01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

யாழ் மீண்டும் அரசியல் கொலைக் களமாகியுள்ளது

வடக்கில் நடப்பது அநேகமாக அரசியல் கொலைகள். இதற்குள் கடந்தகாலத்தில் இதைச் செய்தே, ருசி கண்ட கூட்டம் தன் பங்குக்கு மேலும் இதைச் செய்கின்றது. இதன் மீதான சட்ட நீதி விசாரணைகள் முதல் தண்டனைகள் எதுவும் கிடையாது. இன்று யாழ் அரச அதிபரின் தலைமையில் நடப்பது இராணுவத்துடன் கூடிய ஆட்சி. இரண்டும் கூட்டாக இயங்குகின்றது. இன்று இராணுவமற்ற சிவில் சமூகமல்ல வடக்கு கிழக்கு. கடந்தகாலத்தில் இரகசியமாக இயங்கிய கொலைகார கும்பல்கள் (போர்க் குற்றங்களைச் செய்த கூட்டம்) சுதந்திரமாக இயங்குகின்றது. இதுதான் இந்த சமூகத்தைக் கண்காணிக்கின்றது, தொடர்ந்தும் கொல்லுகின்றது.

 

அண்மைக்காலமாக குறிப்பாக யாழில் நடக்கும் கொலைகள், அரசியல் தன்மை கொண்டவை. கொல்லப்பட்டவர்களின்  பின்னணி மூடிமறைக்கப்பட்ட நிலையில், கசியும் தகவல்கள் இதை அரசியல் கொலையாக இனம் காட்டுகின்றது. இதன் பின்னணியில் அரச இயந்திரம் செயல்படுவது தெளிவாகின்றது.

முன்னாள் புலிகள் மற்றும் புலி பற்றிய பிரமையை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துவோர் தான், குறிப்பாக கடத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். தொடர்ந்தும் பேரினவாத பாசிச அரசு கையாளும் இனவாதக் கொள்கை, பொதுவான சமூக அதிருப்தியை உருவாக்கி வருகின்றது. இதன் எதிர்வினை மீது மெதுவான ஆனால் கோரமான படுகொலைகளை இந்த அரசு அரங்கேற்றுகின்றது.

இதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள், கடந்தகாலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கப்பம் சார்ந்து இயங்கியவர்கள். ஆம் புலனாய்வுக் கும்பல் முதல் தமிழ் கூலிக் கும்பல்வரை, இந்த பின்னணியில் இயங்குகின்றது.

உண்மையில் யுத்தக் காலகட்டத்தில், அதைப் பயன்படுத்தி அற்பத்தனமாக வாழ்ந்து ருசிகண்ட கூட்டம் தான் இதை செய்கின்றது. பெண்ணை நுகரக் கடத்தி காணாமல் போகச் செய்வது முதல் பணத்தைப் பெற கடத்திச் செல்வது வரையான அன்றைய நிகழ்வுகள் தான், இன்று வரை தொடருகின்றது.

இந்த வகையில் ருசிகண்ட கூட்டத்தின் புலனாய்வு தகவல்கள் முதல் அரசின் இனவாதக் கொள்கை வரை, இதை குறிவைத்து இயங்குகின்றது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கப்பம்.. இதை ஊக்குவிக்கின்றது. வடக்கு கிழக்கில் நடக்கின்ற பல்வேறு தொடர் சம்பவங்கள், இன்று செய்திக்கு கூட வருவது கிடையாது. இதை வெளியிடுவது என்பது உயிர்க்கு உத்தரவாதமற்ற ஒன்றாக உள்ளது.

யுத்த அவலம் முதல் தொடரும் இனவாத ஒடுக்குமுறை, மக்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கிவிடவில்லை. மீள்கட்டுமான பொருளாதாரம் என்பது உண்மையில் பிரச்சாரமே ஒழிய, நடைமுறையில் கிடையாது. வடக்கின் "வசந்தம்" போல் கிழக்கின் "உதயம்" போல், அடிமைத்தனத்தை அன்று அது பிரச்சாரம் செய்தது. மக்களின் வாழ்வின் மூலங்களை எல்லாம் யுத்தம் மூலம் அழித்த அரசு, அடிப்படை தேவையைக் கூட பூhத்திசெய்யாத அரசு, அற்பமானதைக் கொடுத்து வாழ் என்கின்றது. மறுபுறம் புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களை,  கஞ்சிக்கு கூட வழிகாட்ட இந்த அரசால் முடியவில்லை.

மக்கள் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில், இராணுவத்தையும் அடக்குமுறை இயந்திரத்தையும் தொடர்ந்து பலப்படுத்துகின்றது. இறுதியாக அரசு முன்வைத்த வரவுசெலவு ஓதுக்கீடுகள், அதையே தான் பறை சாற்றியது.

மொத்தத்தில் இவை அரசுக்கு எதிரான எதிர் வன்முறைக்கு வழிகாட்டுகின்றது. அரசு திணிக்கும் வன்முறைக்கு பதில் எதிர் வன்முறை என்பது தான் அரசியல் செய்தியாகின்றது.  இந்த நிலையில் மக்களை சார்ந்து நின்று வழிநடத்தும் அரசியல் முன்முயற்சியின்றி, கடந்தகால பாதையில் உதிரியான லும்பன்தனமான புலி அரசியல் மூலம் தான் தன்னை வெளிப்படுத்துகின்றனர். இதை குறிவைத்து கொல்கின்றது இந்த அரசு. இதற்குள் தான் ருசி கண்ட கூட்டம், தன்பங்குக்கும் மேலும் குதறுகின்றது.         

பி.இரயாகரன்
03.01.2011


பி.இரயாகரன் - சமர்