01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 8

பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதாக கூறிய சர்ந்தர்ப்பவாதம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரம் பற்றிய ஒரு புரட்டைப் புகுத்த முனைந்ததைப் பார்த்தோம். முந்தைய மற்றும் பிந்தையதுக்குமான வரலாற்று ஒப்பீட்டைக் கொண்டு, நிலவும் சமூக அமைப்பின் "பொதுப்புத்தி" மூலம் இதனைத் திணிக்கின்றனர். இப்படி ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரத்தை பற்றிய பொது மாயையை "பொதுப்புத்தி" சார்ந்து உருவாக்க முனைகின்றனர். வெள்ளை ஆட்சியாளர்கள் (அன்னியர்), கறுப்பு ஆட்சியாளர்கள் (சுதேசிகள்) என்ற வேறுபட்ட அடையாளம் சார்ந்த "பொதுப்புத்தி" சார்ந்த அடிப்படை வேறுபாட்டைக் காட்டித்தான், சுதந்திரத்தை பற்றிய புரட்டை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் அன்று இந்த உள்ளடக்கத்தில் தான் காலனித்துவவாதிகள் ஆட்சியைக் கொடுக்க, காலனித்துவ எடுபிடிகள் ஆட்சியைப் பெற்றுக் கொண்டனர். இதைத்தான் சுதந்திரம் என்றனர். இப்படி நம்பும் சமூக கண்ணோட்டம் கொண்ட அமைப்புதான், இன்றைய ஆட்சியமைப்பு. இதுபோல் தான் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் திணிக்க பாராளுமன்ற வடிவம் சார்ந்த ஒத்த தன்மையைக்காட்டி நிற்கின்றனர். இப்படி இந்தச் சமூக அமைப்புக்கே உரிய அதன் பொதுப்புத்தியில்தான் 'மே18' தனது அரசியல் புரட்டை அரசியலாக்க முனைகின்றது. இது போல்தான் "மே18" என்ற பெயரும் கூட. பொதுப்புத்தி சார்ந்த அறியாமையை வைத்து, மோசடி அரசியல் செய்வதாகும்.

 

 

 

இந்த வகையில் சமூகப் போக்குகளை அவர்கள் எப்படி திரிக்கின்றனர் என்பதை பார்ப்போம். "நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்து இருந்தன. … புதிதாக உருவாகி வந்த பாட்டாளி வர்க்கமானது தமது உழைப்புச் சக்தியை விற்பதனால் மாத்திரமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்தது. இங்கு உழைப்பும் ஊதியமும் ஒருவித சமத்துவ நிலையில் இருந்ததாக கருதப்பட்டது. இதனால் இவர்களது உழைப்புச் சக்தியை பெறுவதற்கு வன்முறை தேவைப்படவில்லை…."

 

இங்கு "நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பொருளாதாரமும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்து இருந்தன" என்பதன் மூலம், முதலாளித்துவத்தில் அப்படியல்ல என்ற புரட்டை கொண்ட வர முனைகின்றனர். முதலாளித்துவ பொருளாதாரமும் அரசியலும் பிரிந்திருப்பதாக காட்ட முனைகின்றனர். சாராம்சத்தில் இது முதலாளித்துவத்தில் அரசும் அரசியலும் வேறு என்று, சொல்ல முனைகின்றனர். இப்படி அரசு மற்றும் அரசியல் கூட, முதலாளித்துவ பொருளாதாரத்தில் இருந்து வேறானது என்ற மார்க்சிய அழிப்பு அரசியலை பொதுப்புத்தி மூலம் திணிக்க முனைகின்றனர்.

 

இப்படி முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் இடையில், அரசை நடுநிலையானதாக காட்ட முனைகின்றனர். இந்த வகையில்தான் அரசு பற்றி "அதாவது சுரண்டும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அதே சமயத்தில் சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்." என கூற முடிகின்றது. இப்படி இங்கு அரசு பற்றிய புரட்டை முன்தள்ளுகின்றனர். அரசு ஏதோ ஒரு வகையில் "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்." என்று கூறுவதன் மூலம், அரசை வர்க்கமற்ற தன்மை கொண்டதாக காட்ட முனைகின்றனர். "பிரதிநிதித்துவம்" மற்றும் "திருப்தி செய்தாக வேண்டும்." என்ற சொற்கள் ஊடாக, அரசை வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கமற்ற ஒன்றாக கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றனர்.

 

உண்மையில் இங்கும் இந்த சமூகத்தில் "பொதுப்புத்தி" கண்ணோட்டம் தான் மே 18 காரருக்கு உதவுகின்றது. வர்க்க முரண்பாடுகளை கொண்ட மொத்த சமூக அமைப்பில், சுரண்டலுக்கு ஏற்ப சுரண்டும் வர்க்க அரசு ஆற்றும் பாத்திரத்தை, "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்ற எல்லைக்குள் நிறுத்தி திரிக்கின்றனர். அதாவது தொடர்ந்து சுரண்டவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதையே அரசு செய்கின்றது. அரசின் பாத்திரம் இதுதான். இது சலுகை கொடுத்து அல்லது வன்முறையை ஏவி அல்லது இவ் இரண்டையும் கையாண்டு சுரண்டுவதை உறுதிசெய்கின்றது. இதற்கு வெளியில் அரசு கிடையாது. அரசு என்பது சுரண்டும் வர்க்கம் உருவாக்கிய ஒரு கருவி. இது வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டது. இப்படிப்பட்ட அரசை வர்க்க அமைப்பிற்கு அப்பாற்பட்டதாக காட்ட முனைகின்றனர்.

 

உழைக்கும் வர்க்கம் தாம் வாழ்வதற்குரிய அடிப்படையான வாழ்வாதாரங்களை, காலாகாலமாகப் போராடித்தான் பெறுகின்றனர். "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்பதற்காக, சுரண்டும் வர்க்கமும் அரசும் தானாக எதையும் கொடுப்பதில்லை. வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் தான், அவர்கள் பெறுகின்ற அனைத்துக்குமான அடிப்படையாகும். அரசு இங்கு இதில் நடுநிலை பாத்திரத்தை வகிப்பதில்லை. அரசு இதை பெற்றுக்கொடுப்பதில்லை. அரசு சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை நடத்தும் ஒரு இயந்திரம். சுரண்டும் வர்க்கத்தை ஒன்றிணைத்து, அதை முழுமையாக பாதுகாக்கும் அரசு இயந்திரத்தைக் கொண்டது. தனிப்பட்ட உதிரியான முதலாளிகள் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உறுப்பு. இது சுரண்டப்படும் மக்களை ஒடுக்கும் அரச இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு, தன்னை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இது "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்பது, பொதுப்புத்திமட்டத்திலான பூர்சுவா கண்ணோட்டம் சார்ந்தது. அரசை சுரண்டும் வர்க்கங்கள் இப்படிக் காட்டுவதன் மூலம் தான், அது தன்னை சுரண்டப்படும் வர்க்கத்தில் இருந்து பாதுகாக்கின்றது. சுரண்டும் வர்க்கம் அரசு பற்றியும், அதன் வர்க்கமற்ற நடுநிலை பற்றிய பிரமையை விதைத்து தான், வன்முறையற்ற முறையில் சுரண்ட முடிகின்றது. அரசு பற்றிய மாயை கலையும் போது, அரசின் வேஷம் கூட கலைந்து விடுகின்றது. அரசு பற்றிய "பொதுப்புத்தி" தான், "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்ற ஆளும் வர்க்க சித்தாந்தமாகும்.

 

இந்த அரசியலுக்காகத்தான், அரசாங்கத்துக்கும் அரச இயந்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை திரிக்கின்றது. "புரட்சியாளர்களின் இலக்காக அமைய வேண்டியது அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல." அரசாங்கமல்ல எதிரி என்பது, சாராம்சத்தில் அரசை ஆளும் வர்க்கத்தில் இருந்து விலத்தி வைப்பதாகும். அரசு இயந்திரம் சுரண்டும் வர்க்கத்தின் கருவியாக இருக்கும் அதே தளத்தில், அரசாங்கம் கூட நிரந்தரமானது. இங்கு ஆட்கள் 5 வருடத்துக்கு ஒருதடவை மாறுகின்றனர் என்பதால், அரசாங்கம் மாறிவிடுவதில்லை. அரச இயந்திரத்தின் ஒரு பகுதிதான் அரசாங்கம். அதன் பிரதிநிதிகள் மாறுகின்றனர். அரச இயந்திரத்தின் பிரதிநிதிகளுக்கு கூட, குறித்த ஆயுள் காலம் உண்டு. அவர்கள் அங்கு ஆற்றும் பாத்திரமும், காலமும் தான் வேறுபடுகின்றது.

 

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் 5 வருடத்துக்கு ஒருக்கால் தேர்வு மூலம் மாற்றுவது, அரசின் அதிகாரம் கொண்ட உறுப்பாக இருப்பதால்தான். இதுவின்றி அரச இயந்திரம் இயங்க முடியாது. ஒன்று இன்றி ஒன்று இயங்க முடியாது. சாராம்சத்தில் இருக்க முடியாது. எதிரி "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று கூறுகின்ற அரசியல், அரசு பற்றிய வர்க்கமற்ற அரசு என்ற திரிபை புகுத்துவது தான். நடைமுறையில் நாம் பார்த்தால் இலங்கையில் மகிந்தா அரசல்ல, இலங்கை அரச இயந்திரமே என்று கூறுவதில் போய் முடியும். போராட்டத்தை திசைதிருப்புவதில் தான் இது முடிகின்றது. குறிப்பாக அரசுக்கு எதிரான முதன்மையான போராட்டம் தான், அரசு இயந்திரத்தை தகர்க்கின்றது. மறுதலையாக அல்ல. மேல் கட்டுமானத்திலான போராட்டம் தான் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கின்றது. இங்கு மேல் கட்டுமானத்திலான முதன்மையான போராட்டத்தை மறுத்து, அடிக்கட்டுமானத்தை காட்டுவது வரட்டுவாதம் மூலம் வர்க்கப்போராட்டத்தை சிதைத்தலாகும். இங்கு அரசை வர்க்கத்தில் இருந்து, பிரித்துவிட செய்யும் முயற்சியாகும்.

தொடரும்

 

பி.இரயாகரன்

08.01.2011

 

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1

2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2

3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3

4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4

5. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5

6. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 6

7.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 7


பி.இரயாகரன் - சமர்