Language Selection

விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

 

 

இத்தண்ணீர் வியாபாரத்தால் எதிர்காலத்தில் உருவாகும் அபாயங்களை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அப்பொழுதே அத்தண்ணீர்க் கொள்ளையர்களை எதிர்த்து ஊர்வலம், சாலை மறியல் எனப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்நிறுவனத்தை மூடக் கோரி மக்களின் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் திறக்கப்பட்ட உடனேயே இழுத்து மூடப்பட்டது.

தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்! மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் - ஆர்பாட்டம்

தற்போது அதே பகுதியில் மீண்டும் தண்ணீர்க் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பெயர்ப் பலகையின்றி, இரவில் நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சுவதும், பகலில் தண்ணீரை ஏற்றிச் செல்வதுமென தண்ணீர் வியாபாரம் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து விருதை மினரல்ஸ் நிறுவனத்தை மூட உத்தரவிட்ட விருத்தாச்சலம் நகராட்சி இப்பொழுது தண்ணீர்க் கொள்ளையர்களுக்குச் சலாம் போடுகிறது.

ஒரு நிறுவனம்தானே என்று இன்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நாளேயே தண்ணீர்க் கொள்ளையர்கள் புற்றீசல் போல இப்பகுதியில் புகுந்துவிடுவார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி எடுத்து, ஆலடி ரோட்டுப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. நகர், முல்லை நகர், வீ.என்.ஆர். நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளைப் பாலைவனமாக்கி, அங்கு வாழும் மக்களைக் குடிதண்ணீருக்கு அலைய வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் எம்.ஆர்.கே. பகுதியில் இயங்கும் தண்ணீர் கம்பெனியை அகற்றக் கோரியும், மக்கள் நலனில் அக்கறையின்றி இத்தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக 29.10.2010 அன்று விருத்தாசலம் – பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்டோரும், குடியிருப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 
_______________________________________________
- மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.