கடலூர்நகரமா, இல்லை நரகமா எனக் கேட்குமளவுக்கு, அந்நகரில் அரைகுறையாக இருந்துவந்த அடிக்கட்டுமான வசதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டன. பாதாளச் சாக்கடை அமைப்பது என்ற பெயரில் அந்நகரையே பாதாள உலகமாக மாற்றிவிட்டது, நகராட்சி நிர்வாகம். பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக நகரில் ஒரு இடம்கூடப் பாக்கியின்றி அனைத்துச் சாலைகளையும் தெருக்களையும் நகராட்சி குதறிப் போட்டிருப்பதால், போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நகரமெங்கும் சீர்கெட்டுக் கிடக்கின்றன.

 

மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில்கூட நகரவில்லை. 66 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், அதிகார வர்க்கத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக மாறிவிட்டது.

 

இதுவொருபுறமிருக்க, ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற வேலைகளுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வரும் தானம் நகர், நவநீதம் நகர், சங்கர நாடார் தெரு, கம்மியம்பேட்டை ரோடு ஆகிய பகுதிகள் நகராட்சி நிர்வாகத்தால் அடியோடு புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அப் பகுதிகளில் ஒழுங்கான சாலை கிடையாது, கழிப்பறை கிடையாது, மின்சாரம் கிடையாது. பன்றித் தொழுவங்களைவிடக் கேடுகெட்டுப் போன இடத்தில் உழைக்கும் மக்கள் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.

 

இந்த அவலத்தைக் கண்டித்தும், பாதான சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரியும் கடலூர் நகரில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் புதிய ஜனநாயகக் கட்டுமான தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.11.2010 அன்று, தானம் நகர் பெட்ரோல் பங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் இப்புரட்சிகர அமைப்புகளைச் Nர்ந்த தோழர்கள் மட்டு மின்றி, கடலூர் நகரப் பேச்ரிமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.செல்வம், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் செந்தில்குமார், ம.தி.மு.க.வின் 24 ஆவது வட்டப் பிரதிநிதி திரு.கே.துரை ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

 

இதே கோரிக்கையை முன்வைத்து கடலூர் அனைத்து மோட்டார் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 23.11.2010 அன்று கடலூர் நகரில் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திலும் இப்புரட்சிகர அமைப்புகள் பங்கு கொண்டன. முழுஅடைப்பு நாளன்று பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலுவையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மன்னாதனையும் பேரணி தொடங்குவதற்கு முன்பே போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர். அதன் பின், பேரணியைப் பாதிவழியிலேயே மறித்த போலீசார், 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். எனினும், பேரணியில் கலந்துகொண்ட பலர் போலீசாரிடமிருந்து தப்பித்து, ஜவான்ஸ் பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு போலீசாரின் முகத்தில் கரியைப் பூசினர். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி சட்டபூர்வமான வழியில் போராடுவதைக்கூட தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடிவதில்லை என்பதைத்தான் இந்த அடக்குமுறை எடுத்துக் காட்டுகிறது. பு.ஜ. செய்தியாளர், கடலூர்.