திருச்சி திருவரங்கம் கோவிலில் முக்கிய திருவிழாக்களின் பொழுது, வேதவியாச பட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ""பிரம்மரத மரியாதை'' செய்யப்படும். இப்பட்டர்களுக்கு மாலைகள், சந்தனம் கொடுத்து, பல்லக்கில் அமர வைத்து, யானை முன்னே செல்ல குடை மற்றும் தீப்பந்தங்கள் பிடித்து, அப்பல்லக்கை மனிதர்களே தூக்கிச் சென்று அவர்களை வீட்டில் கொண்டுபோய் விடுவதுதான் பிரம்மரத மரியாதை.
தமிழகத்தில் கைரிக்ஷா இழுப்பது ஒழிக்கப்பட்ட பின்னும், மனிதர்களை மனிதர்களே தூக்கிச் செல்லும் இந்த இழிவை, மதச் சம்பிரதாயம், குருவுக்குச் சிஷ்யன் செலுத்தும் மரியாதை என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகிறது, பார்ப்பனக் கும்பல்.
இந்த இழிவைச் சகித்துக் கொள்ள முடியாத பல்லக்குச் சுமக்கும் கோவில் ஊழியர்கள் இனி பல்லக்குத் தூக்க முடியாது எனக் கலகத்தில் இறங்கினர். இதனையடுத்து திருவரங்கம் கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன், ""கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்குத் தூக்கமாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் தங்களின் சொந்த பல்லக்கில் அமர்ந்துகொண்டு, அதனைத் தூக்கிச் செல்ல தாங்களே வெளியாட்களை நியமித்துக் கொள்ளலாம்'' என ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து, லெட்சமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பட்டர்கள் இணை ஆணையர் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர்.
பார்ப்பனக் கும்பல் திணித்துவரும் இந்த இழிவுக்கு எதிரான கோவில் ஊழியர்களின் போராட்டத்தை அறிந்த திருச்சி நகரைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், சுயமரியாதைமிக்க சமூக ஆர்வலர்களும் கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். குறிப்பாக, மனித உரிமை பாதுகாப்பு மையம், ""இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி'' மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து, பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
வழக்கு நிலுவையில் இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, கடந்த 17.11.2010 கைசிக ஏகாதசி நாளன்று, ""கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தங்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல பாதுகாப்பு தர வேண்டும்'' எனக் கோரி பட்டர்கள் போலீசிடம் மனு கொடுத்தனர். கோவில் பிரகாரத்தில் பல்லக்கில் செல்லத் தடை விதித்த போலீசு உதவி ஆணையர், வெளியில் தங்களின் சொந்தப் பொறுப்பில் பல்லக்கில் செல்ல பட்டர்களுக்கு அனுமதி வழங்கினார்.
"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலாக இருந்தாலும், வெளியிடமாக இருந்தாலும் சமூகக் குற்றம் தான்; உழைக்கும் மக்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் எனப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்வதை அனுமதிக்க முடியாது. இதையும் மீறி பட்டர்கள் பிரம்மரத மரியாதையை நடத்த முயன்றால், அதைத் தடுத்து நிறுத்துவோம்'' என திருச்சி நகரைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகமும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து அறிவித்தன.
இதன்படி, கைசிக ஏகாதசி நாளன்று ம.க.இ.க., மற்றும் ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர்கள் திருவரங்கக் கோவிலின் öரங்கா கோபுரம் முன்பாகத் திரண்டனர். சூத்திர ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசின் போலீசோ, பட்டர்கள் கோவிலுக்கு வெளியே பிரம்மரத மரியாதையை நடத்துவதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்ததோடு, மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் போஜ குமார் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் உள்ளிட்ட ஏழு பேரைக் கைது செய்து போராட்டத்தைத் தடுத்துவிட முயன்றது.
கைசிக ஏகாதசி நாளன்று அதிகாலையிலேயே, கவுசிகப் புராணம் பாடிய பின், தனது சொந்தக் காசைப் போட்டுத் தயாரித்திருந்த பல்லக்கில் ஏறி, கோவில் முன்வாசல் வழியாகப் பவனி வருவதற்கான ஏற்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், தான் நக்சல்பாரி புரட்சியாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டு, தனது ஏற்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, கோவில் நிர்வாகம் அளித்த மாலை, சந்தனம், குடை போன்ற மரியாதைகளைக்கூட ஏற்றுக் கொள்ளும் தெம்பின்றி, பின் வாசல் வழியாக போலீசின் பாதுகாப்புடன் தப்பியோடிப் போனார்.
1993 இல் திருவரங்கம் கோவிலின் கருவறைக்குள் நுழைந்து, இந்துமதம் என்பது பார்ப்பன மதம் என்பதை இந்தியாவெங்கும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டிய நக்சல்பாரி புரட்சியாளர்கள், இன்று அக்கோவிலில் மதச் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்துவரும் இழிவை, பார்ப்பனத் திமிரைத் துடைத்தெறிந்துவிட்டனர்.
இந்த வெற்றியை திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், ""தமிழகத்தைப் பார்ப்பனியத்தின் கல்லறை யாக்குவோம்! பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலை நாட்டுவோம்!!'' என விண்ணதிர முழக்கமிட்டும் கொண்டாடினர்.
இணை ஆணையரின் உத்தரவை அமல்படுத்துவதற்கு திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்திருந்தபோதும், ம.க.இ.க. தோழர்கள்தான் களத்தில் இறங்கி, போலீசின் உதவியுடன் பட்டர்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த பிரம்மரத மரியாதையைத் தடுத்து முறியடித்தனர். ஆனால், தி.க. வீரமணி கும்பலோ, ஏதோ தங்களின் போராட்ட அறிவிப்பாலும், விடுதலை நாளிதழில் செய்தி வெளியிட்டதாலும்தான், பட்டர் பின்வாசல் வழியாக ஓடிவிட்டதாகத் தனது பத்திரிகையில் எழுதி, இந்த வெற்றியைச் சொந்தம் கொண்டாட முயலுகிறது. தான் கூவிதான் பொழுது விடிகிறது எனச் சேவல் எண்ணிக்கொள்வதைதான் வீரமணியின் தம்பட்டம் நினைவுபடுத்துகிறது. ம.க.இ.க., திருச்சி.