06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

 

இதற்கேற்ப தேசியத்தை சிதைத்துவிடுகின்றனர். பின் போராடுவதாக காட்டுவது, அதை நியாயப்படுத்துவது, தேசியத்தை மறுத்தல் மூலம் தேசியத்தைக் கொச்சைப்படுத்துவது, என்ற போக்குகள் நிகழ்கின்றது. இதனடிப்படையில் புலியெதிர்ப்பு ராகவன் தேசியத்தை எதிர்க்கக் கூறுவதைப் பாருங்கள். 'நாடளாவிய தேசியம் தனது பிரசைகளை தவிர மற்றவரை அன்னியராக்குகிறது. இன ரீதியான தேசியம் இன்னுமொரு படி மேலே போய் தனது இன வரைவிலக்கணத்துள் பொருந்தாத அனைவரையும் அன்னியராக்குகிறது." சுத்தமான அரசியல் சூனியவாதம். தேசியம் அல்லாத, தேசிய பிரசைகள் யார் இருக்க முடியும். ஒரு நாட்டின் தேசிய பிரசைகள் என்பது, அந்த மண்ணை தனது மண்ணாக கொண்ட அனைவரையும் குறிக்கின்றது. இது எப்படி இல்லாத ஒன்றை அன்னிமாகும். கற்பனையில் யாரும் அதை உருவாக்கி, அன்னியமாக்கிவிட முடியாது.

 

தேசியம் கொண்டுள்ள சமூகக் கூறுகளை மறுக்கின்ற போதுதான், சமூகப் பிரிவுகள் அன்னியமாகின்றனர். இது தேசியத்தின் குற்றமல்ல. இதை முன்னனெடுக்கின்ற சமூகப்பிரிவுகளை உள்ளடக்கிய ஆதிக்க வர்க்கங்களின் குற்றமாகும்.

 

தேசியத்தின் சமூகத் தன்மையை மறுக்கும் போது, அந்த தேசியம் பிற்போக்கு கூறாகிவிடுகின்றது. தேசியம் என்பது சமூகக் கூறாக, மனித வாழ்வைச் சுற்றி இயங்குகின்றது. சமூகத்தில் நிலவும் ஒவ்வொரு ஒடுக்குமுறைளையும் களையாது, தேசம் சரியான தேசியப் போராட்டத்தை உருவாக்காது. இதற்கு மேல் தேசியதுக்கு மாற்று விளக்கம் கிடையாது. சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறையையும், தேசியம் களையப் போராட வேண்டும். இதிவல்லாத எதுவும் தேசியமல்ல.

 

இதற்கு புறம்பான தேசம், தேசியம் பற்றி வரையறைகள், உள்ளடக்க ரீதியாக பிற்போக்கானது. அது தனது போராட்டத்தை மக்களைச் சார்ந்து எடுத்துச் செல்லமுடியாது. அதுவே மக்கள் மேலான ஒடுக்குமுறை கொண்ட ஒன்றாக பரிணமிக்கின்றது. ஒற்றைப் பரிணாமத்தில் தேசியத்தை காட்டி, அதையே மறுப்பது என்பது, அதற்குரிய முற்போக்கு சமூக பாத்திரத்தை மறுத்தலாகும். சமூகம் சார்ந்த எந்தப் போராட்டமும், முற்போக்கான சமூகக் கூறுகளாலானது.

 

இதைக் காணவிடாது அதை திரிப்பது என்பதே புலியெதிர்ப்பு அரசியல் சாரம். இது தேசியத்தை புலியில் இருந்து காட்டுகின்ற நயவஞ்சகத்தனமாகும். புலிக்கு வெளியில் வேறு தேசியம் இருக்க முடியாது என்று புலியெதிர்ப்பு, புலி அரசியல் தான் இதைக் கூறுகின்றது. 'தேசியவாதம் ஒரு புறம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒற்றைப் பரிமாண அடையாளத்துள் குறுக்குகிறது. மறுபுறம் சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறைக்கப் பார்க்கிறது." இதை புலிகள் செய்வதால், புலிகளாகவே தேசியத்தை சிந்திக்கும் ராகவனாலும் மீள கூற முடிகின்றது.

 

'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறை" க்காத தேசியம் இருக்கமுடியாது என்று கூறுவது தான், புலித் தேசியம். அதுபோல் தான் புலியெதிர்ப்பு தேசியமும் கூறுகின்றது. என்ன அரசியல் ஒற்றுமை. வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை களையக் கோரி போராட்டம், இந்த மண்ணில் நடந்துள்ளது. இதை வசதியாக வசதி கருதி மூடிமறைப்பது தான் புலியெதிர்ப்பு அரசியல். உண்மையில் இதற்காக போராடியவர்கள் நினைவுகளைக் கூட, இவர்கள் அங்கீகரிப்பது கிடையாது. அந்தளவுக்கு இதை களைவதற்கு எதிரானவர்கள் இவர்கள்.

 

இலங்கையில் அமைதி வேண்டி தீர்வுகளைத் தேடும் இந்த கனவான்கள், இதை களைவதை தமது தீர்வுத் திட்டத்தில் சேர்க்கவே மறுக்கின்றனர். இங்கு இவர்களே அதை மூடி மறைக்கின்றனர். வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை களையும் தீர்வுத் திட்டத்தை, இவர்கள் முன்வைப்பதில்லை. அதை களைய போராடுவது கிடையாது. நீங்களே அதை மறுக்கும் போது, புலிகள் போன்ற பாசிச இயக்கங்கள் எந்த மாத்திரத்தில் இதைக் களைந்துவிடும்.

 

மற்றவனுக்கு சொல்ல முன் உங்கள் வேலைத்திட்டம் இதை எப்படி களைய முனைகின்றது என்றல்லவா வைக்க வேண்டும். தேசியம் அதை சமூக வேறுபாடுகளை களையாது என்றால், எதுதான் அந்த வேறுபாடுகளைக் களையும். உங்கள் அரசியல் தீர்வுகளும் கூட அதை நிராகரிக்கின்றது. தேசியத்தை எதிர்க்க இப்படி பூச்சாண்டி காட்டுகின்றீர்கள்.

 

உண்மையில் எங்கும் இதை மூடிமறைத்து பாதுகாக்க விரும்புவது, அது கொண்டுள்ள வர்க்க அரசியல் தான். அது புலியாக இருந்தால் என்ன, புலியெதிர்ப்பாக இருந்தால் என்ன, இரண்டும் ஒன்றுதான். 'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை மூடி மறை"த்து பாதுகாப்பது தான். இது புலித்தேசியத்தின் கூறு மட்டுமல்ல, புலியெதிர்ப்பு தேசிய மறுப்பின் கூறும் கூட.

 

பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் 'சமூக யதார்த்தமாக இருக்கும் வர்க்க சாதி ஏற்ற தாழ்வுகளை கலாச்சார வேறுபாடுகளை பிரதேச வேறுபாடுகளை" களைய போராடுகின்றது. இதை தேசியத்திலும் சரி, தீர்விலும் சரி இதையே தனது வேலைத் திட்டமாக கொள்கின்றது.

 

பி.இரயாகரன்
04.12.2007


பி.இரயாகரன் - சமர்