ரத்தன் டாடாஉலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.

“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

“தனிப்பட்ட உரையாடல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?” என்று திடீரென்று நீதிபதி கேட்டுவிடவே, “எப்போது இரவு விருந்து அருந்தப் போகிறீர்கள், என்பன போன்ற உரையாடல்களை சொல்கிறேன்” என்று சமாளித்து விளக்கமளித்தார் டாடாவின் வக்கீல்.

இந்த பதிலைக் கேட்டு சட்ட அறிவும், ஜனநாயக உணர்வுமற்ற பாமரர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக்,ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.

ரூ. 1,76,000,00,000,000 என்று உயிரற்ற பூச்சியங்களால் குறிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, வாய்க்குள் உயிரையும் ஊதி விட்டிருக்கிறார் நீரா ராடியா என்ற அதிகாரத் தரகு தேவதை. கருணாநிதி குடும்பத்துக்குள் நடக்கும் குத்துவெட்டு சீரியல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நேயர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்னுடைய உயிர் வாழும் உரிமை பறிபோய் விட்டது” என்று அலறுகிறார் டாடா.

விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!

இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.

இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் அம்பலமாவது இந்திய ஜனநாயகத்தின் உயிர் வாழும் உரிமையையே பறிக்கும் விபரீதமல்லவா? ஸ்பெக்ட்ரம், கோதாவரி எரிவாயு, சிங்குர் விளைநிலம், காடுகள், கனிவளங்கள் என பொதுச்சொத்துகளைக் கொள்ளயடித்துத்தான் முதலாளித்துவம் உயிர்வாழ்கிறது எனும்போது, அந்தக் கொள்ளையின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் வெளியிடுவது முதலாளித்துவத்தின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் ‘இராஜதந்திரப் பரிமாற்றங்கள்’ உலகெங்கும் விரவியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறித்துவிடும் என்று அலறியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். உண்மைகளும் கூட உலகமயமாகித்தான் இருக்கின்றன!

“உயிர் வாழும் உரிமை என்பது விலங்குகளைப் போல உயிர் தரித்திருக்கும் உரிமை அல்ல, மனித கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை” என்று குடிசை இடிப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முன்னொரு காலத்தில் வியாக்கியானம் அளித்திருக்கிறது.

“பசி என்ற விலங்குணர்வை ஆற்றிக் கொள்வதற்கு புழுத்துப் போகும் அரிசியை ஏழைகளின் வயிற்றில் எறியக்கூடாதா?” என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்டபோது, அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங். அந்த உரிமைதான் இப்போது டாடா கேட்கும் உரிமை. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

_____________________________________________

- புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 2010
_____