Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 24/12/2010 வெள்ளியன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசம்கொண்டு உழைக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது இந்தத்தீர்ப்பு. அதேநேரம் இந்த அரசு யாருக்காக இருக்கிறது, யாரின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் குற்றம் நிருப்பிக்கப்பட்டதாகக் கருதி இந்தத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது.

 

 

 

இந்த தண்டனையின் ஆழம் புரியவேண்டுமென்றால் சத்திஸ்கர் மாநிலம் குறித்தும் சல்வா ஜுடும் குறித்தும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மத்திய,

வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவைகளை கொள்ளையடிக்க பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்த கனிம வளங்களை வெட்டியெடுக்க வேண்டுமென்றால் முதலில் அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும். ஆனால் மக்கள் மறுக்கிறார்கள், இந்திய அரசின் நைச்சியத் திட்டங்கள் அவர்களிடம் எடுபடவில்லை. காரணம், நதிகளின் குறுக்கே கட்ட்ப்பட்ட‌ அணைகள் தொடங்கி மிகப்பெரிய திட்டங்களிலெல்லாம் அரசு மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் எந்த லட்சணத்தில் நிறைவேற்றப்பட்டன என்பதை அவர்கள் கண்டுவருகிறார்கள். அம்மக்களிடம் மாவோயிஸ்டுகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். விட்டுக்கொடுக்க மறுக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு சத்திஸ்கர் அரசு கண்டுபிடித்த வழிதான் சல்வா ஜுடும் எனும் அமைப்பு. பயங்கரவாதிகளான மாவோயிஸ்டுகளின் கொடுமை தாங்காமல் பழங்குடியின மக்கள் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட அமைப்புதான் சல்வா ஜுடும் என்று அரசு பிரச்சாரம் செய்தாலும், அந்த அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வருவது மாநில அரசு தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. மட்டுமல்லாது பாஜக ஆளும் சத்திஸ்கரின் எதிர்க்கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ மகேந்திர கர்மா என்பவனின் தலைமையில்தான் அந்த அமைப்பு இயங்கிவருகிறது.

 

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதையும், பழங்குடியினரை அப்புறப்படுத்துவதையும் சல்வா ஜுடும் நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்காக வன்முறையின் எந்த எல்லைக்கும் இறங்கத்தயாராக இருக்கிறது. நாட்டின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சல்வா ஜுடும் செய்யும் கொலைகளையும், சட்டமீறல்களையும் அம்பலப்படுத்தி கண்டித்திருக்கின்றன. ஆனாலும் அந்த அமைப்புக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க மறுக்கின்றன. மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ள‌ பகுதி என்பதால் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்துதர மறுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தப்பகுதியில் செயல்பட்டுவரும் குழந்தை நல மருத்துவரான பினாயக் சென், அங்குள்ள குழந்தைகள் சத்துக்குறைவினால் அவதிப்படுவதை எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தி மாநில அரசுக்கு எதிராக போராடத்தொடங்குகிறார். பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் ஊட்டச்சத்துக் குறைவினால் பல்வேறு நோய்கள் பரவியிருப்பதையும் வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து அவர், சல்வா ஜுடும் அங்கு செய்துவரும் கொடூரங்களையும் வெளியுலகுக்கு கொண்டு வந்து மனித உரிமை அமைப்புகள் மூலம் போராட்டங்களை தொடர்கிறார்.

 

இதைத்தொடர்ந்து 2007 மே 14ம் தேதி “சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டம் 2005″ எனும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். இந்தைக் கைதை எதிர்த்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அறிவுஜீவிகள், எழுத்தாளர் அமைப்புகள், நோபல் பரிசு பெற்றவர்கள் அமைப்புகள் என உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் போராட்டங்கள் நடக்கின்றன. இவைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், எதிர் வழக்கு தொடுத்த அவர் மனைவி உட்பட பலரையும் மிரட்டுகிறது. இதற்கிடையில் 2008 ஏப்ரலில் உலகளாவிய சுகாதார கவுன்சில் அவருக்கு ‘ஜொனாதன் மான்’ எனும் விருதை அறிவிக்கிறது. இந்த விருதைப் பெறுவதற்காவது அவரை பிணையில் விடுமாறு பன்னாட்டு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. கடைசியில் அவருடைய இதய நோய் மோசமடைந்ததைத் தொடர்ந்து ஓய்வும் சிகிச்சையும் அவசியம் என்பதால் வேறு வழியில்லாமல் மே 25 2009 ல் பிணையில் விடப்பட்டார். இந்த வழக்கில் தான் இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

 

அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார், மாவோயிஸ்டுகளுக்கு சாதகமாய் செயல்பட்டார் என்பதற்கு அரசு காட்டும் ஆதாரங்களென்ன?

௧) மாவோயிஸ்ட் தலைவர்  நாராயண் சன்யாலால் என்பவரை சிறையில் முப்பதற்கும் அதிகமான முறை சந்தித்தார்,

௨) அவருடைய கணிணியிலிருந்து சில ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகள் கிடைத்தது,

௩) நாராயண் சன்யாலுக்கு மருத்துவ உதவிகள் செய்யுமாறு கோரி மதன்லால் பானர்ஜி எழுதிய கடிதத்தில் பிரியத்திற்குறிய காம்ரேட் என குறிப்பிட்டிருந்தது.

இவைதான் மதிப்புமிக்க, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்ற ஒரு மருத்துவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேசத்துரோக வழக்கின் ஆதாரங்கள். தாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பகுதியில் தாங்கள் போராடும் அதே நோக்கத்தில் மக்களுக்காக மருத்துவ ஆய்வுகளைச் செய்து மக்களைக் காக்க போராடிவரும் ஒரு மருத்துவரை சிறையில் இருக்கும் தங்கள் தலைவருக்கு மருத்துவ உதவிகள் செய்யுமாறு மாவோயிஸ்டுகள் ‘தோழரே’ என அழைத்து  கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்று அவர் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்று சிறையிலிருக்கும் மாவோயிஸ்ட் தலைவரை சிறைத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசோதித்து சிகிச்சையளிக்கிறார். முறைப்படி அனுமதி பெற்று அதிகாரிகளின் முன்னிலையில் சந்தித்திருக்கும் போதுமுப்பது முறை சந்தித்தால் என்ன? மூவாயிரம் முறை சந்தித்தால் என்ன? தன்னுடைய கணிணியில் ஒருவர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகளையும், அரசு எதிர்ப்பு பிரசுரங்களையும் வைத்திருக்கக்கூடாதா?

 

அரசை எதிர்த்து யார் போராடினாலும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு, சதித்திட்டம், தலைவர்களை கொல்வதற்கு முயற்சி என்று பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்து சிறையில் அடைத்து முடக்கிவிட நினைப்பது அரசுகளின் இயல்பாகவே இருக்கிறது. இது போன்ற தேசத்துரோக வழக்குகளில் பிணையில் வெளியில் வர முடியாது என்பதுடன் மக்கள் ஆதரவும் கிடைக்காது என்று அரசு கருதுகிறது. மக்களுக்காக, அவர்களின் ஊட்டச்சத்துக்குறைவை ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டுவந்ததும், ஜல்வா ஜுடும் கொடூரங்களுக்கு எதிராக போராடியதுதான் தேசத்துரோக வழக்கு அவர் மீது பாய்ந்ததன் காரணம் என்றால், எது தேச பக்தி? எது தேச துரோகம்? அன்னிய நாட்டு நிறுவனங்கள் சொந்த நாட்டு கனிம வளங்களை கொள்ளையடிப்பதை அனுமதிப்பது தேச துரோகமா? அதை எதிர்த்துப் போராடுவது தேச துரோகமா? அப்படி போராடும் மக்களை அரசே கூலிப்படைகளை அமைத்து ஆயுதங்கள் வழங்கி கொன்று குவிப்பது தேச துரோகமா? அதை அம்பலப்படுத்திப் போராடுவது தேச துரோகமா?

 

இது அப்பட்டமாக ஆங்கிலேய ஆட்சியை நினைவுபடுத்தவில்லையா? அன்று ஆங்கிலேயன் விடுதலை வேண்டிய போராடியவர்கள் மீது தேசதுரோக வழக்கைச் சுத்தித்தான் தூக்கில் தொங்கவிட்டான். இன்றும் அது தொடர்கிறது. அது நேரடியான காலனியாட்சி. இன்றோ சுதந்திரம் என்ற பெயரில் மறைமுகமான கால‌னியாட்சி மறுகாலனியாட்சி. விடுதலைப் போராட்டங்கள் முடிந்துவிடவில்லை, அடுத்த விடுதலைப் போர் தொடங்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டதை முன்னறிவிப்பதுதான் பினாயக் சென்னின் தண்ட