திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால்  அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால்  "ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை வெல்ல முடியாது. ஏனெனில்,

அத்தகைய வறுமையின் முடைநாற்றம் சூடான பாப்கார்னின் நறுமணத்தோடு இணைய முடியாது.

— அருந்ததி ராய்

 

 

 

1997லிருந்து ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நமது நாட்டில் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர். சில புள்ளி விவரங்களின்படி, 2002லிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். இந்தப் புள்ளி விவரம், இந்த புள்ளி விவரங்களுக்கு பின்னிருக்கும்

துயரார்ந்த வாழ்வு, அதிர்ச்சியூட்டும் நூற்றுக்கணக்கான கதைகள்... நாட்டிலுள்ள பெரும்பான்மையானோரை அசைத்ததாகத் தெரியவில்லை. இந்த நீண்ட துயரத்தின் ஆழமான சித்திரங்களை, நேரடியாக மக்களை சந்தித்து உரையாடி, பத்திரிகையாளர் சாய்நாத் கட்டுரைகளாக எழுதினார். பிற செய்தி ஊடகங்களோ, திரைப் படைப்பாளிகளோ தீண்டாத விசயமாகவே விவசாயிகள் தற்கொலை இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் தற்கொலையை அடிப்படையாகக் கொண்ட

படம் என்ற முத்திரையோடு வெளிவந்து புகழ்பெற்றுள்ள திரைப்படம்தான் "பீப்லி லைவ்'. "பீப்லி' எனும் கற்பனைப்பெயர் கொண்ட கிராமத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு (லைவ்) எனும் பொருள் கொண்ட தலைப்பிலான இத்திரைப்படம் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளுக்கும் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட் சினிமா என்றழைக்கப்படும் மும்பை சார்ந்த இந்தித் திரைப்படவுலகம், "திரைப்படங்கள்' என நூற்றுக்கணக்கான குப்பைகளை எடுத்துத் தள்ளுகிறது.

கடந்த இரு பத்தாண்டுகளில் உலகமயமாக்கம் துவங்கப்பட்ட பின்னர், விவசாயிகளின் வறுமை எனும் அம்சம் எந்தத் திரைப்படத்திலும் மருந்துக்குக் கூடஇடம் பெற்றதில்லை. புளித்துப் போன காதல் கதைகள், அர்த்தமில்லாத பாடல்கள், ஆபாசமான நடனங்கள், மிதமிஞ்சிய செயற்கையான தேசபக்தி என்ற கலவையில் உருவான அபத்தக் களஞ்சியங்கள்தான் தங்கு தடையின்றி வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

இவற்றின் மத்தியில், "பீப்லி லைவ்' ஒரு மாறுபட்ட படமா என்றால், நிச்சயமாக மாறுபட்ட படம்தான். ஆனால், சொல்லிக் கொள்ளப்படுவது போல், விவசாயிகளின் தற்கொலையை நாட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கும் படம் என்பது உண்மைதானா? இக்கேள்வியைப் பரிசீலிக்கும்முன் திரைக்கதையை சற்று பார்ப்போம்.

 

···

 

முக்கியப் பிரதேசம் எனும் மாநிலத்தில், பீப்லி எனும் கிராமத்தில் வசிக்கும் நத்தா எனும் ஏழை விவசாயியும், அவரது அண்ணன் புதியாவும் வங்கிக்கடன் கட்ட முடியாமல் தமது நிலத்தை பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். உள்ளூர் ஆளும்கட்சி அரசியல்

பிரமுகரிடம் உதவி கேட்டுச் செல்லுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடும் அரசியல்வாதி, தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வு எனக் கூறுகிறான். அதன் மூலம் அரசாங்கத்திடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் எனக் கூறி விரட்டி விடுகிறான்.

அதன் அடிப்படையில், நத்தா தற்கொலை செய்ய முன் வருகிறான். தான் தற்கொலை செய்யப் போவதாக குடிபோதையில் நத்தா உளறிக் கொண்டே செல்கிறான். நத்தாவை எதேச்சையாக செவிமடுக்கும் ராகேஷ் எனும் பத்திரிக்கையாளன், அதனை முக்கிய செய்தியாக தனது பத்திரிகையில் வெளியிடுகிறான். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் பீப்லிக்குப் படையெடுக்கின்றன.

"நத்தா தற்கொலை செய்து கொள்வாரா, மாட்டாரா' எனும் பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுகின்றன. உடனடியாக செய்தி நாடெங்கிலும் பரவுகிறது. தாழ்த்தப்பட்ட சாதித் தலைவரொருவர் நத்தா தமது சாதிக்கு பெருமை சேர்த்திருப்பதாக சொல்லி,

அவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி பரிசளிக்கிறார். நத்தாவின் வீட்டெதிரே ராட்டினங்களும், கடைகளும் வந்தடைகின்றன. வியாபாரம் சூடு பிடிக்கிறது.

தொலைக்காட்சி பேட்டியாளர்கள் ஊரிலுள்ள அனைவரிடமும் தமது அபத்த

பேட்டிகளை எடுத்து ஒளிபரப்புகிறார்கள். அப்பாவியான நத்தா குழம்பித்

தவிக்கிறான். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நிகழ்த்தும் வேடிக்கையாக படம் விரிவடைகிறது.

உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தால் தான், தான் தலையிட முடியும் என

விவசாயத் துறை அமைச்சகம் கைவிரிக்கிறது. மத்திய மந்திரி சலீம், "இது மாநில

அரசின் தோல்வி" என குற்றம் சாட்டுகிறார். மாநில முதலமைச்சர் கலெக்டரை

விரட்டுகிறார். அரசாங்க அதிகாரிகள் தேடி வந்து லால் பகதூர் திட்டத்தின் கீழ்

அடிபம்பு தந்து விட்டு செல்கிறார்கள். "நத்தா கார்டு' என்ற திட்டத்தை, நிதியாதாரம் இல்லாத போதும், மாநில அரசுக்கு நெருக்கடி தருவதற்காக மத்திய

மந்திரி சலீம் அறிமுகப்படுத்துகிறார். நத்தாவுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் விரைவில் வருவதையொட்டி, முதல்வர் தானே தேடி வந்து ஒரு இலட்சம் அளிக்கப் போவதாகவும், நத்தா சாக மாட்டார் என்றும் அறிக்கை

விடுகிறார். இந்நிலையில், முதல்வரிடம் தேர்தல் விசயங்களில் பிணக்குறும்

உள்ளூர் அரசியல்வாதி, நத்தாவை கடத்தி செல்கிறான். இதனைத் தொடரும்

குழப்பங்களில், நத்தா கடத்தி வைக்கப்பட்ட இடத்தில் தீப்பற்றியெறிகிறது.

நத்தா தப்பிச் செல்ல, பத்திரிகையாளன் ராகேஷ் தீயில் சிக்கி மடிகிறான்.

அனைவரும் தவறுதலாக நத்தாதான் இறந்து விட்டதாக எண்ணுகின்றனர். விசயம் முடிந்ததென, தொலைக்காட்சிகள் ஊரை விட்டு வெளியேறுகின்றன. விபத்தில் சிக்கி உயிரிழந்ததால், தற்கொலைக்கான இழப்பீடு தர அரசு மறுக்கிறது. நத்தா குடும்பத்தினர் மீண்டும் நிர்க்கதியாக நிற்கின்றனர். பீப்லிக்கு வெகு தொலைவில், ஒரு நகரத்தில் நத்தா கட்டுமானப் பணியாளனாக கடப்பாரை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் அமர்ந்திருக்கிறான். படம் நிறைவுறுகிறது. பார்வையாளர்கள்

படத்தின் ஜோக்குகளை சொல்லி சிரித்த படி வெளியேறுகிறார்கள்.

 

···

 

இத்திரைப்படத்தை வியக்கத்தக்க "கறுப்பு நகைச்சுவை', அபாரமான "அரசியல் நையாண்டி' என நையாண்டி செய்யப்பட்ட அதே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதின. விவசாயிகளின் தற்கொலையை சாதுர்யமான முறையில், நையாண்டி நடையில் திரைப்படமாக எடுத்திருப்பதாக புகழாரங்கள் சூட்டப்பட்டன.

ஆனால், சில நாட்களிலேயே, மிக அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மகாராஷ்டிரத்தின் விதர்பா மாவட்டத்தின் விவசாயிகள், "விதர்பா ஜன் அந்தோலன் சமிதி' எனும் அமைப்பின் தலைமையில் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். "இழப்பீட்டுக்காகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்" எனும் வழக்கமான ஆளும் வர்க்கக் கருத்தை முன்வைத்து, விவசாயிகள் தற்கொலையை "பீப்லி லைவ்' திரைப்படம் கேலிப் பொருளாக்குகிறது என விமர்சித்தனர்.

வழக்கம் போல், விவசாயிகளின் கண்டனத்தை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. வேடிக்கைதான். நையாண்டி செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அதிகாரிகள் கொதித்தெழவில்லை, அரசியல்வாதிகள் ஆவேசப்படவில்லை, ஊடகங்களோ பாராட்டி எழுதுகின்றன. ஆனால், யாருடைய துயரத்தை எடுத்துக்காட்டுவதாக சொல்லப்பட்டதோ, அந்த விவசாயிகள் படத்தை ரசிக்கவில்லை. அப்படியானால், இது யாருடைய ரசனைக்கான படம்? விவசாயிகளின் கண்டனத்திலுள்ள உண்மையை திரைப்படம் பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும். உலகமயத்தினால் ஆதாயம் பெறும் உயர் மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் பொதுவில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஊடகங்களையும் கேலி செய்வதன் மூலம் எப்பொழுதும் தனது அரசியல் கடமையை நிறைவேற்றி மகிழ்கின்றனர். அவர்கள்தான் நாடு முழுவதும்

விரவிக் கிடக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை சிரித்து ரசித்தனர். இறுதிக் காட்சி கூட எந்த அழுத்தத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. இதனைத்தான் எழுத்தாளர் சாருநிவேதிதா, "விமர்சகர்கள் இந்தப் படத்தை "பதேர் பாஞ்சாலி'யுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், "பதேர் பாஞ்சாலி'யில் இருந்த ஞ்டூணிணிட்டிணஞுண்ண் (சோகம்) இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் விசேஷம்." எனக் குறிப்பிடுகிறார். ஏறத்தாழ ஒரு படுகொலையைப் போல, இரண்டு லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்ததை எடுத்தியம்பும் கதையில், பார்வையாளர்கள் சோகத்தை உணர முடியவில்லையென்றால் அந்தப் படைப்பின் யோக்கியதைக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்? இதனால்தான் திரைப்படம் வெளியாகும் முன்பே திரைப்படத்தின் தயாரிப்பாளரான இந்தி நடிகர் அமீர்கான் முன் எச்சரிக்கையோடு குறிப்பிட்டார்.

"இத்திரைப்படம் உண்மையில் விவசாயிகள் தற்கொலை குறித்த படமல்ல. அது ஒரு பின்புலம் மட்டுமே. ஏனெனில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ, ஏன் இந்த தற்கொலை நோய் இத்துணை ஆண்டுகளாக தொடர்கிறது என்பது குறித்தோ திரைப்படம் எதுவும் சொல்லவில்லை. மாறாக, நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைத்தான் திரைப்படம் எடுத்துக் காட்டமுயல்கிறது." (ஜூலை 29, அப்ரைசிங் ரேடியோ) சொற்களைக் கவனியுங்கள்.

தற்கொலை நோயாம்! என்ன ஒரு ஆழமான புரிதல்? அடிப்படையில், இத்திரைப்படம்

ஊடகங்களின் பொறுப்புணர்வற்ற பரபரப்பு செய்தி வேட்டையைத்தான் பொதுவில் பார்வையாளர்களிடம் பதிவுசெய்கிறது. இது புதிய விசயமல்ல. இதே விசயத்தை, இத்திரைப்படத்தை விடவும் அழுத்தமாக திபங்கர் பானர்ஜி இயக்கிய 'காதல், காமம் மற்றும் துரோகம்'திரைப்படம் பதிவு செய்தது. ஆனால், அது 'சோகமான' திரைப்படம். திரைப்படமும் வெற்றி பெறவில்லை. எனவே,"யதார்த்தமாகவும் வேண்டும், ஆனால், சோகமாகவும் இருக்கக் கூடாது' எனும் தத்துவத்தின் பின்னிருப்பது சமூக அக்கறை

வேடமணிந்த நுகர்வு மனநிலை. அதற்கான சந்தையையும், விருதுகளையும் குறி வைக்கிற "சமூக அக்கறையுள்ள' திரைப் படைப்பாளி நையாண்டியைத் தவிர வேறு எதனை கைக்கொள்ளமுடியும்? அதனால் தான் "பீப்லி லைவ்' இலக்கற்றும், மேலோட்டமாகவும் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் குறித்து நையாண்டி செய்யும் போக்கில், கதியற்ற விவசாயிகளையும், அதாவது படத்தின் பின்புலத்தை கோமாளிகளாக காட்டிச் செல்கிறது. "ரசிகர்கள்' சிரிக்கிறார்கள்.

 

···

 

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியன்று, மகாராஷ்டிரத்தின் வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ராவுத் எனும் விவசாயி தனது தற்கொலைக்கு முன்பாக, பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினார். "இரண்டு வருடங்களாக பயிர் வீழ்ச்சியடைந்ததுதான் காரணம்." எனினும், "இரு முறை வங்கி அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து கடனைத் திருப்பிக் கேட்டனர்." இக்கடிதத்தை தனது தற்கொலைக்கான குறிப்பாக விட்டுச் சென்றார். இதனை வழக்கம் போல அரசாங்கம் அலட்சியப்படுத்தி விடும், தற்கொலைக்கான காரணங்களை சோடிக்கும் என்பதால், தனது கடிதத்தை நூறு ரூபாய் பத்திரத் தாளில் பதிவு செய்து விட்டு சென்றிருக்கிறார். பத்திரத்தில் கருவூல அதிகாரியின் முத்திரையும் உள்ளது. ராமச்சந்திர ராவுத்தின் கதையைக் கேள்விப்படும் பொழுதில் சிரிப்பு வருவதில்லை. எனவேதான், ராமச்சந்திர

ராவுத்தை நத்தாவாக்கி அமீர் கான் பகடி செய்யும் பொழுதும் சிரிப்பு வரவில்லை. சினம்தான் ஏற்படுகிறது.

· வாணன்