Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா !

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த போராளி டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க !!

மருத்துவ வரலாறு எத்தனையோ தலைசிறந்த மருத்துவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிதே. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்.

இந்தியாவின் பெருமைக்குரிய புதல்வர்களில் ஒருவராகவும், உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்தியா அளித்த தியாகிகளில் ஒருவராகவும், சீன மக்கள் இன்றும் தங்கள் நெஞ்சங்களில் ஏற்றிப் போற்றும் ஒப்பற்ற நண்பராகவும் திகழ்ந்தவர்தான் டாக்டர் கோட்னிஸ்.

டாக்டர் கோட்னிஸ்

செம்படை கூட்டத்தில் உரையாற்றும் மருத்துவர் (1942) - சீனாவில் மருத்துவரின் சிலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூரில் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் நாள் பிறந்த கோட்னிஸ், பம்பா கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று, அக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

1938-ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சீன மக்கள் போராடி வந்தனர். இந்நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்தியா முழுவதும் சீன மக்களுக்கு உதவும் இயக்கம் அப்போது நடைபெற்றது. போராடும் சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட சிறந்த மருத்துவர்கள் குழு அனுப்பப்பட்டது. அந்த ஐவரில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ். சீனா சென்றதும் அவர் அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரான தோழர் சூயென்லா-ஐச் சந்தித்தார். பின்னர் மருத்துவ உதவி தேவைப்பட்ட யேனான் பகுதிக்கு 1939-இல் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சென்றார்.அங்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் மாவோ கோட்னிஸ் குழுவை நேரில் வந்து வரவேற்றார்.

உலகப் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராக விளங்கிய கனடா நாட்டு மருத்துவர் டாக்டர் நார்மன் பெத்தூன் சீன மக்களுக்காகவே உழைத்து சீனாவிலேயே மரணமடைந்தார். அவரையே தனது வழிகாட்டியாகக் கொண்டு டாக்டர் கோட்னிஸ் பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வோடு சீன விடுதலைக்காகப் பாடுபட்டார். போர்முனையில் ஊனுறக்கமின்றி போர் வீரர்களுக்கு மருத்துவம் பார்த்தார், டாக்டர் கோட்னிஸ். அதைத் தொடர்ந்து சீன மக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாக்கிய நார்மன் பெத்தூன் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பொறுப்பேற்று, வசதிகளே இல்லாத போர்ச் சூழலில் அக்கல்லூரியை வளர்த்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். பல மைல் தூரம் சென்று விறகு பொறுக்கி வந்து உணவு சமைக்க வேண்டிய இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலிலும், அவர் தன்னலமற்றுப் பணியாற்றி சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தார்.

நார்மன் பெத்தூன் சர்வதேச அமைதி மருத்துவமனையின் இயக்குநராகப் பொறுப்பேற்று சீன மக்களின் பெருமதிப்பைப் பெற்றார் டாக்டர் கோட்னிஸ். இம்மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த குவோ குயிங்லான் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு இந்திய-சீன நட்புறவைக் குறிக்கும் வகையில் “இன்குவா” என்று அவ்விளம் தம்பதிகள் பெயரிட்டனர்.

1942 ஜூலையில் டாக்டர் கோட்னிஸ் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மருத்துவத்தைப் போதிக்கும் அளவுக்கு சீன மொழியை முயன்று கற்றார். ஓவின்றிக் கடுமையாக உழைத்ததால், கோட்னிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான வலிப்புநோய் தாக்கி தனது 32-வது வயதிலேயே, 1942 டிசம்பர் 9-ஆம் நாள் அவர் உயிர் துறந்தார்.

அவரது மரணச் செய்தி அறிந்த மக்கள், சீனா முழுவதும் துக்கம் அனுசரித்தனர். 1942 டிசம்பர் 30-ஆம் நாளன்று நடந்த இரங்கற் கூட்டத்தில் சீன மக்கள் இராணுவத்தின் தலைமைத் தளபதியான தோழர் சூடே முன்னிலை வகித்து டாக்டர் கோட்னிசுக்கு அஞ்சலி செலுத்தினார். அக்கூட்டத்தில் தோழர் மாவோ கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

டாக்டர் கோட்னிசை தங்கள் முப்பாட்டனாகக் கருதும் சீன மக்கள், டாக்டர் கோட்னிஸ் நினைவாக ஹீபெ மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங் நகரில் உருவாக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையையும்  நினைவு மண்டபத்தையும் இன்றும் போற்றி வருகின்றனர். “டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி” என்ற திரைப்படம் இந்தியாவில் வெளிவந்து அவரது புகழைப் பரப்பியது.

ஏழை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதே மருத்துவ தர்மமாக மாறிவிட்ட இன்றைய கேடுகெட்ட சூழலில், தன்னலமின்றி சீன விடுதலைக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த டாக்டர் கோட்னிஸ் நீலவானில் ஒரு சிவப்பு நட்சத்திரமாக மின்னுகிறார்.

கோட்னிஸ் தன்னலமற்ற மருத்துவர் மட்டுமல்ல, அவர் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராளி. அவரது நூற்றாண்டு விழா உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கத்தால் பெருமையுடன் கொண்டாடப்பட்டுவரும் இத்தருணத்தில், அவரது நினைவை நெஞ்சிலேந்தி அவர் கற்றுத்தந்த பாதையில் முன்னேறுவோம்!

டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க!

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_____________________________