Language Selection

கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதலாக நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவில் மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்திய ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏதோ தேவதூதர் பூமிக்கு எழுந்தருளியதைப் போல வானளாவப் புகழ்ந்து, அவரைத் துதிபாடின. சிறுவர்களுடன் சேர்ந்து அவர் ஆடிய டப்பாங்குத்து டான்சையும், அவரது மனைவி பாண்டி விளையாடியதையும் அவரது "எளிமை'யையும் வியந்தோதி, ஒபாமாவின் இந்திய வருகையால் அமெரிக்க முதலீடு அதிகரித்து நாட்டில் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடப் போவதைப் போல, ஒரு கீழ்த்தரமான சினிமாவை இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தின.

 

இந்திய வருகைக்கு முன்னதாக ""நியூயார்க் டைம்ஸ்'' நாளேட்டில் ஒபாமா எழுதிய கட்டுரையில், ""நமது ஒவ்வொரு பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கும் அமெரிக்காவில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்தியச் சந்தையில் தங்கு தடையின்றி நாம் நுழைவதற்கான சூழலை உருவாக்குவதே எனது பயணத்தின் நோக்கம். அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெருக்குவதே உடனடி இலட்சியம்'' என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவரது இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் நோக்கத்தை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

 

தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு வளரும் நாடுகள் சந்தையை அகலத் திறந்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ""உலக வர்த்தகக் கழக விதிகளின்படி, இந்த விசயத்தில் சம அளவிலான போட்டி இருக்க வேண்டும்; எனவே, உங்கள் நாட்டு விவசாய உற்பத்திக்கும் விளைபொருட்களுக்கும் நீங்கள் கொடுக்கும் மானியத்தைக் குறையுங்கள்'' என்கின்றன வளரும் நாடுகள். இது அமெரிக்காவுக்குச் சங்கடமாக இருக்கிறது. இதனால்தான் கொல்லைப்புறமாக இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுடன் பேரங்கள், ஒப்பந்தங்கள் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது, அமெரிக்கா.

 

எனவேதான், ""அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுமிடையே கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அடுத்த ஜந்தாண்டுகளில் இரட்டிப்பாகும்'' என்று அறிவித்த ஒபாமா, ""அமெரிக்காவின் 12வது வர்த்தகப் பங்குதாரராக உள்ள இந்தியா, முதன்மைப் பங்குதாரராக வருவதற்கு வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும்'' என்று நிபந்தனை விதித்து இந்தியஅமெரிக்க வர்த்தகக் கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான கிராவ்லி, அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்து விட்டது என்று ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார். மொத்தத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை இந்தியாவின் தலையில் பகுதியளவுக்கு ஏற்றிவிட்டு, அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அமெரிக்க முதலாளிகளின் ஆதாயத்திற்காகவுமே ஒபாமா இந்தியாவுக்கு வந்து ஒப்பந்தங்களைப் போட்டுள்ளார்.

 

இந்த ஒப்பந்தங்களின்படி, சில்லறை வணிகம், வங்கி காப்பீடுதுறை, விவசாயம், உயர்கல்வி முதலானவற்றில் அமெரிக்க முதலீட்டுக்குக் கதவை அகலத் திறந்து விடுவதன் மூலம் இந்திய நாடு முற்றாக அமெரிக்காவின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொள்ளும். அமெரிக்காவின் வால்மார்ட்டும், மான்சாண்டோவும், தீவட்டிக் கொள்ளை நிதி நிறுவனங்களும், டப்பா பல்கலைக்கழகங்களும் வரை முறையின்றி நாட்டைச் சூறையாடும். அமெரிக்காவின் அயல்பணி (அவுட்சோர் சிங்) களைச் செய்து வந்த இந்தியாவுக்கு இனி வரம்புகள் நீடிக்கும். இவை தவிர, இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து தனியார் பங்கேற்புடன் 1000 கோடி டாலர் தொகையுடன் நிதித் தொகுப்பு உருவாக்குவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நீடித்த பசுமைப் புரட்சிக்கு ஒத்துழைப்பு என ஒபாமா வருகையையொட்டி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களைவிட, இராணுவ மற்றும் அணுஉலை தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கியமானது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளில் கழித்துக் கட்டப்பட்ட அணு உலைகளை இந்தியாவில் நிறுவி அதில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பிலிருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றிவிடும் வகையில் புதிய சட்டத்தையும் அண்மையில் மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், விபத்து ஏற்பட்டால் அணுஉலையை வழங்கிய அமெரிக்க முதலாளிகள் மீது அணுஉலையை இயக்குபவர்கள் எந்த வகையிலும் இழப்பீடு கோர முடியாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் ஆகிய அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளைப் பெறத் தடையாகவுள்ள அணுவிபத்து இழப்பீடு சட்டத்திலுள்ள விதிகளை, வருமாண்டிற்குள் இந்தியா திருத்தியமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தெற்காசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் நம்பகமான அடியாளாக இந்தியாவை நிலைநாட்டுவதே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலாகும். ஒபாமாவின் ஒப்பந்தங்களின்படி, இந்திய விமானப்படைக்கு நீண்டதூரம் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு செல்லக் கூடிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான சி17 ரக விமானங்கள் பத்து இந்தியாவின் தலையில் கட்டப்பட்டுள்ளன.

 

அமெரிக்காவின் காலனியாதிக்கக் கொடுங்கோன்மை தொடரும் ஆப்கானிஸ்தானில், அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் இந்தியாவுக்கு கூடுதல் இடமளிக்கப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். ஆப்கானில் நேரடியாக நேட்டோ படைகளுடன் இணைந்து போர்த் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடாது என்றாலும், ஆப்கான் தேசியப் பாதுகாப்புப் படைக்குப் பயிற்சியளிக்கும் வேலையில் ஈடுபடும். தரகுப் பெருமுதலாளிகள் ஆப்கானில் கட்டுமான மறு சீரமைப்புப் பணிகள், இராணுவப் பயிற்சி முதலானவற்றின் மூலம் ஆதாயமடைய முடியும் என்பதால் இத்திட்டத்தைப் பேருற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.

 

இராணுவத் தளவாட உற்பத்தியில் நேரடி அந்நிய முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக இந்தியா உயர்த்தியிருப்பதும், வரும் மார்ச் மாதத்திற்குள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்பில் இராணுவத் தளவாடங்களை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் இணைத்துப் பார்த்தால், இந்தியா எவ்வாறு தெற்காசிய வட்டகையில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் பங்களா நாயாக வளர்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

இந்தியாவுக்கு வந்த ஒபாமா, பாகிஸ்தானை கண்டித்து அடக்கிவைப்பார், ஜ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர இடம்பெற உதவுவார் என்ற ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விட்டது. ஜ.நா. மறுசீரமைப்பு செய்யப்படும்போது நிரந்தர இடத்தைப் பெற, இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்து எடுக்கும் நிலைப்பாடுகள்தான் உதவும் என்கிறார், ஒபாமா. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அடங்க மறுக்கும் ஈரான், வடகொரியா, கியூபா முதலான நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை இந்தியா விசுவாசமாக ஆதரிக்க வேண்டும்; நாளை இன்னும் இதர நாடுகள் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளையும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

 

அமெரிக்க மேலாதிக்க வல்லரக்கும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகுக்கும் விசுவாச அடியாளாகச் செயல்படுவதன் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து, இந்தியப் பெருமுதலாளிகள் தெற்காசிய வட்டகையில் தமது சந்தையை விரிவுபடுத்தி, நாட்டை "வல்லரசாக்க' விழைகிறார்கள். அதற்காக நாட்டை விற்கவும் அவர்கள் தயங்குவதில்லை. ஒபாமாவின் வருகையும் போடப்பட்டுள்ளள ஒப்பந்தங்களும் இந்த உண்மையை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

• மனோகரன்