சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்.13ஆம் தேதியன்று ஆசிரியர் ஒருவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைத் தரக்குறைவாகப் பேசி அடித்ததும், இப்பள்ளியில் பு.மா.இ.மு. அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் இது பற்றி அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் மீண்டும் திமிராகப் பேசவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டு இனி இதுபோல் நடவாதிருக்க உறுதி தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியின் அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினை முடிவடையும் நேரத்தில், திடீரென அங்கு தனது அடியாட்களுடன் வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவரும் இப்பகுதியின் ரவுடியுமான டி.பி.ஜோசுவா, மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி விரட்டத் தொடங்கினான்; தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி விழுந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடை என்ற பெயரில் வசூலித்து ஏப்பம் விட்ட கட்டப்பஞ்சாயத்து பொறுக்கி கும்பலின் தலைவன்தான் ஜோசுவா. மாணவர்களையும் இப் பகுதிவாழ் உழைக்கும் மக்களையும் திரட்டிப் போராடி இக்கட்டாய நன்கொடையை பு.மா.இ.மு. ஒழித்துக் கட்டியது. தனது அடித்தளம் ஆட்டம் கண்டதால், வஞ்சம் தீர்க்க தருணத்தை எதிர்பார்த்திருந்த ஜோசுவா, பு.மா.இ.மு. மாணவர்கள் முற்றுகையிட்டிருப்பதாக அவனது விசுவாசிகளான ஆசிரியர்கள் தகவல் கொடுத்ததும், உடனே ஓடி வந்து கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறான். இந்த ரவுடியை எதிர்த்து, ""உனக்கும் இந்தப் பள்ளிக்கும் என்ன தொடர்பு?'' என்று கேள்விகேட்ட ஆனந்தன் என்ற மாணவனை இடைவேளையின் போது வெளியே இழுத்துச் சென்று, ஜோசுவாவின் மகனது தலைமையில் அடியாட்கள் தாக்க, ஆசிரியர் ஒருவர் விவரமறிந்து அம்மாணவனை மீட்டு வந்துள்ளார்.
தகவலறிந்து அங்கு திரண்ட பு.மா.இ.மு. தோழர்கள் அம் மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, போலீசு நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்கைப் பதிவு செய்தனர். முதன்மைக் குற்றவாளிகளான ஜோசுவாவையும் அவனது மகனையும் கைது செய்யாமல், அவர்களது அடியாட்களில் இருவரைக் கைது செய்து விட்டதாகப் போலீசு பசப்பியது. இதை எதிர்த்து அக்.15ஆம் தேதியன்று பு.மா.இ.மு. தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகல்லூரி மாணவர்களும் இளைஞர்களுமாக ஏறத்தாழ 500 பேர் அணிதிரண்டு குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு முழக்கமிட்டு போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர் .
பீதியடைந்த போலீசு, ஜோசுவாவைக் கைது செய்து துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்திருப்பதைத் தோழர்களிடம் காட்டியதோடு, விரைவில் அவனது மகனையும் கைது செய்வதாக உறுதியளித்ததால், இம்முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
தன்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று கொட்டமடித்து வந்த ஜோசுவா கும்பல் இப்போது அரண்டுபோய் போலீசிடம் தஞ்சம் புகுந்து நிற்கிறது. பள்ளி மாணவர்களிடம் தனது வீரத்தைக் காட்டிய ஜோசுவாவை அவனுக்கு வேண்டப்பட்டவர்களே காறி உமிழ்கின்றனர். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் கொட்டமடித்து வந்த ரவுடியை முடக்கிப் போட்ட பு.மா.இ.மு. தலைமையிலான இப்போராட்டம், இப் பகுதிவாழ் மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் ஆதரவோடு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.