"ஆதரவு" அறிக்கையின் அரசியல் சாரம், புலியெதிர்ப்புத்தான். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இது வேறு ஒரு மக்கள் அரசியலை முன்வைத்துப் பேசவில்லை. இதன் எதிர்மறையான அரசியல் உள்ளடக்கம், அரசு சார்புதான். மாநாட்டுகாரர்கள் இதில் இருந்தும் கூட, விலகி நிற்கின்றனர். மாநாட்டுகாரர்கள் "எதிர்ப்பு ஆதரவு" உள்ளடக்கத்துக்கு வெளியில், கலைகலைக்காக என நிற்கின்றனர். இப்படி மொத்தத்தில் இதற்கு வெளியில் தான் மக்களின் நலன்கள் உள்ளது.

"எதிர்ப்பு" போல் "ஆதரவு"க்கும் கையெழுத்தைக் கோரியவர்களின் அரசியல் நோக்கத்துடன், அறிக்கையின் உள்ளடக்கம் பின்னிப்பிணைந்தது. இங்கு எந்த நடுநிலைதன்மையும் கிடையாது. ஆம் அறிக்கையின் உள்ளடக்கம், அவர்களின் அரசியலுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. புலியின் எதிர்ப்பை மறுக்கின்ற உள்ளடக்கத்தில் பின்னணியில், "ஆதரவு" அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது சாராம்சத்தில் புலியெதிர்ப்பு அரச ஆதரவை, மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனால் தான் அரசு ஆதரவாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.   

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு "எதிர்ப்பு" அறிக்கையை வழிமொழிந்தவர்கள் புலிகளும், இடதுசாரி தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளும் தான். இதற்கு எதிரான ஆதரவு அறிக்கையின் பின்னணியில் செயல்பட்டவர்கள் இலங்கை அரச எடுபிடிகளும், இடதுசாரிய அனார்க்கிசத்தை முன்தள்ளும் அதேநேரம் கலைகலைக்காக நிற்கும் சந்தர்ப்பவாதிகளும் தான்.

"எதிர்ப்பு" அரசியலுக்கு எதிரான "ஆதரவு" அரசியல் மிக நுட்பமானது. அரசு சார்பு பிரிவினர் கையெழுத்திடும் வண்ணம், மிக நுட்பமாக சதித்தனத்துடன் தயாரிக்கப்பட்ட புலியெதிர்ப்பு அரச "ஆதரவு" அறிக்கையாகும்.

புலிகள் இருந்தவரை மண்ணில் அரசும் புலியும் மக்களின் வாழ்வை அடக்கியொடுக்கினர்.  இன்று புலிகள் இல்லாத நிலையில், அரசு மட்டும் அதைச் செய்கின்றது. ஒரு எழுத்தாளரின் கடமை, மக்களைச் சார்ந்து நின்று அதை வெளிப்படுத்துவது தான்.

இந்த மாநாட்டுக்காரர் அன்றும் சரி இன்றும் சரி, மக்களைச் சார்ந்து நின்றவர்கள் அல்ல. கலைகலைக்காக என்ற எல்லைக்குள் தமக்குள் சொறிந்து கொள்பவர்கள். இந்த வகையில், மக்களுடன் நிற்காத எந்த மாநாட்டையும், நாம் ஆதரிக்க முடியாது. மக்களுடன் நிற்காத எதையும், அதேபோல் மக்களை சார்ந்து நின்று எதிர்க்காத எதையும் நாம் ஆதரிக்க முடியாது.

இந்த வகையில் மக்களுடன் சேர்ந்து நின்று தம்மை வெளிப்படுத்தாத எதையும், நாம் எதிர்த்தாக வேண்டும். மறுபக்கத்தில் ஆதாரமற்ற வகையில் இலங்கை அரசு நடத்துவதாக முத்திரை குத்திய புலியின் எதிர்ப்பு அரசியலை, நாம் எதிர்த்தாக வேண்டும். இதுவும் மக்களைச் சார்ந்து நின்று கோரவில்லை.

இப்படி

1. மக்களைச் சார்ந்து நிற்காத எதிர்ப்பு

2. மக்களைச் சார்ந்து நிற்காத ஆதரவு
 
3. மக்களைச் சார்ந்து நிற்காத இலக்கியம் (கலைகலைக்காக)  

இம் மூன்று போக்கையும் நாம் எதிர்க்கின்றோம்;
 
மக்கள் விரோத புலி எதிர்ப்பு அவதூறு அரசியலை முன்னிறுத்திய, மக்கள் விரோத "ஆதரவு" அரசியலையும் நாம் எதிர்த்தாக வேண்டும்;. இதற்குள் அரச ஆதரவாளர்கள் உள்ளடங்கிய பாசிசக் கூத்தும் இங்கு தான் அரங்கேறுகின்றது. கூடிக் கூத்தாடி கும்மியடிக்கின்ற அரசியல் பித்தலாட்டம் "எதிர்ப்பு" "ஆதரவு" "கலைகலைக்காக" என்ற வௌ;வேறு மூன்று மக்கள்விரோத  அரசியல் தளத்தில் அரங்கேறுகின்றது.

கலைகலைக்காக என்ற இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட இடதுசாரிய சந்தர்ப்பவாதிகள், கோட்பாடும் நடைமுறையுமற்ற அனாகிஸ்டுகள், அரச ஆதரவாளர்கள் கொண்ட கூட்டத்தின் சந்தர்ப்பவாத "ஆதரவு", அடிப்படையில் மக்களைச் சார்ந்து நின்று முன்வைக்கவில்லை. மாறாக புலியெதிர்ப்பு அரசியல் தளத்தில் இருந்து, அவை முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

இங்கு "ஆதரவு எதிர்ப்பு" இரு தளத்தில், இந்த மக்கள் விரோத அரசியற் பின்புலத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளமுடியாத எல்லையில் தான் பலர் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்ப்பு ஆதரவு என்ற அரசியலற்ற எதிர்நிலை எல்லைக்குள் இதை அணுகியவர்கள், இதனால் சமூகத்துக்கு என்ன நன்மை என்ற கேள்வியில் இருந்து இதை அணுகவில்லை. பலர் இதை சுயவிமர்சனம் செய்யவும், இந்த சதி அரசியலை புரிந்து கொள்ளவும் இந்த "எதிர்ப்பு ஆதரவு" அரசியல் பலருக்கு வழிகாட்டியுள்ளது.

நாங்கள் தெளிவாக இதன் மேல் கூறுவது என்ன?

1. புலி அரசியல், அரசு ஆதரவாக முத்திரை குத்தி, முடக்குவதை நாம் மறுத்தோம்.

2. புலியெதிப்பு அரசியல் மூலம் மக்கள்விரோத கூறுகளை முன்னிறுத்தி இதை ஆதரிப்பதை நாம் மறுக்கின்றோம்.

3. இலங்கையில் நிலவும் பாசிச சூழலில், பொதுவான நிகழ்ச்சிகள் நடப்பது அவசியமானது. அதை முடக்குவது பாசிசத்துக்கு துணை போவதாகும். 

4. மக்கள் சார்ந்த சக்திகள் தங்கள் அரசியலுக்காக இது போன்ற பொது நிகழ்வுகளில் செயல்படவும், கிளர்ச்சி செய்யவும் வேண்டும். வேறு விதத்தில் அல்ல. 

இந்த வகையில் மக்களைச் சார்ந்து நிற்பவர்கள் புலியை சார்ந்து நின்று மாநாட்டை எதிர்க்க கூடாது. மாறாக இதைத் தனியாகவோ, புலியெதிர்ப்புகாரருடன் சேர்ந்து இதை ஆதரிப்பதல்ல. கலைகலைக்காக என்ற இதன் அரசியலை எதிர்க்கின்றோம் என்பது, சாராம்சத்தில் இதற்குள் நாம் எமது அரசியலுக்காக கிளர்ச்சி செய்வதாகும். இலங்கையில் பாசிசத்தை எதிர்கொள்ள, இதை நாம் எம் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பி.இரயாகரன்
04.01.2011