08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழக மீனவர்கள் மீதான தொடர் இனப்படுகொலைகளும், மறுப்புகளும்

காலாகாலமாக கொலைகளை செய்தவர்கள், அதை மறுத்து வந்தவர்கள், அதற்கு இன்று ஆதாரம் கேட்கின்றனர். இதுவே கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இலங்கையின் பொது அரசியலாகிவிட்டது. இதுவே அவர்கள் தொழிலாகிவிட்ட பின், மறுப்பும் - மறுப்பறிக்கைகளும் அரசியலாகி விடுகின்றது.

தொடரும் இந்த இனப்படுகொலைக்கு பின்னால், இரண்டு பிரதான விடையங்கள் உள்ளடங்கியுள்ளது.

1. எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களைக் கொல்லும் இனப்படுகொலை சார்ந்த முறைமை

2. எல்லை தாண்டி, இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைக் கொண்டு மீன்பிடித்தல்

மீன் பிடிப்பவனை கொல்வது, அதுவும் இனப்படுகொலை செய்த கூட்டம் அதே மொழியைப் பேசும் மக்களைக் கொல்வது, பேரினவாதம் சார்ந்தது. பேரினவாதம் எல்லை தாண்டுவதற்கு, கொல்வதைத் தீர்வாக வைக்கின்றது. ஏனென்றால் அவன் தமிழன்.

மறுபக்கத்தில் எல்லைதாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை, இலங்கை மீனவர்கள் விரும்பவில்லை. இதை பேரினவாதம் தனக்கு சாதகமாகக் கொள்கின்றது. எல்லைதாண்டி மீன்பிடித்தல் தான் இந்த பிரச்சனைக்கான காரணம் என்று, இந்தியா - இலங்கை அரசுகள் இந்த கொலைகளுக்கான மறைமுகமாக காரணம் என்று கூறி இதை நியாயப்படுத்தியும் விடுகின்றது.  

இந்தியக் கடலில் சில மீன்பிடி முறைகளால், அதன் மீன்வளம் முற்றாக அழிந்து போனது. இதனால் இந்திய மீனவர்கள், கடல் எல்லையைத் தாண்டி இலங்கையில் மீன்பிடிக்கின்றனர். இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் சில மீன்பிடி முறைகளை தொடர்ந்து எதிர்த்தும் வருகின்றனர். இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்கள் உடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு, இந்திய மீனவர்களிள் சில மீன்பிடிமுறைகள் முற்றாக தடைசெய்யப்பட்ட வேண்டும். அதை இந்திய மீனவர்கள் தடை செய்யவும், நடைமுறைப்படுத்தவும் முடியாதுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் இதை அனுமதித்தால், இலங்கை மீன் வளம் அழிந்துவிடும்.

இப்படிப்பட்ட நிலையில் கடலில் மீனவர்கள் மோதிக்கொள்ளும் நிலைமையும், இந்திய மீனவர்களின் ஆதிக்கம் ஏற்படுகின்ற சூழல் தவிர்க்க முடியாத புதிய முரண்பாடாகவே அது வெடிக்கும். இன்று இலங்கைக் கடற்படையின் இனவாத ஆதிக்கம், இரண்டு மீனவர்களையும் ஒடுக்குவதால் இவர்களுக்கு இடையிலான முரண்பாடும் கடலில் மோதும் நிலைமையும் முன்னிலைக்கு வரவில்லை. மாறாக தமிழனைக் கொன்று வந்த பேரினவாத படை, எல்லை கடந்தவர்களைக் கொன்றும் போடுகின்றது. இதற்கு எதிரான போராட்டம் கடல்வளத்தை அழிப்பதற்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்காத வரை, இலங்கை மீனவர்களின் ஆதரவை அது பெறாது. 

இந்தியா மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கக் கூடிய மீன்பிடியை நிறுத்தி இலங்கை மீனர்வர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதும், அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதும் அவசியமானது. இந்திய மீனவர் இதை செய்யாது, அத்துமீறி மீன்பிடிப்பதும், இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தொடர்ந்து கையாள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. படுகொலைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படி இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீன் வளத்தை அழிப்பதும், ஒரு படுகொலைதான்.       

மீன்பிடிக்க அத்துமீறுபவர்களை இனவெறியுடன் கொல்வது, இனப்படுகொலையின் தொடர்ச்சியாகும்;. தொடரும் இந்திய மீனவர்கள் மேலான இந்தப் படுகொலைகள், இந்திய அரசுடன் முரண்பாட்டை உருவாக்கக் கூடிய ஓன்று. அப்படி இருந்தும் திமிர்த்தனமாக கொல்வதும், மறுப்பதும், ஆதாரம் கேட்பதும் மறுபடியும் மறுபடியம் நடக்கின்றது. இதன் பின்னணியில் இரண்டு விடையத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1. இந்தப் படை ஈழத்தில் எப்படிப்பட்ட இனப்படுகொலைகளை நடத்தியிருக்கும் என்பதை, அதன் திமிர்தனமான மறுப்பு மூலம் நாம் இனம் காணமுடியும்.

2. இந்தியாவுடன் முட்டிமோதும் இலங்கை அரசின் இந்தப் போக்கு, புதிய சர்வதேச முரண்பாட்டிலான புதிய அரசியல் சமிக்கையா!?

இதுவரை காலமும் இது போன்றவற்றை புலிகள் செய்வதாக கூறிவந்தனர். தமிழக மீனவர்கள் இதை மறுத்த போதும், அதன் மேல் எந்த விசாரணைகளையும் இந்திய அரசு நடத்தவில்லை. இந்தியாவின் பிராந்திய விரிவாக்க முயற்சிக்கு, இவை பாதகமாக அமைந்துவிடும் என்பதால் இந்தத் தொடர் படுகொலைகளை பூசி மெழுகினர். தமிழக மீனவர்களின் மீதான தொடர் படுகொலை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், இந்திய அரசின் சர்வதேச பிராந்திய விஸ்தரிப்புவாத கொள்கையை மாற்றிவிடுவதில்லை.

இன்று இலங்கை புதிய சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சியை நிறவியுள்ளது. இது சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கி திணறுகின்றது. அதன் வாழ்வும் சாவும் சர்வதேச முரண்பாட்டை மேலும் தீவிரமாக்குகின்றது. அங்குமிங்குமாக அலைகின்றது. புதிய முரண்பாடுகள், காய்நகர்த்தல்கள் ஒரு அங்கமாக பலவும் நடக்கின்றது. இதன் ஒரு கூறாக இந்திய மீனவர்களின் படுகொலையும் அரங்கேறுகின்றதா என்ற கேள்வியும், இங்கு தவிர்க்க முடியாததாகின்றது. 

பி.இரயாகரன்

24.01.2011   


பி.இரயாகரன் - சமர்