மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள்,  அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

 

 

2009-இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது,  யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி, என்ன துறை ஒதுக்கப்படும், தொலைத்தொடர்பு அமைச்சர் நியமனத்தின் பின்னணியில் அம்பானியும் டாடாவும் எப்படி  கா நகர்த்துகிறார்கள் என்ற விவரங்களும், நீரா ராடியா இதில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அவரது தொலைபேசி உரையாடல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. பத்மசிறீ விருது பெற்ற என்.டி.டிவி-யின் நிர்வாக ஆசிரியரான பர்கா தத், பிரபல பத்திரிகையாளரான வீர் சங்வி ஆகியோர் நீரா ராடியாவுடன் நடத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளர்கள் எப்படி கார்ப்பரேட் தரகர்களாக உள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து உருவாக்கும் செய்திகளே நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பிரபலமாக்கப்படுவதையும் இது நிரூபித்துக் காட்டுகிறது.

முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டுச் சில ஊடகங்களுக்கு கோடிகளை வாரியிறைத்ததன் விளைவாக, இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீரா ராடியா

நீரா ராடியா

மறுபுறம் தரகுப் பெருமுதலாளியான டாடா, தனது நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளராக – அதிகாரத் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இரகசியமாகப் பதிவு செய்து, அலைக்கற்றை ஊழலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று சாடுகிறார். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகத் தனிநபர் உரிமையையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதால்,  நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் உரையாடியாதை ஊடகங்களில் வெளியிடுவது தன்னுடைய தனிநபர் உரிமையில் தலையிடும் மனித உரிமை மீறலாகும் என்று சீறுகிறார். அரசின் பொறுப்பிலுள்ள இந்த உரையாடல் பதிவுகளை வெளியே கசிய விட்டது யார், அல்லது யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் திரட்ட அரசே இத்தகைய அதிகாரத் தரகு நிறுவனங்களை அமர்த்திக் கொண்டது. அந்தத் தரகர்கள் மூலம் பல அந்நியக் கம்பெனிகள் கோடிகளை விழுங்கிக் கொள்ளையடிக்க அரசே உடந்தையாக நின்றுள்ளது. அது நியாயம் என்றால், அதே தரகு வேலையைச் செய்துள்ள நீரா ராடியா மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்?  இப்போது அமலாக்கப்பிரிவும் மையப்புலனாவுத் துறையும் நீரா ராடியாவிடம் விசாரிப்பதாக ஊடகங்கள் பரபரப்பூட்டினாலும், கொள்ளையடித்த முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யவோ, தண்டிக்கவோ அடிப்படை ஏதாவது இருக்கிறதா?  டாடா போன்ற தரகுப் பெருமுதலாளிகளின் பொதுக்கருத்துக்கு எதிராக அரசும் நீதித்துறையும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்பத்தான் முடியுமா?

__________________________________

- புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010