மக்கள் தான் தங்கள் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள். இதற்காக போராடாதவர்கள், இந்த அரசியலை தங்கள் வாழ்வாகவும் எழுத்தாகவும் கொள்ளாதவர்கள் செயற்பாடுகளும் கருத்துகளும் குறுகிய கண்ணோட்டம் கொண்டது. அது மக்கள் செயல்பாடு சார்ந்து சிந்திப்பதில்லை. தன் குறுகிய வட்டம் சார்ந்தும், தன் நலன் சார்ந்தும் சிந்திக்கின்றது.

இந்த வகையில்தான் 5 வது இலக்கிய சந்திப்பு மீதான புறக்கணிப்பு முன்தள்ளப்படுகின்றது. "எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும்", புலத்து புலி "மதியுரை" பிரமுகர்களும் இணைந்து, இந்த 5வது இலக்கிய மாநாட்டை புறக்கணிக்கும் அறிக்கையை மக்களுக்கு எதிராகத் திணித்துள்ளனர். அதேநேரம் சர்வதேச பிரபலங்களுடன் தங்களை பெயர்களையும் இணைத்து இதை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் அதில் கையெழுத்திட்ட "சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, சேரன், டேவ் ரம்ரன்" பெயர்கள் குறிப்பாக வெளியாகியுள்ளது.

 

 

 

இலங்கையில் அரச பாசிசம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் நிலவுவது என்பது அங்குள்ள எதார்த்தமாகும். இந்த எதார்த்தம் அங்கு தொடர்வதால், அரசு அல்லாத நிகழ்ச்சிகளை புறக்கணிக்கக் கோருவது எப்படி சரியானது? இதன் மூலம் முன்தள்ளப்படும் அரசியல் தான் என்ன? இந்தப் புறக்கணிப்புவாத அரசியல் உள்ளடக்கம், பாசிசத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் நடக்கும் சுதந்திரமான செயற்பாட்டை பாசிசத்துக்கு நிகராக தடைசெய்கின்றது. பாசிசம் நிலவும் நாட்டில், பாசிச எதிர்ப்பு போராட்டம் சுதந்திரமான செயல்பாட்டின் ஊhடாகவும் நடக்கின்றது என்பதை இது மறுக்கின்றது. அதே நேரம் சுதந்திரமான செயற்பாட்டை அரச இலக்கிய சந்திப்பாக காட்டி, அரச ஓடுக்குமுறைக்கு ஆதரவாக அது செயல்படுவதாக முத்திரை குத்திவிடுகின்றது. இப்படி பாசிசத்துக்கு வெளியில் நடப்பவற்றை, பாசிசத்தின் பின்னால் செல்லுமாறு தனிமைப்படுத்தி நிர்ப்பந்திக்கின்றது. இப்படி பாசிசத்துடன் இல்லாதவர்களை பாசிசத்துடன் செல்லுமாறு, பாசித்துக்கு எதிராக இருப்பதாக கூறிக்கொண்டு திணிக்கின்றனர்.

இப்படி குறுகிய புலம்பெயர் சிங்கள - தமிழ் அரசியல், தன்னை மையப்படுத்தி தன்னை சுற்றிய குறுகிய எல்லைக்குள் இலங்கைவாழ் மக்களின் சுதந்திரமான செயல்பாட்டை சிதைத்து அழிக்க முனைகின்றனர்.

இதற்கு மாறாக கையெழுத்திட்ட பிரபலங்கள், தங்கள் பரந்த சமூக அனுபவங்களில் இருந்து இதை அணுகவில்லை. அவர்கள் இரண்டு பிரதான புள்ளியில் செயற்பட்டு இருக்க முடியும்.

1.இலங்கையில் மறுக்கப்படும் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மையப்படுத்தி, அதை முதன்மைப்படுத்தி, அதை முன்னெடுக்கக் கோரி அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்க வேண்டும்.

2.இந்த அழைப்பை இவர்கள் பயன்படுத்தி, இலங்கை எழுத்தளார்கள் முன் நின்று ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து இருக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அளவில் இதை அங்கு வைத்து முழங்கியிருக்கவேண்டும். இதன் மூலம் அரச பாசிசத்தின் எதிர்வினையை, உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

இதற்கு மாறாக புறக்கணிப்பு வாதமும், முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் அரசியலும், இரண்டு பிரதான மக்கள் விரோத போக்கை முன்தள்ளுகின்றது.

1.இலங்கை வாழ் மக்கள் தான், தங்கள் சொந்தப் போராட்டம் மூலம் நாட்டில் போராட வேண்டிய அரசியல் வழிமுறைகளை இது மறுதலிக்கின்றது.

2.புலம்பெயர் தமிழ் - சிங்கள புத்திஜீவிகள், தங்களைச் சுற்றிய குறுகிய வட்டத்துக்குள் அரசியலை வரையறுத்து முத்திரை குத்தி தனிமைப்படுத்தி விடுகின்றனர்.

இப்படிப்பட்ட இந்தக் குறுகிய மக்கள் விரோத அரசியலுக்கு பின்னால், உலகப் புகழ்பெற்றவர்களையும் இழுத்து வந்துள்ளனர். உண்மையில் இலங்கையில் பாசிச சூழல் சார்ந்த ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் எதிர்கொள்ளும் மக்கள் திரளமைப்பை உருவாக்கும் அரசியல் வழிமுறையை முன்வைக்க மறுப்பவர்களும், அதை அரசியல் ரீதியாக நிராகரிப்பவர்களும் தான், இந்த புறக்கணிப்பு வாதத்தை தங்கள் அரசியல் தெரிவாக கொள்கின்றனர். இதுதான் இந்தக் குறுகிய எல்லைக்குள் புறக்கணிப்பாகின்றது.

மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் என்பதை மறுக்கின்ற, அதற்கான அரசியலை செய்யாத, அதை தங்கள் எழுத்தின் ஊடாகக் கோராத கூட்டம் தான், புறக்கணிப்பை அரசியலாக முன்தள்ளுகின்றது. அந்த மக்களுக்குள் இருந்து எழுகின்ற செயற்பாடுகளை மறுத்து, புலம் பெயர்ந்த தங்கள் குறுகிய சூழலுக்குள் இலங்கை மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் குறுக்கிவிட முனைகின்றனர். இலங்கை அரச பாசிசத்தின் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் நிகரானது தான் இது.

மக்கள் திரள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தான், இலங்கை பாசிச அரசின் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியும். தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டை முன்வைக்காத, அதைக் கோராத, அதுவல்லாத குறுகிய எழுத்து சார்ந்து எழும் புறக்கணிப்புவாத அரசியல், பூர்சுவா வர்க்கத்தின் அற்ப நலன் சார்ந்த குறுகிய வக்கிரமாகும். இந்த அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும்.

பி.இரயாகரன்

22.01.2011