“எமது மக்களை ஏமாளிகளாக்கி மொட்டை அடிக்கும் அரசியல்!” எனது கட்டுரையை மறுஆய்வு இணையத்தளம் மறுபிரசுரம் செய்திருந்தது. அங்கு புலிப்பினாமி அமைப்பான  பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதியும், இனியொரு அண்மையில் கூடிக் கொஞ்சிக் கூலாவிய தூய தமிழ் தேசியவாதியான ஸ்கந்தாவினால் விடப்பட்ட பின்னோடம்  கீழே.

 

S.Skantha Says:

December 25, 2010 at 11:43 am

If you have guds come and discuss with me the truth.
Or you keep doing this until you die without any use to anybody.
My phone No is 02089044545.

இது தான் மறுஆய்வு தளத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை ஸ்கந்தாவால் விடப்பட்ட பின்னோட்டம். அன்றும் இன்றும் ஏன் இன்னமும் கூட புலியின் அதே பாணியில் மற்றவர்களை பயமுறுத்தி, தமக்கு அடிபணிய வைக்கும் செயற்பாட்டின் விளைவே இது. துணிவிருந்தால் தன்னுடன் தொலை பேசியில் கதைக்க அழைக்கின்றார். என்ன மாமா, மச்சான் உறவா, கதைக்க. ஆயிரம் ஆயிரம் எண்ணிக்கையிலான எம் மக்களை திட்டமிட்டே பலிகொடுத்து, பலியெடுக்க வைத்தவர்கள் இவர்கள், அந்த பிணங்களைக் காட்டி அரசியல் நடத்தியவர்கள் இவர்கள். தொலை பேசியில் எதற்காக தனியே கதைக்க வேண்டும்!

இனியொரு, புதியதிசை சேர்ந்த சந்தர்ப்பவாதிகளுடன் சேர்ந்து கூடி கதையுங்கள். நீங்கள் உங்கள் பாணியில் நியாயப்படுத்தி மூடி மறைத்து, பொதுத் தளத்தில் சொல்வதை, பொதுத் தளத்தில் நாம் விமர்சிக்கும் போது எதற்கு தொலைபேசி உரையாடல். எதற்கு துணிவு? தேவைப்படுகின்றது. பொதுத் தளத்தில் எமது விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயாராக இல்லை என்பதை, இதன் மூலம் மறுபடியும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த பாணியை புலிகள் செய்து வந்தனர். அதாவது கதைக்க கூட்பிட்டு, கதைத்த படி அவர்களைக் கொன்றது வரை. கடந்த காலத்தில் மாத்தையா முதல் கிட்டு வரை இப்படி பலதை செய்துள்ளனர்.

இவர்களின் புலிப்பினாமி செயற்பாடு, அன்றில் இருந்து இன்று வரை தொடருகின்றனர். திருந்தியவர்கள் போல தெரியவேயில்லை.  அன்று புலி இயங்கிய காலத்தில் பணம் சேர்ப்பதற்காக வீடு வீடாக ஏறி இறங்கியவர்கள், பணம் தராதவர்களை திட்டினார்கள், மிரட்டினார்கள்.  பயப்படாதவர்களை,  உங்கள் ஊர் எது அங்கு உங்கள் உறவுகளை கவனிப்போம் என்று மிரட்டி பணம் பறித்தனர். அதற்கும் பயப்பாடதவர்களை துரோகிகள் என முத்திரை குத்தினர். இந்த செயல் வன்னி புலியுடன் முடிந்து விட்டதா என்றால் இல்லை. இந்த வடிவில் தான் தமக்கு எதிரானவர்களை எல்லாம் துரோகிகள் என்கின்றனர். இதையும் தாண்டி துணிவிருந்தால் தன்னுடன் கதைக்கும் படி கூறுகின்றார். எதுக்கு துணிவு? மக்கள் முன் பகிரங்கமாக கதைக்கின்றோம். உங்களுக்கு துணிவிருந்தால் மக்களுக்கு முன் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முனையுங்கள். முதலில் புலிப் பினாமியாக இருக்க முனையாதீர்கள். எது கடந்த காலத்தில் நடந்ததோ, அதை உண்மையாக சொல்லுங்கள். எதை மக்களுக்கு எதிராக செய்தீர்களோ அதை துணிவாக முன்வையுங்கள். திருந்த முயற்சியுங்கள். நீங்கள் மக்களிற்கு உண்மையானவர்களாக இருந்து புலிகள் இயக்கத்தின் தலைமைக்கு முள்ளிவாய்க்காலில் நடத்த உண்மையையும்,  துரோகமிழைத்த புலத்துப் புலிகளையும், பினாமிகளையும், சதிகாரர்களையும் இனம் காட்டுங்கள். அப்போது தான் குறைந்த பட்சமாவது நீங்கள் நேர்மையாளர்கள் என மக்கள் கருத இடமுண்டு.

இதனை விட்டுவிட்டு இனியொருவின் காதுக்குள் சொன்னதை, எமக்கு தொலை பேசியில் சொல்லப் போகின்றாராம். பிரித்தானிய தமிழர் பேரவை மக்களுக்கு முன் பகிரங்கமாக சொல்ல துணிவில்லையா?.  மக்களை கண்டும், உண்மைகளைக் கண்டும் அஞ்சம் கோழைகள் நீங்கள். அன்றில் இருந்து இன்று வரை,  மக்களை மிரட்டியும், படுகொலைகள்  செய்தும் அடக்கி, மிரட்டி ஆண்ட கூட்டம் அல்லவா நீங்கள். இனியொரு, புதியதிசை போன்ற சந்தர்ப்பவாதிகள் தூய தமிழ் தேசியவாதிகள் என்று கூறி, கூடிக் கொஞ்சி விளையாடுவதால் புலித்தனம் மாறிவிடுவதில்லை.  இந்த தூய தமிழ் தேசியவாதிகள தமக்கு எதிரான கருத்தை முன்வைப்பவர்களை மிரட்டி அடிபணியவைக்கும் இச்செயற்பாடு, ஒன்றும் வரலாறுக்கு புதியதல்ல.

இதைப் போன்று எற்கனவே புதிய ஜனநாயக முன்னணியின் துண்டுப்பிரசுரத்தை நோர்வேயில் விநியோகித்த போது, அதை புலிப்பினாமிகள் விநியோகிக்க விடாது தடுத்ததுடன் மிரட்டவும் செய்தனர். இது மட்டுமல்லாது டென்மார்க்கில் புலியின் மனிதவிரோதச் செயல்களை ஆய்வு செய்து எழுதிய ஒரு பல்கலைக்கழக மாணவியை மிரட்டி மாற்றி எழுதும் படி புலிப் பினாமிகள் முயன்றனர். அங்காங்கே இவ்வாறு மிரட்டல்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. அன்று ஆயுதபலத்தின் மூலம் மக்களை மிரட்டி, ஒடுக்கி தமது வயிற்றினை
வளர்த்த இக் கூட்டம்,  இன்று தொடர்ந்தும் அதே பாணியில் செயற்பட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் புதிய விடையமல்ல.

இந்த பினாமிகள் நோர்வேயில் மிரட்டியதை,  நாம் எல்லா இணையங்களுக்கும் அனுப்பியிருந்தோம்.  ஆனால் அதிகமானவை இதை வெளியிடாது மௌனம் சாதித்ததன் மூலம் இந்த மிரட்டலுக்கு துணைபோயிருந்தனர். குறிப்பாக புதிய திசைகள் அமைப்புடன் அன்று நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலம். அவர்கள் கூட அதை பிரசுரிக்காது, தமது விசுவாசத்தை அன்றே புலிபினாமிகளிற்கு காட்டினர். இதை ஏன் போடவில்லை என்று கேட்தற்கு, தமக்கு நேரம் இல்லை என்ற நொண்டிச் சாட்டை கூறினர். இதிலிருந்து இவர்களது பரந்து பட்ட மக்கள் ஜனநாயகம் எப்படிப்பட்டது என இனம் காணலாம். இனியொருவிற்கும் அனுப்பப்பட்டது. அவர்களும் இதை வெளிக் கொண்டு வரவில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத இந்த பிழைப்புவாதக் கூட்டம்,  இன்னமும் மக்களையும் மக்கள் சார்ந்தவர்களையும் மிரட்டி தெடர்ந்தும் பிழைப்பை நடத்த முற்படுகின்றனர்.

இந்த மிரட்டல்களை தொடர்ந்து செய்து வரும் இந்த புலிப்பினாமிக் கூட்டத்தை நாம் தொடர்ந்தும் அம்பலப்படுத்தியே தீருவோம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர்கள் எமக்கு தரும் பட்டம் துரோகிகள்.  உண்மை தான். இவர்களின் பிழைப்பை அம்பலப்படுத்தும் துரோகிகள் நாங்கள். ஆனால் மக்களை சார்ந்து நிற்பவர்கள். மக்களின் பணத்தை சுருட்டிய நீங்கள் மாமனிதர்களாகவும், தேசப்பற்றாளர்களாகவும் வரக் கூடும். மக்களையும்,  மக்களின் துன்பங்களையும் நேசித்த உத்தமர்கள் என்றுமே துரோகிகள் தான். இதைத் தானே எமது வரலாறு காட்டி நிற்கின்றது.