Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்தா அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தமிழ் பத்திரிக்கையாளர்கள் தான் இனவாதத்தினை தூண்டும் விதமாக எழுதி, நாட்டையே உருப்படவிடாமல் செய்துவிட்டார்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். கூட்டத்திற்கு போயிருந்தவர்கள் எல்லாம் தமிழ் பத்திரிக்கையாளர்களின் துரோகத்தையும், அதைக் கண்டு பிடித்த அதி உத்தமரின் துப்பறியும் ழூளையையும், யோசித்துப் பார்த்து வியப்படைந்தார்கள். இந்தச் சந்திப்பிற்கு எழுத்தாளர், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும் போயிருந்தான். அதி உத்தமர் கூட்ட முடிவில் ஏகாம்பரத்தை பார்த்து தோளிலே கை போட்டு, கட்டிப்பிடித்து எல்லோரும் போகட்டும், நீர் மட்டும் நில்லும். உம்மோடு தனியே ஒரு வேலை இருக்கு என்று கண்ணடித்த படி சொன்னார். ஏகாம்பரத்திற்கு ஒரே பயமாகிவிட்டது. ஏன்ன செய்யப் போறாரோ இந்தாள்,  பிக்குகளோட தான் கூடுதலான சவகாசம் வைத்திருக்கு, அதனாலே எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்று பின்பக்கமாக கைகளை கட்டிக் கொண்டான்.

எல்லோரும் போன பிறகு மகிந்தா ஏகாம்பரத்தை பார்த்துச் சொன்னார், நாங்கள் மில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்தும் லண்டனில் பேச முடியாமல் பண்ணி விட்டாங்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் விழாவிற்காக போகப்  போகின்றேன். அங்கே ஒரு பிரச்சினையும் வரக் கூடாது. அத்தோடு இந்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் நடத்திற விழாக்கள் மாதிரி, போஸ்டர்கள் அடித்து விளம்பரங்கள் எல்லாம் செய்ய வேண்டும். நீர் தான் ஜடியா சொல்ல வேண்டும் என்றார். ஏகாம்பரம் இது தானா விசயம் என்று நிம்மதிப் பெரு ழூச்சு விட்டபடி பின்னாலே கட்டின கைகளை எடுத்தான்.

தமிழ் நாட்டு அரசியல் கூட்டங்கள் மாதிரி நடத்த வேண்டுமென்றால், முதலிலே நல்ல வசனங்கள் போட்டு போஸ்டர்கள் அடிக்க வேணும் என்று சொன்ன ஏகாம்பரம், உதாரணமாக நீ எழுந்தால் இமயமலை, கவிண்டால் கைலாயமலை” என்ற மாதிரி அசத்தலான வசனங்களை போடலாம் என்றான். யாழ்ப்பாண சூழலுக்கு ஏற்ற மாதிரி வசனங்களை போடு என்றார்,  சொந்தச் செலவிலேயே சூனியம் வைக்கப்படுவதை உணராத அப்பாவி உத்தமர். மலையே இல்லாத யாழ்ப்பாணத்திற்கு எங்கேயிருந்து உதாரணம் காட்டிறது என்று யோசித்த ஏகாம்பரம், சட்டென்று பரவசப்பட்டு “நீ நிமிர்ந்தால் சுதுமலை, ஓடினால் வழுக்கியாறு” என்று போடலாம் என்றான். யாழ்ப்பாணத்திலே மலையையும், ஆற்றையும் கண்டு பிடித்து விட்டானே, அதனாலே தான் இவனை எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று கூப்பிடுகின்றார்கள் போலே என்று மகிந்தா சந்தோசப்பட்டார்.

பத்திரிக்கை விளம்பரத்திற்கு எதைக் கொடுக்கலாம் என்று மகிந்தா கேட்டார். வாழும் வள்ளுவரே, நடமாடும் பல்பலைக்கழகமே என்று தான் தமிழ் நாட்டில் போடுவார்கள்.  நாங்கள் இலங்கைக்கு ஏற்றமாதிரி “நடமாடும் பேராதனையே” என்று போடலாம் என்றான் ஏகாம்பரம். என்னை ரெம்ப புகழாதே, அதோட யாழ்ப்பாணத்திற்கு ஏற்ற மாதிரி சொல்லு என்றார் தி உத்தமர். அப்ப “நடமாடும் நெல்லியடி தமிழ் கலவன் பாடசாலையே” என்று போடுவோம் என்றான் ஏகாம்பரம். இவன் தன்னை புகழுகின்றானா?  கிண்டல் அடிக்கின்றானா?  என்று தெரியாமல் மகிந்தா ஒரு மார்க்கமாக சிரித்தார். மகிந்தாவின் சிரிப்பை விளங்கிக் கொண்ட ஏகாம்பரம் “தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவன், உயர்த்தப்படுவான்” என்று பைபிள் சொல்லுறதை நீங்கள் மறந்து விட்டீர்களே என்றான்.

அவன் சொல்லுறதிலும் ஒரு நியாயம் இருக்கு என்பதனை உணர்ந்து  கொண்ட மகிந்தா , எந்த போஸ் கொடுத்த படி படம் போடலாம் என்று கேட்டார். சேகுவாராவின் படத்தில் அழகிரியின் தலையை ஒட்டி “அஞ்சா நெஞ்சனே, தமிழ் சேகுவாராவே“  என்று ஒரு விளம்பரம் வந்தது,  அது மாதிரி படம்  போடலாமா? என்று ஏகாம்பரம் கேட்டான். ஒரு பிரபாகரனை சமாளிக்கவே எவ்வளவு கஸ்டப்பட்டேன். இந்த தமிழ் சேகுவாரா மட்டும் பிரபாகரனோடு சேர்ந்திருந்தால் கதை கந்தலாகியிருக்கும். தமிழினத் தலைவர் ழூச்சு விடாமல், முத்தமிழையும் காப்பாற்றுகிற கருணாநிதி எங்களோடை ஒட்டாக இருக்கின்ற படியால் தான் தமிழ் சேகுவாரா புலிகளோடை சேரவில்லை, நல்ல காலம் என்று அமைதியான மகிந்தா, தமிழ் சேகுவாராவைத் தெரியாத ஜனாதிபதி என்று தன்னை வரலாறு பழி சொல்ல போகுதே என்ற பயத்துடன் “அழகிரி அவ்வளவு பெரிய கெரில்லா போராட்ட வீரரா?” என்று மெல்லிய குரலில் கேட்டார்.

அந்த ஆள் பெண்சாதியோட கூட சண்டை போட்டிராது.  தமிழ் நாட்டு அரசியலிலே இதெல்லாம் சகஜம்.  ஊசி மாதிரி உடம்பு இருக்கிற தமிழ்பட கதாநாயகன், வாட்ட சாட்டமான ஆட்களிற்கு அடிக்கிறதை தான் ரசிக குஞ்சுகள் விசிலடித்துப் பார்ப்பார்கள். கதாநாயகியை ஓடிப் பிடிக்க முடியாமல் ழூச்சு வாங்கிற வயதில், தமிழ் மக்களிற்கு சேவை செய்யப் போகிறேன் என்று அரசியலிற்கு வருவார்கள், வருமான வரிக்காரர்களை ஏமாற்ற கறுப்புப் பணத்திலே பெரும் பணத்தை வைத்திருக்கும் இவர்கள்.  “ஊழலை ஒழிப்போம்” என்று முழக்கம் போடுவார்கள். அதையும்  நம்பி எம். ஜி.ஆரை முதரமைச்சராக்கினார்கள். ஆனபடியால் நீங்கள் பயப்படாமல் சேகுவாராவின் படத்தில் தலையை ஒட்டலாம் என்றான் ஏகாம்பரம். எம். ஜி. ஆரை சொன்னவுடன் மகிந்தா ஜெயலலிதாவை நினைத்து பெருழூச்சு விட்டார்.

என்னை ஏற்கனவே கொலைகாரன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்ற படியால் ராணுவம், போர் சம்பந்தப்பட்ட படங்கள் வேண்டாம். ஒரு ஜாலியான படம் போடுவோம் என்றார் மகிந்தா. அப்படி என்றால் வடிவேலு அரை ரவுசருடன் இடுப்பை நெளித்தபடி நிற்கும் படத்திற்கு உங்கள் தலையை ஒட்டி விடலாம் என்றான் ஏகாம்பரம். அதி உத்தமருக்கு அந்த யோசனை பிடித்துப் போய் “இடுப்பை நெளித்த படி ரிஸ்க் எடுப்பது என்றால் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி“  என்று சந்தோசமாக சிரித்த படி சொன்னார்.

தமிழ் நாட்டிலே தலைவர்களிற்கு பட்டங்கள் கொடுப்பது மாதிரி எனக்கும் ஒரு பட்டம் வைப்பதற்கு ஜடியா சொல் என்றார் மகிந்தா. நீங்கள் சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பதனால் “பாண்டவரே” என்று கூப்பிடலாம் என்றான் ஏகாம்பரம். ஏற்கனவே எல்லாத்திலேயும் பங்கு கேட்கிறார்கள். இப்ப இவன் சிராந்திக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறான் என்று பயந்த மகிந்தா,  அது வேண்டாம் வேறு சொல் என்றார். கருணா,  பிள்ளையான் புலிகளுடன் இருந்த போது, எந்த நேரமும் போர், இரத்தம் என்றபடி கறுப்பாய் பயங்கரமாக இருந்தார்கள். அவர்களை தளபதி, கேணல் என்று கூப்பிட்டார்கள். ஆனால் அவர்கள் உங்களுடன் சேர்ந்தவுடன் நீங்கள் அவர்களை மாமாக்கள் ஆக்கிவிட்டீர்கள். தளபதி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,  உறவு ஒட்டாது. மாமா என்று சொன்னால் தான் உதடுகளும் ஒட்டும் உறவுகளும் ஒட்டும் என்று தமிழ் நாட்டு பெரிய மாமா கருணா வசனம் ஏற்கனவே எழுதி விட்டார். அதனாலே உங்களை “மாமாக்களை உருவாக்கிய பாசக்கார மாமா” என்று கூப்பிடலாம். “பாசக்கார மாமாவிற்கு சின்ன மாமாக்கள் எடுக்கும் பாராட்டு விழா” என்று தலைப்பு வைக்கலாம் என்றான் ஏகாம்பரம். நீங்கள் எல்லோரையும் மாமாவாக்கினதிலே,  இனி  எல்லா மந்திரிகளையும் மாமா என்றே உத்தியோகபூர்வமாக கூப்பிடலாம்.

ஏதாவது கலைநிகழ்ச்சி  வைக்க வேணும் என்றான் ஏகாம்பரம். ஜெயலலிதாவின் டான்ஸ் வைக்கலாம் என்று தன்னை மறந்து ஜொள்ளு விட்டார் உத்தமர். மேடை தாங்குமா? இல்லை நாடு தான் தாங்குமா?  அதோடை அந்த வயதுக்காரர்கள் அனேகம் பேர் கத்தரிக்காய் பொரித்த குழம்பும், ஆட்டு இறைச்சிக் கறியும் சாப்பிட்டு பிளட் பிரசரில் பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள். மிச்சம் சொச்சம் இருந்தவர்களையும் நீங்கள் முடித்து விட்டீர்கள். இந்த தலைமுறைக்காரர்கள் “மானாட,  மார்பாட” ரசிகர்கள்  என்றான் ஏகாம்பரம். உடனே எப்படி ஏற்பாடு செய்ய முடியும் என்று மகிந்தா யோசித்தார். உங்கள் மந்திரி சபை தான்,  நீங்கள் சொல்கிற படி எல்லாம் ஆடுமே.  அவர்களையே ஆடவைத்து விடலாம். ஆனால் பெயரைத் தான் “மாடு ஆட, மாமா ஆட” என்று மாற்ற வேண்டும் என்றான் ஏகாம்பரம்.

கவியரசுகள், கவிப்பண்ணையார்கள், கவிமிந்தார்கள் என்று கொஞ்சப் பேர் ஒவ்வொரு வரியையும் இரண்டு தரம் திரும்ப திரும்ப சொல்லுவாங்களே அப்படி ஒரு கவிதை படிக்க வேண்டும்.


மாப்பு!
பொன்சிற்கு வைத்தாயே ஆப்பு
இப்ப அவர் கையில் காப்பு
நான் உன் காலை நக்கும் டோக்கு

இப்படி ஒரு கவிதையை விமல் வீரவன்சா படித்தால் நல்ல பொருத்தமாக இருக்கும். கருணாவும்,  பிள்ளையானும் கவிதை படிப்பார்கள் என்று சொன்னால் உலகத்திலே எவனும் நம்பமாட்டான். ஆனபடியால் அவர்களை உங்களிற்கு முன்னால் வழக்கமாக செய்யிறது மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு நிற்கவைக்கலாம்.

ல்லா ஏற்பாட்டையும் ஒழுங்கு செய்த சந்தோசத்தில் அதி உத்தமர் ஏகாம்பரத்திற்கு நன்றி சொல்லி அனுப்பினார். அதி உத்தமரிற்கே ஆலோசனை சொன்ன பெருமிதத்தில் பம்மி, பம்மி நடந்து போன ஏகாம்பரத்தை பார்த்து மகிந்தா,  நீ பிக்குகள் மாதிரியே பொறுமையாக நடக்கிறாய் என்றார். ஏகாம்பரம் தன்னையறியாமலேயே கைகளை பின்பக்கமாக கட்டிக் கொண்டான்.