மனிதனின் இரக்க உணர்வையும் உதவும் மனித மனப்பாங்கையும் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் கூட்டம் மனித அவலத்தை தனது மூலதனமாக்குகின்றனர். கிழக்கு வெள்ளத்தைக் காட்டி தனிமனிதர்கள், வானொலிகள் முதல் அரச எடுபிடிகள் வரை கொய்யோ முறையோவென்று புலம்பிப் பணம் திரட்டுகின்றனர். வெளிப்படையான கணக்குவழக்கற்ற, அதே நேரத்தில் கடந்த காலத்தில் பணம் திரட்டிய கணக்கு எதையும் வெளிப்படையாக முன்வைக்காதவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களுடன் நிற்காதவர்கள், மக்களின் யுத்த துன்பங்களுக்கு காரணமானவர்களுடன் கூடி நின்றவர்கள், எப்படி பொதுநிதியை திரட்டி அதை மக்களுக்கு நேர்மையாக பயன்படுத்துவார்கள்?

ஒன்றில் நேர்மையற்றவர், மற்றதில் நேர்மையாக இருக்க முடியாது. யாரெல்லாம் மக்களுடன் இல்லையோ, அவர்கள் மக்களுக்கு குழிபறிப்பவர்கள்தான். மக்கள் விரோதமே இன்று ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில், மனித அவலங்கள் வருமானத்துக்குரியதாகின்றது.

 

 

 

கடந்த காலத்தில் யுத்தமும், சுனாமியும் பலரை பணம் பண்ண வைத்தது. மக்களுக்கு உதவுவதாக கூறியும், மக்களின் அவலத்தைக் காட்டியும் கொழுத்த பெருச்சாளிகள் தான், எம்மைச் சுற்றி இன்று அரசியல் நாட்டாமை செய்கின்றனர்.

அரசியல் முதல், உதவுவது வரை, எது உண்மையானது எது போலியானது என்பதை கண்டுபிடிக்க முடியாதவாறு, அனைத்தையும் மூடிமறைத்துக் கொண்டுதான் செயல்படுகின்றனர். இப்படி அனைத்தும் மக்களின் பெயரில், மக்களுக்கு எதிராகவே கையாளப்படுகின்றது.

யுத்தம் நடந்த காலம் முழுக்கவும், சுனாமி காலத்திலும் புலிகள் மூலம் பாரியளவிலான மக்கள் நிதி சூறையாடப்பட்டது. எம் மண்ணில் இருந்து புலம் வரை, பல ஆயிரங்கள் தொடங்கி கோடிக்கணக்கிலான பணத்தை தனிப்பட்ட சிலர் தமதாக்கினர். இதுபோல் யுத்தத்தின் பின் புலிச் சொத்துகள் எதையும், தமிழ் மக்களின் ஒரு பொதுநிதியமாக மாற்றவில்லை. யுத்தின் பின், நாம் முதன்முதலில் இந்த அரசியல் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அவை எல்லாம் தனிப்பட்ட நபர்களின் சொத்தாகின. இந்த சொத்தை தக்கவைக்கும் அவர்களின் உள் போராட்டம் தான், புலத்தில் புலித் தேசியமாக நீடிக்கின்றது.

இப்படியிருக்க கிழக்கின் வெள்ளம், இம்முறை புலியல்லாத அரச எடுபிடிகளை வாழ வைக்கின்றது. அரசியல் ரீதியாக மக்கள் விரோதிகளாக நீடிக்கும் இந்தக் கூட்டம், அரசின் ஆதரவுடன் வெள்ள நிவாரணம் கோருகின்றது.

மக்களுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக அரசியல்ரீதியாக செயல்படுவர்கள், என்றும் எப்போதும் எங்கும் நேர்மையாக இருக்கவும் செயல்படவும் முடியாது. அன்று புலிக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்றும் மக்களுக்கு நேர்மையாக செயல்பட முடியாது என்ற உண்மை எப்படியோ அப்படித்தான் இதுவும். கிழக்கு வெள்ள நிவாரணம், மக்கள் விரோத அரச அரசியல் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் வழி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அடுத்த அழிவுக்காக, இந்த அவலத்தை பயன்படுத்துகின்றனர்.

 

மனித அவலத்துக்கு உதவுவது எப்படி?

 

நீ முட்டாளாக இருக்காதே. உனது பணத்துக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாதவரை உதவாதே. உனது மனிதாபிமானம் உண்மையானது என்றால், கொடுக்கும் இடம் மட்டுமல்ல, சேரும் இடத்தையும் கண்காணி. இரண்டு இடத்திலும் மோசடிகள் நடக்கின்றது. இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிடும் உரிமையை உறுதி செய். இதுவல்லாத, இதற்கு உடன்படாத எதற்கும் நீ உதவாதே. அனைத்தையும் வெளிப்படையாக வைக்கக் கோரு.

மனித அவலத்துக்கு நீங்கள் உதவுவதும், அந்த மக்களுக்கு அது கிடைப்பதை நீ உறுதி செய்யாத வரை, உனது உதவி அந்த மக்களுக்கே எதிரானது. வெளிப்படையான, ஆனால் அனைவரும் கண்காணிக்கக் கூடிய வழிமுறைகளை முன்வைக்காத எதற்கும் நிதி உதவி வழங்குவது என்பது முட்டாள்தனமாகும்;.

பொதுவாகவும் வெளிப்படையாகவும் இன்றைய நவீன தொழில் நுட்பம் மூலம், உடனுக்குடன் கண்காணிக்க கூடிய வெளிப்படையான கணக்கு வழக்குகளை வைக்கக் கூடிய வழிமுறைகள் உண்டு. பணம் கொடுப்பவர் அதைக் கண்காணிக்கவும்;, பெறுபவர் யார் என்பதையும், எப்படி யார் மூலம் எதைச் செய்வது என்பதை கண்காணிக்கவும் ஆலோசனை செய்யவும் கூடிய பொது வழிமுறைகளை உருவாக்க முடியும். இதுவற்ற நிதிசேகரிப்பு மோசடியின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

இன்று சில பொது நடைமுறையைக் கொண்ட சில உதாரணங்கள் உண்டு.

 

1. பழைய மாணவர் சங்கங்கள். இவை பணம் தந்தோர் செலவு செய்த விபரங்களை அச்சடித்து பகிரங்கமாக கொடுக்கின்றனர். இவை இணையம் மூலம் அனைவரும் கண்காணிக்கும் வண்ணம் இன்னும் முன்னேறவில்லை.

2. நூலகம் என்ற ஆவணப்பகுதி. இது தன் கணக்கு வழக்குகளை மிகப் பகிரங்கமாக வெளிப்படையாக இணையத்தில் வைத்திருக்கின்றது. பார்க்க : இதுவரையான நிதிப் பங்களிப்புக்கள்

3. சிறுவர்களுக்கான உதவி அமைப்பு. இது பணம் தந்தவர்கள் அதை கண்காணிக்கும் வண்ணம் கணக்கை வெளிப்படையாக வைத்திருக்கின்றது. பர்ர்க்க : நிதி (http://ta.uthawi.net/nithi )

 

இப்படி சில முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால் அதில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் இன்னும் வெளிப்படையாகவும், அதை பயன்படுத்தும் பொதுத்தளம், அது செலவுசெய்யும் முறை பற்றியும், கருத்துகளையும் முடிவுகளையும் மாற்றம் செய்யக் கூடிய வண்ணம் உருவாக்குவது அவசியம். இதன் மூலம் பணம் கொடுப்பவனின் நோக்கம், மோசடி செய்யவிடாத கூட்டுக்கண்காணிப்பை சமூகம் மூலம் செய்ய முடியும்.

இந்தப் பொதுவான பகிரங்கமான வழிமுறைகளை உருவாக்காத இரகசியமான நிதி சேகரிப்பு மோசடிக்காரர்களினதும், தொழில் ரீதியான (பணம் சேர்க்கும் பலர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், இப்படிப் பல வகை) அவர்களின் வியாபாரத்துக்கு உட்பட்ட ஒன்று.

 

மறுதளத்தில் வெளிப்படையாக உதவும் வகையில், நீங்கள் செயல்படலாமே என்ற கோரிக்கை தொடர்பாக.

நீங்கள் ஏன் செய்யக் கூடாது, நாங்கள் ஏன் செய்ய முடியாது ?

புலத்தில் நாங்கள் தனிநபராக சிலர் தோழராக இருந்தவரை, இது போன்ற ஒன்றைச் செய்வதை விரும்பவில்லை. தனிப்பட்ட நாங்கள் மட்டும் சேர்ந்து, கடந்தகாலத்தில் சில உதவிகளை செய்தோம். இதை நாம் எமக்குள் என்ற எல்லைக்குள் சேர்ந்து கூட்டாக செய்து வந்துள்ளோம்.

அண்மையில் நாங்கள் அமைப்பான பின், நூலகத்துக்கான ஒரு நிதியுதவியைச் செய்தோம். அங்கு அதை பார்வையிடலாம். விரைவில் எம்மூடாகவும் பார்வையிடலாம். இதற்கு வெளியில் இதைச் செய்வது பற்றி முதன்முறையாக, கிழக்கு வெள்ளம் ஏற்படுத்திய மனித அவலம் எம்மைச் சிந்திக்க வைத்திருக்கின்றது. எதிர்காலத்தில் இதை எப்படி செய்வது என்று, எம்மை இது சிந்திக்க வைக்கின்றது. எமது அமைப்புத் தோழர்கள் மத்தியில் இது விவாதத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.

பொதுவான ஒன்றை, ஒரு முன்மாதிரியான மிக வெளிப்படையான ஒரு பொதுநடைமுறையுடன் அனைவரும் அதைக் கண்காணிக்கும் வண்ணம் எப்படிச் செய்வது என்ற விவாதம் ஒன்றை, தனிப்பட்ட தோழர்களுக்கு இடையில் தொடக்கியுள்ளோம். அமைப்புரீதியான விவாதத்துக்கும் முடிவுக்கும், உங்கள் கருத்துகளும் அவசியமானது. பண வரவும் செலவும் என அனைத்தும் பொதுத்தளத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதில் இருந்துதான், மக்களின் சொந்தக் கண்காணிப்புடன் தான் உண்மையாக உதவமுடியும் என்றும் கருதுகின்றோம்.

 

பி.இரயாகரன்

15.01.2011