களும் சர்வதேச மட்டத்துக்குச் சென்றது. இதன் மீதான விசாரணைகள், கண்டனங்கள் அதிகரித்து வந்தது. இலங்கையில் அதை அவதானிப்பதை தடுப்பன் மூலம், மனித உரிமை மீறல்களை அதிகரித்த அளவில் சுதந்திரமாக செய்ய முடியவில்லை. இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அரசுக்கு அவசியமாகியது. இதன் மூலம் சர்வதேச கண்காணிப்பை அகற்ற முடிவு எடுத்துள்ளனர். எந்தக் கண்காணிப்புமின்றி, சுதந்திரமாக மனித உரிமை மீறல்களை செய்ய இதன் மூலம் இனி முடியும் என்ற நிலை.

 

2. இதைக் கிழிப்பதன் மூலம் யுத்தத்தை விரும்பும் சக்திகளை முழுமையாக யுத்தத்தின் போக்கில், அரசியல் ரீதியாக அணிதிரட்ட முடியும். தீவிரமான இனவாதிகளையும், யுத்த ஆதரவாளர்களையும் திரட்டி, மேலும் ஆழமான முழு நிறைவான அழித்தொழிப்பு யுத்தத்தை நடத்த அரச முனைகின்றது.

 

3. அரசின் பெரும்பான்மையின்மையை நிவர்த்தி செய்ய, பேரினவாத சக்திகள் வைக்கும் அடிப்படை நிபந்தனையின் அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவது அவசியமானதாகியுள்ளது. இதன் மூலம் அரசு சந்தித்த, பெரும்பான்மையின்மை என்ற அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க முடியும். இப்படி யுத்தத்தை விரும்பும் இனவாதிகளின் ஆதரவைப் பெற்று, யுத்தத்தை முழு நிறைவாக நடத்த முனைகின்றது.

 

இப்படி ஒப்பந்தத்தைக் கிழித்தன் மூலம், மனித அழிவுக்குரிய யுத்தம் மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. பேரினவாத சக்திகள் பலம்பெற்று, அதுவே இலங்கை அரசியலாகிவிடுகின்றது. தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடக் கூடாது என்பதையே, இந்த கிழிப்பு மூலம் அறுதியிட்டு பேரினவாதம் உரைக்கின்றது.

 

இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதால் எந்த மாற்றமும், பாதிப்புமில்லை என்று அரசியல் பிரமுகர்கள், தமிழ் கூலித்தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவை அப்பட்டமான மக்கள் விரோதத் தன்மையாகும். இதன் விளைவு பயங்கரமானது.

 

1. யுத்தத்தில் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை, குறைந்த பட்சம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

 

2. அரசின் மனித உரிமை மீறல்கள் என்பது சுதந்திரமானதாகவும், அதிபயங்கரமானதாகவும் மாறும். நீதிமன்ற சட்டங்களைக் கூட இதற்காக திருத்தும் அபாயம் உள்ளது.

 

3. கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் முழு நிறைவாக நடைபெறும்.

 

4. கைதுகள், மக்களை வெளியேற்றுதல் என்பன தங்கு தடையின்றி நடக்கும்.

 

5. தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை, எதிர்தரப்பின்றி மலினப்படுத்தியும், பொம்மைகளைக் கொண்டும், தமிழ் மக்களை ஏமாற்ற முடியும்.

 

5. புலிகளை ஒரு மூர்க்கமான யுத்தத்தில் ஈடுபட வைப்பதன் மூலம், புலிகளின் கட்டாயப் பயிற்சிக்குள்ளாக்கப்பட்ட மக்கள் மீதான பாரிய மனித அழித்தொழிப்பை பேரினவாதிகள் நடத்துவர்.

 

இப்படி ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம் மக்களுக்கு பாதகமாக பல தொடர்ச்சியான அம்சங்கள் மட்டும் தான் உண்டு. இந்த ஒப்பந்தத்தைக் கிழிப்பதன் மூலம், பேரினவாத அரசின் கை மேலும் ஒங்கும். இதனால் தான் ஆனந்தசங்கரி முதல் எல்லா புலியெதிர்ப்பு கூலிக் குழுக்களும், ஒப்பந்தத்தைக் கிழித்ததை வரவேற்கின்றனர். இந்த ஒப்பந்தம் கிழித்தெறிவதன் மூலம், தமிழ் கூலிக் கும்பல்கள் ஆயுதமேந்தி சுதந்திரமாக நடமாடவும், மக்களை அடக்கியாளவும், மனித உரிமை மீறலை செய்யவும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். புலிகள் ஒப்பந்தம் மூலம் இதைக் கோரிய போது, புலிகளின் சுயநலம் இருந்தது. ஆனால் மற்றொரு தளத்தில் மக்கள் இந்தக் கொலைகார மக்கள் விரோத கும்பலிடமிருந்து தப்பி மூச்சுவிட இந்த ஒப்பந்தத்தால் முடிந்தது. ஒப்பந்தம் கிழிந்ததன் மூலம், இவர்கள் ஆயுதம் ஏந்துவதால் மக்களின் வதைகள் பல முனையாகிவிடுகின்றது. இதை ஆதரிக்கின்ற தமிழ் கூலிக்குழுக்களின் உள்நோக்கம் இப்படித் தெளிவானது.

 

தமிழ் மக்களின் அக்கறையின் பால், இவர்கள் யாரும் எந்த அரசியலையும் செய்யவில்லை. அப்படி எதையும் இவர்கள் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை. இவை இந்திய, இலங்கைக் கூலிக் குழுக்கள் தான். வேறு எதையும் இதற்கு வெளியில் செய்ய வக்கற்றவர்கள்.

 

தமிழ் மக்கள் விழுங்கவும் முடியாது, மெல்லவும் முடியாது என்ற நிலையில், யுத்தம் அனைவராலும் கூட்டாகத் திணிக்கப்படுகின்றது. மக்கள் யுத்தத்தின் பெயரில் கொல்லப்படும் நிலைக்குள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த சகல சுயநிர்ணய உரிமையையும் இழந்து, சீரழிந்து சின்னாபின்னமாகி அழிவதை துரிதமாக்கியுள்ளது.

 

பி.இரயாகரன்
05.01.2007