06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

'இரக்கமற்ற கோழைகளின் அரசியல் உருவாக்கும் மனித அவலங்கள்" என்ற நூலின் முன்னுரை

அவலமும் துயரம் நிறைந்த ஒரு சமூகம் தான் தமிழ் இனம். இன்று எமது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.

 

இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைப்பற்றி உரையாட முனைகின்றது.

 

சிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துகின்றனர். மக்கள் அந்தக் கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என பரஸ்பரம் கூறிக்கொள்கின்றனர்.

 

இதை மீறி எதையும் ஆக்கப+ர்வமாக செய்யமுடியாது. அவை செய்யக் கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இது மீறப்படும் போது, காணாமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அரித்து சிதைத்து வந்தனர், வருகின்றனர்.

 

இந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடுமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாக அனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை.

 

உரிமையைக் கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாக வாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன.

 

இதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்க்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணாமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புக்கள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை.

 

இதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதைக் கண்டு கொள்ளாத அசமந்தமான வக்கிரமான போக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.

 

இதன் மேல் தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது.

 

இப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம். நாங்கள் வாழ்வில் உணருகின்ற எங்கள் பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும், யாரும் தங்கத்தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை.

 

பி.இரயாகரன்
19.12.2007


பி.இரயாகரன் - சமர்