ஆம் இதுவும் "இன்னொரு" புனைவு என்கின்றனர் மே 18 காரர். அனைவராலும் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாட்டாளி வர்க்கம், அரசியல் ரீதியாக எதிர்கொள்கின்ற தொடர் அவலம் இது. இடதுசாரி வேசம் போட்டு, பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தையே குழிபறிக்க முனையும் சந்தர்ப்பவாதிகள் துணையுடன் அனைத்தும் இன்று அரங்கேறுகின்றது.

தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவு என்கின்றது "மே 18" வியூகம் இதழ். இதையே முன்பு இவர்கள் முன்வைத்தனர். இடதுசாரியத்தை புலிக்கு கூட்டிக் கொடுத்த தீப்பொறியும் அதன் ஒரு நீட்சியான தமிழீழக்கட்சியும், அது சார்ந்த வெளியீடுகளும் இதையே அன்று சொல்லித்தான் அனைத்தையும் அரங்கேற்றினர். இன்று அதன் நீட்சியாக வந்தவர்கள் தான் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் மே18, இன்று மீளவும் அதை முன்தள்ளுகின்றது. இதுபோல் அதில் இருந்து வந்த "புதிய திசை"களும், "தேசியம் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று எம்முடனான உத்தியோகபூர்வமான உரையாடல் ஒன்றில் முன்வைத்தனர்.

 

மறுபடியும் இன்று தமிழ்தேசியம் பேச, இடதுசாரியம் பேசும் இவர்கள் அனைவரும் "தேசியம் முதலாளித்துவக் கோரிகையல்ல" என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இவர்களின் இடதுசாரிய வேசம் மூலம், பாட்டாளி வர்க்கத்தினை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பது தான் இவர்களின் மையமான அரசியல் நகர்வாகும்.

உண்மையில் இவர்கள் "தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல"  என்ற அரசியல் உள்ளடகத்தையே, இவர்கள் மறுத்து வருகின்றனர். இது எனது நூல் ஒன்றின் தலையங்கமாகும். இந்த நூல் ம.க.இ.க ஆதரவு பெற்ற கீழைக்காற்று வெளியீடு மூலம், 1998 இல் வெளியாகியது. இன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற புதிய திசைகள், "தேசியம் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது" என்ற கருத்தை எமக்கிடையிலான உரையாடல் ஒன்றில் மறுத்தனர். "மே18" வியூகம் 2 தன் முன்னுரையில் இதை மறுத்துரைக்கின்றனர். “.. "தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது|| என்பது இவர்களது இன்னொரு புனைவாக அமைகிறது." என்று கூறி, இதை அவர்கள் மறுத்துரைக்கின்றனர்.

இடதுசாரியம் மூலம் வலதுசாரிய தேசியத்தை முன்னிறுத்த, மார்க்சிய உள்ளடக்கத்தை மறுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இன்று மார்க்சியத்தை திரித்துப் புரட்டி மறுக்காமல், தமிழ் தேசியத்தை முற்போக்காக முன்தள்ளுவது என்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஆகவே நாங்கள் பல தளத்தில் மறுக்கப்படுகின்றோம்.

அந்த வகையில்தான் "மே18" வியூகம் தன் முன்னுரையில் “.. "தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்பது இவர்களது இன்னொரு புனைவாக அமைகிறது. இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் எவருக்குமே போல்சேவிக் புரட்சிக்கு பிந்திய புரட்சிகள் ஒவ்வொன்றுமே ஏதோ ஒருவிதத்தில் தேசியவாதத்துடன் தொடர்புபட்டதாகவே நடந்து முடிந்தன என்ற உண்மையை அறியவில்லையோ என்னவோ! இரண்டாம் உலகயுத்தத்தில் நாசி படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட சோவியத்யூனியன், தன்னை விடுவித்துக் கொள்ள நடத்திய போராட்டத்தின் போது ஸ்டாலின் “பாட்டாளி வர்க்க சர்வதேசியம்" பற்றிய கோசங்களை முன்வைக்கவில்லை. மாறாக, ரஸ்ய தேசத்தின் பெருமிதம் பற்றித்தான் பேசினார். மாபெரும் ரஸ்ய தேசபக்த யுத்தமாகவே இதனை ஸ்டாலின் வர்ணித்தார். அத்தோடு பயிற்சி பெற்று போர்முனைக்குச் செல்லும் புதிய வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ரஸ்யாவின் முன்னோர்கள் பற்றிய சாதனைகள் எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து பேசினார். மகா பீற்றர் (ஜார் மன்னன்) மற்றும் இவான் போன்ற கொடுங்கோன்மையாளர்களையும் விழித்து ரஸ்ய மக்களது தேசிய உணர்வை தட்டியெழுப்பியே இந்த போராட்டத்தை நடத்தினார்." என்று இதை "இன்னொரு புனைவாக" காட்டி மே18 காரர் மறுக்கின்றனர்.

இப்படி இதன் மூலம் இவர்கள் கூறுவது என்ன? தேசியம் என்பது முதலாளித்துவ நலனை பிரதிபலிக்கவில்லை. இது ஒரு "புனைவு" என்கின்றனர். மாறாக தேசியம் பாட்டாளிவர்க்க நலனை பிரதிபலிக்கின்றது என்கின்றனர் அல்லது இரண்டையும் பிரதிபலிக்கின்றது என்கின்றனர். இப்படி "தேசியம்" என்பது வர்க்கமற்ற ஒன்று. அது நடுநிலைத்தன்மை கொண்டது. இப்படித்தான் இவர்கள் கூற முற்படுகின்றனர்.

தீப்பொறி புலியின் எடுபிடி கட்சியாக தன்னை மாற்றி தமிழீழக்கட்சியாகிய போது, இந்த ருசிய உதாரணத்தை அவர்கள் தங்கள் வெளியீடுகள் மூலம் முன்வைத்தனர். இப்படித்தான் அவர்கள் அன்று புலிக்கு இடதுசாரியத்தைக் கூட்டிக்கொடுத்தார்கள். அன்று அந்த அரசியலை செய்தவர்களின் வாரிசுகள் தான் தாங்கள் என்று மே18 பெருமையாக கூறுகின்றது. இவர்கள் மட்டுமல்ல, அதில் இருந்தவர்கள் தான் புதியதிசையைச் சேர்ந்தவர்களும்.

அன்று புலிக்கு இடதுசாரியத்தைக் கூட்டிக்கொடுத்து அரசியல் ரீதியாக வேலைசெய்தவர்கள் தான், புலிக்கு பணம் கொடுத்தது மட்டுமின்றி குடும்பமாவே புலிக்காக வேலை செய்தவர்கள். இன்று அதைத்தான் செய்கின்றனர். ஆனால் மறுபடியும் பலதளத்தில் இடதுசாரி வேசங்கள்.

மே 18 இன்று மீள முள்தள்ளியுள்ள அதே வாதம், அன்று எம்மால் விமர்சனம் செய்யப்பட்டது. இங்கு இரண்டு விடையங்கள் மீள முதன்மை பெறுகின்றது.

1. தேசியத்தை வர்க்கமற்றதாக காட்டுவது.

2. ஸ்ராலின் அரசியல் நிலைபாட்டை புரட்டித் திரிப்பது

தொடரும்

பி.இரயாகரன்

12.01.2011