இதை பற்றி யார் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுகின்றனர். இதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்தவர்கள் யார்? இப்படி தமிழ் சமூகத்தை இருட்டில் வைத்து செய்யும்   அரசியல், பொய்மையும் சூழ்ச்சியும் நிறைந்தது. ஆம் இடதுசாரியம் கூட இதை பேசவில்லை. சந்தர்ப்பவாத அரசியல் மூலம் அரசியல் செய்வதே, புரட்சிகர அரசியல் என்று கருதுகின்ற  எடுகோள்கள் உப்புசப்பு இல்லாத விளக்கங்கள் புளுத்துக் கிடக்கின்றது. எது உண்மையோ அந்த உண்மையைச் சொல்வதன் மூலம் தான், புரட்சிகர அரசியலை உருவாக்க முடியும்.  இதற்கு மாறாக மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலமே ஈழத்து அரசியல் நகர்த்தப்படுகின்றது. மண்ணில், புலத்தில், தமிழகத்தில் எங்கும் இதுதான் அரசியல். தங்கள் குறுகிய அரசியல் மூலம், (இலங்கை) பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்துகின்றனர்.

புலிகளைத் தோற்கடித்ததற்கான காரணத்தை முன்வைக்காத அரசியல் புலி அரசியல் அல்லது அதற்கு ஆதரவான அரசியல். புலிகள் பற்றிய பிரமைகளை தகர்க்காத, அதை  மூடிமறைத்த அரசியல் சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக் கொண்டது. புலி அரசியல் தான் புலியை  தோற்கடித்தது என்பதை சொன்னவர்கள் யார்?, சொல்பவர்கள் யார்? தமிழ் மக்கள் தான் புலியை தோற்கடித்தனர் என்று சொன்னவர்கள் யார்? சொல்பவர்கள் யார்?   

இதைப்பற்றிப் பேசாத அரசியல், சாராம்சத்தில் மூடிமறைத்த புலி அரசியல். இதுவே இடதுசாரியத்தின் பெயரில், இடதுசாரிய பம்மாத்து. இலங்கை அரசும், இந்தியா, சீனா, ஏகாதிபத்தியமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்துதான் புலிகளின் போராட்டத்தை தோற்கடித்தனர் என்று கூறுகின்ற அரசியல் மட்டும் எங்கும் புளுத்துக்கிடக்கின்றது. இதற்குள் தான் புலி அரசியல் வாழ்கின்றது. மானத்தை இழந்த இடதுசாரிகள் இதற்கு கம்பளம் விரித்து, இதற்கு அரோகரா போட்டு கொண்டு உருளுகின்றனர். 

 மொத்தத்தில் வலது முதல் இடது வரை, இதில் இருந்து எதிர்ப்பு அரசியல் முன்தள்ளுகின்றனர். இதன் பின்னணியில் ஏகாதிபத்திய எதிர்ப்புவரை கட்டமைக்கின்ற, பல முரண் கொண்ட குறுந்தேசிய அரசியல் வரை விதவிதமாக முன்தள்ளுகின்றனர். இப்படி நாம் ஏன் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை, வலதுகள் முதல் இடதுகள் வரை மூடிமறைக்கின்றனர். இப்படி பொது அரசியல் களம் இருக்க, மக்களைத் தொடர்ந்தும் மந்தைகளாக நிறுத்தி அரசியல் நடத்துகின்றனர்.

இலங்கை அரசு, இந்தியா, சீனா, ஏகாதிபத்தியம், தமிழ்தேசிய போராட்டம் ஆயதப்போராட்டமாக தொடங்க முன்பே உலக மக்களின் பொது எதிரியாக இருந்து வந்துள்ளது. இது ஏதோ நேற்று இன்று திடீரென முளைத்ததல்ல. இப்படியிருக்க புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின், இவைகளை முன்னர் என்றுமே இல்லாத புதிதான ஒன்றாகக் காட்டி கட்டமைக்கின்ற மூடிமறைத்து நடத்தும் சுத்துமாத்து அரசியல் தான், உண்மையில் இந்தப் போராட்டத்தை தோற்கடித்தது.           

 இந்த வகையில் தோற்கடித்த அரசியலை குறிப்பாக வரையறுப்பது அவசியம்; 

1.சர்வதேச அரசியலை நிராகரித்து, குறுந்தேசியம் மூலம் முன் தள்ளிய அரசியல்

2.தமிழ்மக்களை தோற்கடித்து உருவான குறுந் தமிழ்தேசிய அரசியல்

3.புலிகளின் குறுகிய பாசிச மயமான மாபியா புலித்தேசிய அரசியல்

இதுதான் எமது போராட்டத்தைத் தோற்கடித்தது. இது தான் முதலில் மக்களைச் தோற்கடித்தது. எதிரி எம்மை முதலில் தோற்கடிக்கவில்லை. எமது மக்களை நிராகரித்து எம்மை நாம் தோற்கடித்த பின்னணியில் தான் எதிரி வென்றான்.

 எதிரி பயன்படுத்திய ஆயுதங்கள், போர்க்குற்றச் செயல்கள், எதிரியின் ராஜதந்திரங்கள், எமது போராட்டத்தை தோற்கடிக்கவில்லை. நாங்கள் எங்கள் மக்களை தோற்கடித்த பின்னணியில் தான், இவை எல்லாம் அவனுக்கு இலகுவாய் உதவின.

யுத்தத்தின் வெற்றியையும் தோல்விiயும் தீர்மானிக்கின்ற தீர்மானகரமான சக்தி, மக்கள் சக்திதான். மக்களின் மேலான சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளை களையப் போராடாத  போராட்டம், மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. சமூக பொருளாதார ஒடுக்குமுறைகளை முன்நின்று செய்கின்ற, அதை பாதுகாக்கின்ற, அதைத் தக்க வைக்கின்ற ஒரு போராட்டமாக மாறி சீரழிகின்றது. இதைத்தான் தமிழ்தேசிய போராட்டத்தின் பெயரில் செய்ததன் மூலம், மக்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் விளைவு மக்கள் குறுந்தேசிய போராட்டத்தில் இருந்து விலக்கியும்,  ஒதுக்கியும், மந்தைகளாக்கப்பட்ட போது, போராட்டத்தையே மக்கள் தோற்கடித்தனர்.          

 இப்படி உண்மைகள் பலவாக இருக்க, இதை விமர்சிக்காத, இதை சுயவிமர்சனம் செய்யாத வலது முதல் இடது வரையான பம்மாத்து அரசியல் தான் இன்று வரை தொடருகின்றது.

இலங்கை அரசு, இந்தியா, சீனா, ஏகாதிபத்தியம் என்று, தம் குறுகிய எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கும் தமிழ் தேசியம், நாம் எப்படி எம்மால் தோற்றோம் என்பதையே மூடிமறைத்து விடுகின்றது. மக்களுக்கு தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றிவிடுகின்றது. இதன் மூலம் பிழைக்க முனைவது தான், இன்று தமிழ் தேசியமாக உள்ளது. வலதுகள் முதல் இடதுசாரியம் வரை, இன்று செய்யும் பம்மாத்து அரசியலும் இதுதான். மக்களுக்கு முன் உண்மைகள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய தமிழ்தேசிய ஈழ அரசியல் உள்ளடக்கம். பொய்மையும் சூழ்ச்சியும் கொண்ட, மூடிமறைத்த பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியல் தான் எங்கும் புளுத்துக்கிடக்கின்றது.     

பி.இரயாகரன்
21.01.2011