அப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.

 

இலங்கையின் முழுப்பகுதியும் பாசிச இராணுவ சர்வாதிகாரத்துக்கு உட்பட்டுள்ளது. பொது அரசியல் தளம் மிகவும் கடுமையான, இறுக்கமான நெருக்கடிக்குள் சென்றுள்ளது. புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் கடுமையான யுத்தமும், யுத்தப் பிரகடனமும் தொடர்ச்சியாக விடப்படுகின்றது. அந்தவகையில் சகல வளமும், இதற்குள் மையப்படுத்தப்படுகின்றது. இதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை.

 

அடுத்த தேர்தலில் இந்த வெற்றியைக் கொண்டு ராஜபக்ச குடும்பம் அரசியல் நடத்த முனைகின்றது. யுத்தம் மிகத் தீவிரமாக, என்றுமில்லாத மூர்க்கமான வகையில் மையப்படுத்தப்படுகின்றது. யுத்தம் மூலமான வெற்றியே, அடுத்த தேர்தலை வெல்வதற்கான வழியாகிவிட்டது. இதை ஜே.வி.பியும் புரிந்து கொண்டு, இந்த வெற்றியில் பங்கு போட்டுக்கொள்ளத் துடிக்கின்றது. இதனால் இனவாதத்தையும், யுத்த கோசத்தையும் அரசியலாக தனது பங்குக்கு முன்வைக்கின்றது. யூ.என்.பி இதற்கு மாறாக நின்று, அரசை யுத்தத்தில் தோற்கடிப்பதன் மூலம் தேர்தலில் வெல்ல முனைகின்றது.

 

புலிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக யுத்த நெருக்கடி. யுத்தத்தை விரும்பிய புலிகள், அதில் இருந்து தப்பிப்பிழைக்க முனையும் வகையில் இன்று சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தை எதிர்கொண்டு, புலிகள் கடைசித் தற்காப்பை எதிர்கொள்ள தயாராகின்றனர். இதற்கு சாமபேதமின்றி, மோசமான வழிமுறைகளை விட்டால் அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற நிலைக்கு மேலும் கீழிறங்கிவிட்டனர். பாரிய மனித இழப்புக்களை உருவாக்கக் கூடிய, மூர்க்கமான எதிர்த் தாக்குதலை வலிந்து திணிக்கும் நிலைக்குள் புலிகளை அரசியல் நெருக்கடி உருவாக்கியுள்ளது.

 

இப்படி மனித இழப்புகளை அதிகளவில் சந்திக்கும் ஆண்டு, இந்த ஆண்டாக இருக்கும். புலிகள் மேலான பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றிகள், அவர்களின் அடாவடித்தனமான செயலுக்கு மேலும் வழிகாட்டியாக அமைந்துவிடுகின்றது. வெற்றிக்கு இவைகள் நிபந்தனை என்று அது காண்கின்றது.

 

புலிகள் தொடர்ச்சியான உள் மற்றும் வெளி நெருக்கடிகளால், கூனிக் குறுகிச் செல்லுகின்றனர். இவை தமது தொடர்ச்சியான அழித்தொழிப்பால் நடப்பதாக அரசு கருதுகின்றது. இந்த வகையில் அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிப்பதை நியாயப்படுத்துகின்றது. சில அனுபவங்களும், வெற்றிகளும், அவர்களுக்கு புலி அழிப்புக்குரிய வழியாகியுள்ளது.

 

யாழ்குடாவில் புலிகள் வலிந்து தாக்குதலை ஒருதலைப்பட்சமாக நடத்திய போது, அதை பாரிய களையெடுப்பு மூலம், அதன் நிழலைக் கூட அழித்தொழிப்பு மூலம் சிதைத்தனர். அவை மனித உரிமை மீறலாக வெளிவந்த போது, அவற்றை மூடிமறைக்க அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர், கையாளுகின்றனர்.

 

இப்படிப் பேரினவாதம் தனது பாசிச உச்சத்தில் நின்று பேயாக ஆடுகின்றது. அரசின் புலியொழிப்புக்கு எதிரான எந்தக் குரலையும், அது விட்டுவைக்கத் தயாராகவில்லை. தனது இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் நின்று மனித உரிமை மீறலைப் பற்றி ஊளையிடும் எந்தக் குரலையும், அது அனுமதிக்க தயாராக இல்லை. வாயை மூடு, அல்லது மரணித்துப் போ. இதை வெளிப்படையாகவே அரசு சொல்லுகின்றது, செய்கின்றது.

 

தமிழ் மக்களின் யுத்தத்தைப் பயன்படுத்தியே கோடீஸ்வரனாகிய மண்ணெண்ணை மகேஸ்வரனின் படுகொலையும், இப்படித் தான் இதற்குள் தான் நடத்தப்பட்டது. அரசின் பாசிச செயல்களை அம்பலப்படுத்தி, அதில் பிழைப்புவாத அரசியல் செய்வதைக் கூட புலியொழிப்பு அரசால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தனது மனித விரோத செயல்கள் அம்பலமாகும் போது, அரசுக்கு சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிகள் கடுமையானது. இதை வெளிக் கொண்டு வரும் தனிமனித உதிரிகளை, தீர்த்துக்கட்டி அதை மூடிமறைக்க விரும்புகின்றது.

 

புலிசார்பு அரசியல் பிரமுகர்களோ சுயமற்றவர்கள் என்பதால், சுயமாக எதையும் செய்ய முடிவதில்லை. அந்தக் குரலுக்கு பலம் கிடையாது. இவர்கள் கிளிப்பிள்ளைகளாக வைக்கும் ஒப்புவிப்புக்கள், அரசுக்கு எந்தப் பிரச்சனையாகவும் இருப்பதில்லை. அவர்கள் எதைச் சொன்னாலும் உலகில் எடுபடாத வகையில், அவர்கள் ஊரறிந்த புலிப்பினாமிகளாகிப் போனார்கள்.

மறுபக்கத்தில் புலியல்லாத, அரசுக்கு எதிரான தமிழ் பிரமுகர்கள் தான் பிரச்சனைக்குரியவர்களாக உள்ளனர். அரசு செய்கின்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தம் போது ஏற்படும் நெருக்கடியை, அரசால் எதிர்கொள்ள முடிவதில்லை. அரசு அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பை விலக்கி விட்டுவிடுவதன் மூலம், அவர்களை அடிபணிய வைக்கின்றனர் அல்லது கொன்றுவிடுகின்றனர். இதைப் பகிரங்கமாகவே அரசு செய்கின்றது.

 

இது புலிகளின் வழி. புலிகள் மாற்று அமைப்பு உறுப்பினர்களையும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொல்வது தான், தமிழ் தேசியத்தின் அவசியமான பணி என்று கூறி அதையே செய்தனர். செய்கின்றனர். அதையே இன்று அரசும், புலியை ஒழிக்க புலிக்கு சார்பானதாக கருதப்படுவதையும், அதை செய்வதற்கு தடையான மாற்று கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கின்றது. இந்த வகையில் ஒழித்துக்கட்டப்படுவதன் மூலம், அரசியல் சூனியத்தையும் பயங்கரத்தையும் விதைத்துவிடுகின்றனர்.

 

எல்லா மனித உரிமை மீறலையும், வாய் திறந்து கதைப்பது இலங்கையில் குற்றமாகியுள்ளது. இதைப் புலிகள் அமுல்படுத்தியுள்ளனர். அதையே இன்று அரசு செய்கின்றது. எங்கும் மனித அவலங்கள். எல்லையற்ற பாசிச வெறியாட்டம். இந்தியா முதல் அமெரிக்கா வரை இதற்கு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் செய்கின்றது. சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளுக்கும், இதே கதி தான்.

 

வாய் திறவாதே என்பதே தேசியம் முதல் புலியொழிப்பு வரை சொல்லும் செய்தி. இதைப் பற்றி பேசக் கூட, இந்த சமூகத்தில் யாரும் கிடையாது. ஒன்றில் புலி அல்லது புலியெதிர்ப்பில் கூதல் காய்ந்து கொண்டு, வெறியாட்டம் போடுகின்றனர். சமூகம் நடுங்கும் வண்ணம், படுகொலை அரசியல். இது தேசியத்தின் பெயரிலும் புலி ஒழிப்பின் பெயரிலும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

 

 பி.இரயாகரன்
01.01.2008