Language Selection

புதிய ஜனநாயகம் 2010

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

 ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

இந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்

  • தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
  • இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
  • இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
  • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
  • இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
  • இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
  • ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஐரோம் சர்மிளாஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.

சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.

இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_______________________________