நாங்கள் எமக்குள்ளான சாதியை ஒழிக்க நாம் போராடவில்லை என்ற உண்மை போல்தான், சிங்கள மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடவில்லை என்ற உண்மையும் கூட. தமிழன் பெயரால் உயர் சாதியம் எப்படி தாழ்ந்த சாதிய சமூக அமைப்பை தக்கவைத்து ஒடுக்கி வாழ்கின்றதோ, அப்படித்தான் இனவொடுக்குமுறையும் கூட.

அரசியல் நிகழ்தகவுகளில் உள்ள உண்மைகள் இவை. இப்படி பல உண்மைகளை மறுப்பது தான், எமது பொய்மையான எமது கருத்தாகவும், உணர்வாகவும் உள்ளது. ஒற்றை உண்மைகளை மட்டும் காட்டி கோருவதன் மூலம், வெளிப்படுவது கபடம் நிறைந்த பொய்மைகளும் புரட்டுகளும் தான்.

சிங்களவர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழமுடியாது என்று அம்பேதன் என்ற வாசகர், எம்மை நோக்கி அடுக்கிவைத்துள்ள காரணங்கள் அனைத்தும், ஒருபக்க உண்மையைக் கொண்டது. இதன் மூலம் பல பக்க உண்மைகளை தொடர்ந்து மறுத்தலாகும்.

"சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது"!?"  என்ற எனது கட்டுரைக்கு, இல்லை சேர்ந்து "வாழ முடியாது" என்று அடுக்கிவைக்கும் காரணங்களை முதலில் பார்ப்போம்.

"மாட்சிமை பொருந்திய உங்களின் மார்க்சியப் பார்வையில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியும் தான்.. ஏனென்றால்...

1.முள்ளிவாய்க்காலில் 50 ஆயிரம் பேர் செத்த போது பத்து சதவீதம் சிங்களர் கூட அதற்காக வருந்தவில்லையே அதனால் அவர்கள் கூட கண்டிப்பாக சேர்ந்து வாழத்தான் வேண்டும்.

2.எல்.டி.டி.இயும், பிரபாகரனும் சேர்ந்து செத்தார்கள் என்று முள்ளிவாய்க்காலில் இருந்து செய்தி வந்ததை தெருவெங்கும் மிட்டாய் கொடுத்து கொண்டாடினார்களே அவர்களுடன் சேர்ந்து ஏன் தமிழர்கள் வாழக்கூடாது என்று கணம் நீதிபதி அவர்களை நான் கேட்கிறேன்.

3.கொத்துக் குண்டுகளும், ஏவுகணைகளும் அப்பாவித் தமிழர்கள் மீது வீசப்பட்ட போது சிங்கள ஊடகங்கள் எல்லாம் பூசணிக்காய்களை சோற்றில் மறைத்தபோது துணிந்து எதிர்த்துப் பேசி செத்தானே லசந்தா என்னும் சிங்கள ஊடகவியலாளன். அவனுக்குக் கூட கண்ணீர் சிந்தாத இந்த சிங்கள மக்களுடன் தமிழர்கள் சேர்ந்து வாழத்தான் வேண்டும்.

4.மைனாரிட்டியிலும் மைனாரிட்டியாக 20 சதவீதமாக சுருங்கிப் போன தமிழர்கள் பொத்திக் கொண்டு கிடைக்கும் சோற்றில் வாழவேண்டும் என்ற நிலை இலங்கைப் பாராளுமன்றத்திலேயே நிலவும் மகா சனநாயக நாட்டில் தமிழர்கள் அவர்களோடு சேர்ந்து தான் வாழவேண்டும்.

5.சமீபத்தில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று சொல்லி தமிழ்நாட்டில் நாலு பேரும், இலங்கையில் நாலு பேரும் கத்தி மறுத்து அது உடனே அவர்களின் நூற்றாண்டு கால இன துவே~த்தை டபுக்கென்று மறைத்துக் கொண்டு இல்லையில்லை என்று நாடகமாடினார்களே அதற்காகவாவது தமிழர்கள் அவர்களோடு சேர்ந்து வாழத்தான் வேண்டும்.

.....

இது போல ஆயிரக்கணக்கான விசயங்கள் 1948 லிருந்து

6. 1952ல் ஏழு லட்சம் தமிழர்கள் இலங்கையிலேயே பிறந்திருந்தும் குடியுரிமை மறுக்கப்பட்டார்களே அப்போதும் எந்தச் சிங்கள இயக்கமும் ஆவேசமாய் சேர்ந்து போராட வரவில்லையே அவர்களுடன் சேர்ந்து வாழத்தான் வேண்டும்.

தமிழர்களின் காதில் வெடிகுண்டு வைத்து செவிடாக்கிவிட்டு, அடக்கம் பண்ணிவிட்டு, இப்போது செவிடன் காதில் ஊதும் சங்காக நீங்கள் அளந்து விடும் உள்ளடக்கம், பொருளடக்கம், சாராம்சம், என்ற மார்க்சிய வார்த்தைகளுக்குப் பணிந்து தமிழர்கள் எல்லாம் சிங்களருடன் சேர்ந்து வாழத்தான் வேண்டும் என்று அண்ணன் ராசபக்சேவின் கரம் பற்றி தாங்கள் கூறுவதை நான் வழிமொழிகிறேன்.

இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னும் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியும் தான். தமிழர்கள் எல்லாம் செத்த பிணங்கள் போல் உணர்ச்சியற்று, உணர்வற்று வாழும் நிலை வந்திருக்கும் இந்த வேளையில் கண்டிப்பாக முடியும் தான். வேறு வழியில்லையே. நல்லா இருங்க ராயகரன"

இக் காரணங்கள் தான் சிங்கள மக்களுடன் தமிழர்கள் சேர்ந்து வாழத்தடை என்றால், எந்த மக்கள் கூட்டமும் உலகில் சேர்ந்து வாழ முடியாது. தமிழன் தமிழனுடன் கூட சேர்ந்து வாழ முடியாது. இதுபோல் தமிழன் தமிழனுடன் சேர்ந்து வாழ முடியாத ஆயிரம் தடைகள் உண்டு.

1.சாதி பார்த்து தாழ்த்தும் உயர் சாதித் தமிழனுடன் எப்படி தாழ்ந்த சாதி தமிழன் சேர்ந்து வாழ முடியும்!? சொல்லுங்கள்.

2.யாழ் மேலாதிக்கம் பேசும் யாழ்ப்பாணியத் தமிழனுடன், எப்படி மற்றைய பிரதேச மக்கள் சேர்ந்து வாழ முடியும்!? சொல்லுங்கள்.

3. சுரண்டும் தமிழனுடன், சுரண்டப்படும் தமிழன் எப்படி ஏன்; சேர்ந்து வாழ வேண்டும்!?

இப்படி தமிழன் தமிழனுடன் சேர்ந்து வாழ ஆயிரம் தடைகள் பல உண்டு. இதையும்; தாண்டி தமிழன் தமிழனுடன் சேர்ந்து வாழ முடியும் என்றால், சிங்கள மக்களுடன் கூட நாம் சேர்ந்து வாழ முடியும்.

தமிழனை தமிழன் ஒடுக்குவது பிழை என்று கருதும் தமிழர்கள் இருப்பதால் தான், தமிழன் சேர்ந்து வாழமுடியும் என்பது ஒரு உண்மையாகின்றது. இது போல் தமிழரை ஒடுக்குவதை பிழை என்று கருதும் சிங்களவரும் இருப்பதால் தான், சிங்கள மக்களுடன தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடிகின்றது. வடக்கு கிழக்கு அல்லாத பிரதேசத்தில் வாழும் தமிழர்கள், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடிகின்றது. இந்த உண்மை சிங்கள மக்கள் தமிழருடன் சேர்ந்து வாழும் மனிதப் பண்பு சார்ந்த அரசியல் வெளிப்பாடாகும். இதற்கு மாறான பேரினவாத உணர்வுகள். அதாவது உங்களைப் போன்ற குறுந்தேசிய உணர்வுகள் போன்றது தான் பேரினவாத உணர்வுகள்.

நாங்கள் தமிழருக்குள் இருக்கின்ற சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து குரல்கொடுக்காதவராக இருக்கின்றது போல் தான், சிங்கள மக்களும் பொதுவில் வாழ்கின்றனர். தமிழனை தமிழன் ஒடுக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்காத நாங்கள், சிங்கள மக்கள் எமக்காக குரல் கொடுக்காததைப் பற்றி பேச என்னதான் அருகதை இருக்கின்றது. பொய்மையிலும், புரட்டுகளிலும் தமிழனை தமிழன் ஒடுக்கும் வக்கிரத்தை கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றுவதுதான் இவைகள்.

கடந்தகாலத்தில் ஒரு லட்சம் முஸ்லீம் மக்களை உடுத்த உடையைத் தவிர அனைத்தையும் புடுங்கி துரத்திய போது, நாங்கள் குரல் கொடுத்தோமா? இல்லை. இப்படியிருக்க ஏன் சிங்கள மக்கள் எமக்காக குரல் கொடுக்கவேண்டும்? அந்த மக்கள் தாங்களாகவே இன்று திரும்பி வந்ததுடன், மீளவும் சேர்ந்து வாழ்வது எப்படி சாத்தியமாகின்றதோ அப்படித்தான் அனைத்தும்.

மக்களுக்கு எதிராக மக்கள் எதையும் செய்தது கிடையாது. உங்களைப்; போன்றவர்கள் தான் அனைத்தையும் செய்தனர். அன்று சிங்களவனுடன் சேர்ந்து வாழமுடியாது என்று சொன்ன கூட்டம்தான், முஸ்லீம் மக்களை துரத்தியது. எல்லைப்புறங்களில் வாழ்ந்த மக்களை கொன்று குவித்தது. சாதியை ஒடுக்குமுறையை பாதுகாத்தது. தமிழ் மக்களை பல வழிகளில் ஒடுக்கியது. இன்றும் அதையே தொடர்ந்து நியாயப்படுத்துகின்றது. மக்கள் தாமாக பிரிவினையையும், பிளவையும், ஒடுக்குமுறையையும் தமக்குள் செய்யவில்லை. இப்படி மக்கள் விரோதத்தை முன்தள்ளிய உங்கள் பங்கை, வரலாற்றில் இருந்து இனி யாராலும் மறுக்க முடியாது.

கடந்த காலத்தில் புலிகள் எல்லைபுறங்களில் வாழ்ந்த சிங்கள முஸ்லீம் மக்களை கொன்றும், பயணிகள் பஸ்களை தகர்த்தும், பொது மக்களுக்குள் குண்டுகளை வெடிக்கவைத்தனர். இது போல் முஸ்லீம் மக்களை துரத்திய போது, நீங்கள் அதைக் கண்டித்து போராடியிருந்தால், சிங்கள மக்களும் உங்களைப் போல் செய்திருப்பார்கள். நீங்கள் ஏன் எதற்காக அதைச் செய்யவில்லையோ, அதுபோல் அவர்களும் செய்யவில்லை.

தமிழ் குறுந்தேசியவாதிகளும், புலிகளும்; மக்கள் விரோதமாக செய்த செயலைக் கண்டித்து போராடுவதை, நீங்கள் அரச கைக் கூலித்தனமாகக் கூறினீர்கள். அதை துரோகமாக காட்டி, போராடியவர்களைக் போட்டுத் தள்ளினீர்கள். இதுபோல் தான் அரசும் தன்னைக் கண்டிப்பதை புலித்தனமாக முத்திரை குத்தி பேரினவாதமாக ஆட்டம் போட்டது. அங்கு இங்கும் உண்மைகள் இப்படித்தான் புதைக்கப்பட்டு இருக்கின்றது.

இப்படி இரண்டு தளத்திலும், உண்மைகள் பேசப்படுவது தடுக்கப்பட்டது. ஆளுக்காள் போட்டுத் தள்ளி, மக்கள் சேர்ந்து வாழ்வதை தடைசெய்தனர். இப்படி மக்களைப் பிளந்து செய்யும் அரசியல் தான், கோலோச்சியது, இன்றும் கோலோச்சுகின்றது. அதைத்தான் மறுபடியம் இங்கு சிங்களவனுடன் சேர்ந்து வாழமுடியாது என்று தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது.

சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று வைத்துக்கொள்வோம், தமிழன் தமிழனுடன் சேர்ந்து வாழ சாதியையும், பிரதேச வாதத்தையும், சுரண்டலையும், ஆணாதிக்கத்தையும் ஒழிக்க நீங்கள் தயாரா!? அதற்காக போராட நீங்கள் தயாரா? நீங்கள் அதற்கு தயாரில்லை என்ற உண்மைதான், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ தயாரற்ற தர்க்கமாகின்றது.

மக்கள் தம்மையொத்த மற்றவனைப் பிரிந்தும், பிளந்தும், ஒடுக்கியும் வாழ்வது என்பது அவர்களின் தேர்வல்ல. மற்றவனை ஒடுக்கியும், சுரண்டியும், தாழ்த்தியும் வாழ்வது, என்றும் மக்களின் தேர்வல்ல. எப்படி தமிழ் உயர் சாதியம், தாழ்ந்த சாதிய சமூக அமைப்பை தக்கவைத்து ஒடுக்கி வாழ்கின்றதோ அப்படித்தான் இனவொடுக்குமுறைகளும் கூட.

நாங்கள் எங்களுக்குள் ஒடுக்கும் சாதியை ஒழிக்க முன்வருவோம் என்றால், அதுபோல் சிங்கள மக்களும் இனவொடுக்குமுறையை ஒழிக்க முன்வருவார்கள். இதை மார்க்சியம் தான் சொல்லுகின்றது என்று கூறிவிடுவதால், இந்த உண்மை பொய்யாகிவிடுமா? நாங்கள் மற்றவனை ஒடுக்குவதுதான், அனைத்துக்குமான தடையாக உள்ளது. இப்படி உண்மையிருக்க சிங்கள சமூகத்தைப்பற்றி பேச, எந்த அருகதையும் உரிமையும் எமக்கு கிடையாது. இப்படி எம்மைச் சுற்றிய உண்மைகள் இருக்க, நாம் மற்றவனிடம் கோருவது என்பது போலித்தனமானது, பொய்யானது, புரட்டுத்தனமானது. தொடர்ந்து இதுதான் தமிழ்தேசியம் என்றால், முள்ளிவாய்கால்களைத் தவிர வேறு எதையும் அது வழிகாட்டாது.

பி.இரயாகரன்

11.01.2011