01202022வி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் பொம்மை ஆட்டம்

ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட அடுத்த நிமிடமே, கிழித்தெறியும் பேரினவாத பரம்பரையில் வந்தவர் தான மகிந்தாவும். அதன் தொடர்ச்சியில் பேரினவாதம் பாசிசத்தை தன் ஆதாரமாகக்கொண்டு, வேசம் கட்டி ஆட்டம் போடுகின்றார்.

யாழ்ப்பாணத்திற்கு பொங்கப்போன மகிந்த, பாசிட்டுக்கே உரிய நவீன மொழியிலும் தான் பொங்கினார். இவர்கள் கொன்று குவித்த கொடூரர்கள் மட்டுமல்ல, நஞ்சைக் கக்கி அழிக்கும் பாம்புகள் கூடத்தான். இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் ஒன்றைச் சொல்லி, மக்களை ஏய்கின்ற பச்சோந்திக் கூட்டம். பேரினவாத வரலாறு எங்கும், தமிழ்மக்களை ஏய்ப்பதன் மூலம் தங்கள் பேரினவாத ஆட்சியை தமிழ்மக்கள் மேல் திணித்தனர், திணித்துவருகின்றனர்.

இனத்துக்கிடையிலான குறகிய இனவாத யுத்தம், புலிகளின் தவறான அதன் சொந்த அரசியலால் அது அழிந்ததன் மூலம், தவிர்க்க முடியாது யுத்தமும் முடிவுக்கு வந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பேரினவாதம், இனப்படுகொலையையே நடத்தியது. சரணடைந்தவர்களையும், கைது செய்தவர்களையும் கொன்று, பாரிய போர்க்குற்றத்தில் கூட ஈடுபட்டது. சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கி, இதை மூடிமறைக்க முடியாது திணறும் பேரினவாதம் தான், மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்கக் கூட மறுக்கின்றது.

இவ்வளவு காலமும் புலி தான் இதற்கு தடை என்று கூறியவர்களும், தமிழ்மக்களுக்கு தங்கள் சொந்தத் தீர்வை வைக்கத் தவறியவர்களும் இந்தப் பேரினவாதிகள் தான். யுத்தத்தின் பின், இன்று தீர்வு பற்றி பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர். இதை மூடிமறைக்க தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வந்தால் மட்டும் தீர்வு தர தயார் என்கின்றனர். இப்படி தொடர்ந்து காலாகாலமாக சொந்த இனவாதத்தை அரசியலாகக் கொண்டு நாட்டை ஆண்டவாகள், தொடர்ந்து அப்படியே ஆளுகின்றனர். மக்களை ஏய்க்க காலாகாலமாக செப்பிடுவித்தைகளை கொண்டே ஏமாற்றி வருகின்றனர்.

யுத்தத்தின் முன் இனம் சார்ந்த பாராளுமன்ற கட்சிகளுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் முன்வைக்க முடியாது போன பேரினவாத அரசியல் தான், யுத்தத்தின் பின் மறுபடியும் கொக்கரித்தபடி தொடருகின்றது.

இம்முறை இனத்துக்குள் பிளவுகளையும், விலைக்கு வாங்குவதையும் திட்டமிட்டு செய்வதன் மூலம், இந்த அரசு தமிழ் மக்களை ஒடுக்குகின்றது. தமிழருக்கு இடையில் முரண்பாட்டை கூர்மையாக்கி, அதில் குளிர்காய்கின்றது.

மறுதளத்தில் பாசிட்டுக்கே உரிய வக்கிரத்துடன், தமிழில் புலம்பிக் காட்டி வேசம் போடுகின்றனர். இப்படி சிங்களவன் தமிழில் பேசுவதுதான் தீர்வுக்கான சமிக்கை என்று, எச்சில் பொறுக்கி நாய்கள் எல்லாம் குலைக்குமளவுக்கு பிரித்தாளும் பாசிச கலையை பாசிட்டுகள் நவீனமாகவே கையாளுகின்றனர்.

யாழில் பொங்கப்போனவர் மக்களை நெருங்க முடியாத வளையத்தில் நிற்க வேண்டிய ஒரு கொடுங்கோலனாக தன்னைத்தான் இனம் கண்டு கொண்டான். அதனால் படைகளையும், எச்சில் பொறுக்கிகளையும், அப்பாவி மக்களை சூழ நிறுத்தியும் தான் பொங்கித்தள்ளினர்.

பானைக்கு நெருப்பு வைத்த கையுடன், தமிழ் இனத்துக்கும் நெருப்புவைத்தார். "தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்" என்கின்றார். மக்களுக்காக மக்களுடன் ஒரு நாட்டின் தலைவனாக இணைந்து செயற்படாமல், மக்களை வெல்ல ஒரு தீர்வை வைக்க மறுக்கின்ற பேரினவாத பாசிட்டாகவே நின்று இதைக் கூறுகின்றார். தன்னையொத்த குறுகிய தமிழ் இனவாதக் கும்பலை, தனது பங்காளியாக மாறுமாறு தான் கோருகின்றார். இதுதான் மக்களுக்காக செய்யும் பணி என்கின்றார். மக்களுக்காக தாங்கள் செய்யவேண்டியதை மறுத்தபடி, தங்கள் பேரினவாத அரசியலால் தெரிவான தமிழ் குறுந்தேசிய மக்கள் விரோதக் கும்பல் தம்முடன் இணைவதுதான் மக்களுக்கு செய்யும் பணி என்கின்றார்.

இப்படி தமிழ்மக்களுக்கு எதிராக பொங்கிய "மாண்புமிகு" மகிந்தா "மாபிஃயாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்" என்கின்றார். வேடிக்கைதான் போங்கள். மாபியாவே நீங்கள்தான். கடத்தல், கப்பம், கொலை.. என்று அனைத்தும் செய்யும் உங்கள் சட்டத்தின் ஆட்சியை மிஞ்சிய மாபியாத்தனம் இன்று இலங்கையில் கிடையாது. உங்களுடன் இல்லாத அனைவரையும் ஓழித்துக்கட்டும் சர்வாதிகார மாபியாத்தனத்தை மகுடமாகக் கொண்ட, மன்னரே நீங்கள் தான்.

இதை மீறி "எவரும் தனித்தோ பிரிந்தோ வாழமுடியாது" என்று கொக்கரிக்கின்ற பாசிட்டும் நீங்கள் தான். "தனித்தோ பிரிந்தோ" என்பது உனது ஜனநாயகத்தின் வெளிப்பாட்டில்தான் இருக்கின்றது. தமிழ்மக்களின் உரிமையை வழங்கினால் யாரும் "தனித்தோ பிரிந்தோ" வாழ மாட்டார்கள். நீயும் உன் அரசும் அதை மறுக்கும் போதுதான், "தனித்தோ பிரிந்தோ" செல்வது என்பது, அதன் இயல்பான அரசியல் விதியாகின்றது. தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறும் போது தான், பேரினவாத அரசியலுக்கும் தமிழ் குறுந்தேசியவாத அரசியலுக்கும் இடமில்லாமல் போகும். அது வரை இவ்விரண்டும் மக்கள் விரோத போக்குடைய, மக்களை தொடர்ந்து பிரிந்துவைக்கும் குறுகிய அரசியலை நடத்தும்;. இதற்கு எதிரான தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஜக்கியம் தான், இதை அரசியல் ரீதியாக முடிவுகட்டும். இதற்கு வெளியில் மாற்று எதுவும் கிடையாது.

பி.இரயாகரன்

19.01.2010


பி.இரயாகரன் - சமர்