கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் பள்ளி மாணவர் பாரத் ஐப் படுகொலை செய்தவர்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்ட ம் நடத்தியது. (புதிய ஜனநாயம் அக்.2010 இதழ்) அதன் பின்னரும் பெண்ணாடம் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிடுவதெனத் தீர்மானித்து, பெண்ணாடத்திலிருந்து மாவட்டத் தலைநகரான கடலூருக்கு அக். 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக வி.வி.மு. அறிவித்தது. இதனால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்து கந்தலாகிவிடும் என்று அஞ்சிய கடலூர் மாவட்ட போலீசு, இந்நடைபயணத்திற்குத் தடைவிதித்தும், மீறி வந்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தும், பெண்ணாடத்தில் ஏராளமான போலீசைக் குவித்துப் பீதியூட்டியது.

 

 

 

போலீசின் அடாவடித்தனத்தை எதிர்த்து, அக்டோபர் 7,8,9,10 ஆகிய நான்கு நாட்களில் பெண்ணாடத்தைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி யோடு, மக்களிடமே நீதி வழங்குமாறு பிரச்சார இயக்கத்தை வி.வி.மு.வினர் மேற்கொண்டனர். பல பகுதிகளில், இப்பிரச்சாரத்தையும் மாணவர் பாரத் கொல்லப்பட்ட கொடுமையையும் அறிந்த உழைக்கும் மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். ஏழைகளான பாரத் இன் பெற்றோர் தமது மகனுக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு போராடி வருவதை விளக்கி, சட்டப்படி வழக்கு தொடுக்க நன்கொடை அளிக்கக் கோரியபோது, உழைக்கும் மக்கள் தாராளமாக நிதியளித்ததோடு, அரசு போலீசு ஓட்டுக்கட்சிகள் மீது தமது வெஞ்சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர். கொலைகாரர்களைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 11.10.2010 அன்று பெண்ணாடத்தில் வி.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு. தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் கண்டன உரையாற்றினர். கொலைகாரர்களும் கொல்லப்பட்ட மாணவனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாயினும் பாரத் ஏழை என்பதால், தாழ்த்தப்பட்டோருக்காக நிற்பதாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் இந்த விவகாரத்தைப் புறக்கணிப்பதையும் கொலைகாரர்களுக்கு ஆதரவாக போலீசு செயல்படுவதையும் அம்பலப்படுத்தி காலை முதல் மாலை வரை நடந்த எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. கொலைகாரர்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரி பிரச்சார இயக்கம் தொடர்கிறது.

 

பு.ஜ.செய்தியாளர்