Language Selection

புதிய ஜனநாயகம் 2010

“ஆதார்” எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 29 அன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் நந்தன் நிலகேணி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்த தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம், திட்டக் கமிசனால் உருவாக்கப்பட்டு, நந்தன் நிலகேணி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?இதன்படி மக்களின் பத்து கைவிரல் ரேகைகளும், கண் பாவை, முகம், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட விவரங்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் கிடங்கில் பதிவு செய்யப்படும்; அனைவருக்கும் 12 இலக்க எண் ஒன்றும் கொடுக்கப்படும். புகைப்படமும், மின்னணுத் தகவல் சில்லுடனும் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை மூலம் பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும்; கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதி மக்களைச் சென்றடையும்; அனைவருக்கும் கல்வி கிட்டும்; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் அடையாளம் தரப்படும்; அரசின் நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடையும்; அதிகாரிகளின் ஊழல்-முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்; நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இவற்றுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் இந்தக் காரணங்கள் கற்பனையானவையே. உண்மையான காரணம் நாட்டு மக்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போலக் கண்காணிப்பதும், உளவு வேலை பார்ப்பதுமேயாகும். இதையே, “சட்டவிரோத அகதிகள் அதிகரித்து விட்டனர், எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும்” என 2001-இல் தேசியப் பாதுகாப்பைச் சீரமைப்பதற்கான மைய அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை தெளிவுபடுத்தியது.

பா.ஜ.க. ஆட்சியில்  2002-இல் இத்திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 2008-இல் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை (MNIC) என்ற பெயரில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காகவென்று பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டத்தைத்தான், “ஆதார்” என்ற பெயரில் நாட்டு மக்களின் ஏழ்மையைப் போக்க கொண்டுவருவதாக மன்மோகன் அரசு கூறுகிறது.

தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான என்.சி.சக்சேனா அடையாள அட்டையின் அருகதையைப் பற்றிச் சொல்லும்போது, “பொது விநியோக அமைப்பே சீர்கெட்டுப் போ, அதற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில் 36% கள்ளச்சந்தைக்குச் செல்கிறது; தேசிய அடையாள அட்டையால் இவற்றைத் தடுக்க இயலாது” என்கிறார்.

ரேசன் அட்டை இருந்தும் உணவு தானியம் கொடுக்கப்படாததற்கு மக்களால் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதது காரணமல்ல. ஆனால், அடையாள அட்டை கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும் அரசின் உண்மையான நோக்கம், “சேம நலச் செயல்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன்,  பொது விநியோக அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதும்தான்” எனச் சமூக ஆய்வாளர் ராம்குமார் கூறுகிறார். இதைத்தான், “தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தால், பொது விநியோக முறைக்குப் பதிலாக உணவுக் கூப்பன்கள் மூலம் தனியார் கடைகளில் உணவு வாங்கிக் கொள்வது சாத்தியமாகும்”  எனத் திட்டக் கமிசனும் சொல்கிறது. மன்மோகனும், “அடையாள அட்டை வழங்குவதன் மூலம் இலக்கு தெரியாமல் கொடுக்கப்படும் மானியங்களை ஒழித்துத் தேசிய வருவாய்ப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும்” என வழிமொழிகிறார்.

1999 கார்கில் போருக்குப் பிறகு  நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புக்கான கருவிகளைச் செழுமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்தது.  இதைத்தான் புலனாய்வுத் துறையின் (IB) முன்னாள் இயக்குனர் ஏ.கே. டோவல், “தேசிய அடையாள அட்டை திட்டம் உண்மையில் அந்நியர்களையும், சட்டவிரோதிகளையும் இனம்காட்டுவதை நோக்கமாகக் கொண்டது; ஆயினும் தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக என்று முன்னிறுத்தப்பட்டால்தான் மக்கள் பயப்படாமல் தகவல்களைக் கொடுப்பார்கள்” என்று சொல்கிறார். மேலும், “எல்லா தகவல் கிடங்குகளும் இணைக்கப்பட்டுவிடுவதால் இந்தத் திட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம்; எனவே, தேசப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடைக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

ஏற்கெனவே ப.சிதம்பரம் அறிவித்துள்ள தேசியப் புலனாய்வு இணையத் தொகுப்பின் (Nat Grid) கீழ் நாடு முழுவதும் பல்வேறு தகவல் கிடங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கவும், பின் தொடரவும் இயலும். இவற்றுடன் “ஆதார்” இணைந்தால் அரசால் எங்கும் யாரையும் குறிவைத்துத் தாக்க இயலும்.

“நாட்டு மக்களுடைய தனிமனித சுதந்திரத்தை, தேச முன்னேற்றம் போன்ற எதற்கு மாற்றாகவும் விலை பேச முடியாது” என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்யா சென். அரசோ, தேசப்பாதுகாப்பிற்காக மக்கள் தமது சுயகௌரவத்தையும், தனிமனித உரிமையையும் விட்டுக் கொடுப்பதும், அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்துவதும் தப்பில்லை என்று சூசகமாகச் சொல்கிறது.

தேசிய அடையாள அட்டை என்பது முகவரி மற்றும் அடையாள விவரங்களைக் கொண்ட எளிமையான தகவல் அட்டை என்றாலும் கூட, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், வருமான வரி எண், வங்கி எண், வாக்காளர் அட்டை, மருத்துவ சேவைக்கான அட்டைகள் போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் தகவல் கிடங்குகளுடன் இணைக்கப்படுவதன் மூலம் குறிப்பிட்ட அட்டைக்குரிய  நபர் பற்றிய அத்துணை விவரமும் சேகரிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இது ஒரு மைய இழை போலச் செயல்படும்; ஒருவருடைய தேசிய அடையாள அட்டையைக் கொண்டே, அவர் மீதுள்ள வழக்குகள், வங்கிக் கணக்குகள், பிடித்த பொருட்கள், மருத்துவப் பிரச்சினைகள், உணவுப் பழக்கம், அரசியல் சார்புகள், ரசனை என்று முழு விவரங்களையும் சேகரிக்க இயலும். மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்  மூலமும், இணையச் செயல்பாடுகளின் ஊடாகவும் அவருக்கே தெரியாமல் அவர் பற்றிய விவரங்கள் தினந்தோறும் சேகரிக்கப்படும். நாளடைவில் ஒரு தனிநபரைப் பற்றி அவரை விடவும், அவருக்கு நெருக்கமானவர்களை விடவும் அரசும், அதிகாரத்தில் உள்ளவர்களும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பர்.

தனிநபர் அடையாளங்களை முறைப்படுத்துதல் (PIC-Personal Identification Codification) திட்டத்தின் நோக்கமே பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனிநபரையும் ஓர்மையாக இனங்காண வேண்டும் என்பதாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்  தேசிய அடையாள அட்டையின் மூலம், ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பொது வெளியில், அதிகாரத்தில் உள்ளவர்களின் ‘கருணைப் பார்வை’யில் வைத்துக் கண்காணிப்பது சாத்தியமாகும்.

விவசாயத்தின் சீரழிவால், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நாடு முழுவதும் அத்துக்கூலிகளாக அலைகிறார்கள்.  தன் மீது அதிருப்தியில் இருக்கும் இவர்களை அரசு எப்போதும் கண்காணிக்கவே விரும்புகிறது. மேலும், அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளினால், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்படைந்து வரும் சூழலில், நாடு தழுவிய உளவுத்தகவல் ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. இதனை நிறைவு செய்யும் நோக்கத்துடனேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக ஏழை உழைக்கும் மக்களிடமும், நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடோடிகளாத் திரியும் ஏழை மக்கள் எங்கு சென்றாலும் ‘நீ யார்?’ என்ற கேள்வியை எதிர்கொள்கிறார்கள். இரகசியப் புகைப்படக் கருவிகள், இரவு நேர ரோந்துகள் என நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அடையாள அட்டை இன்றியமையாததாகிவிட்டது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா, பிரிட்டன் என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நடுத்தர வர்க்கம், புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, நமக்கும் ஒரு அடையாள அட்டை தேவை என்கிறது. அங்குள்ள அட்டைகள் சமூக உரிமைகளை உத்திரவாதம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், தனிமனித உரிமைகளைக் காக்கும் சட்டங்களும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கடுமையாக உள்ளன என்பதை இவர்கள் உணர்வதில்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவான மனநிலையை பயன்படுத்திக் கொண்டு,  தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், எல்லாவகையான ஜனநாயக உரிமைகளையும் மீறி அமல்படுத்தப்படுகிறது.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?நந்தன் நிலகேணி தலைமையிலான இவ்வமைப்பு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அதன் கட்டுப்பாட்டிலில்லாத, சர்வாதிகார அமைப்பாகும்.  இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்கள் பெறவும், பயன்படுத்தவும் ஒப்பந்தங்கள் பலவற்றைப் போட்டுள்ளது.

இந்த அமைப்பு முன்வைத்துள்ள “தேசிய அடையாள ஆணையச் சட்டம் 2010″ என்ற சட்ட முன்வரைவின்படி, தேசிய அடையாள அட்டை சார்ந்த தகவல்களை வாங்க, நீதிமன்ற உத்தரவோ, துறை சார்ந்த இணைச் செயலாளரின் ஆணையோ இருந்தால் போதும். ஆனால், இது தனிமனித உரிமையைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களுக்கும், ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும்கூட விரோதமானது.

நாட்டு மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேமித்து வைத்துள்ள இத்தகைய தகவல் கிடங்கைப் பாதுகாக்கவோ, அதனைக் கையாடல் செய்யும் ஒருவரைத் தண்டிக்கவோ எந்த வழிமுறையையும் இந்தச் சட்ட முன்வரைவு கொண்டிருக்கவில்லை.  இந்தத் தகவல் கிடங்கில் கைவைப்பதன் மூலம் அரசுக்குப் பிடிக்காதவரை ஒழித்துக்கட்ட இயலும். ஒருவர் இருந்ததற்கான தடயங்களை முழுவதும் அழிக்க முடியும்.

கொடும் சித்திரவதைகளையும், போலி மோதல் கொலைகளையும் தனது அன்றாட வழக்கமாகக் கொண்ட அரசின் கையில், மக்களின்  நடவடிக்கைகள்அனைத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் இருப்பது மிக அபாயகரமானது.  விசாரணைக் கைதிகளாகவே பலரை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்துள்ள நாடுதானே இது? பசுமை வேட்டையை அம்பலப்படுத்தியதற்காக அருந்ததி ரா போன்றோரை ஒழித்துகட்ட விரும்பும் அரசுதானே இது?

சொந்த நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்டு, தன்னைச் சுற்றி அபாயமிருப்பதாகப் பீதியடையும் அரசு, நடைமுறைப்படுத்தும் பாசிசத் திட்டமே இது. நாட்டில் சிவில்  உரிமைகள் ஏற்கெனவே சட்டப்படி உறுதி செய்யப்படவில்லை; இருக்கும் அற்பமான உரிமைகளை அடைய நீதிமன்றப் படிக்கட்டுகளையும், பல்வேறு போராட்டங்களையும் கடக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம், அடிமைத்தனங்களையே உயர்வானதாக மதிக்கும் கலாச்சாரப் பிற்போக்குத்தனம் மக்களிடம் வேரூன்றிக் கிடக்கிறது. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலில்  அதிஉயர் தொழில்நுட்பங்களின் ஊடாக நிறுவப்படும் அரசுக் கண்காணிப்பு, கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இவையெல்லாம் கட்டுக்கதைகளல்ல. சென்னையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய போது, வீடுவீடாகச் சென்ற காவல்துறை, தலித்துகளைக்  குறிவைத்துக் கைது செய்தது. குஜராத்தில், காவி பயங்கரவாதிகள் ரேசன் கார்டு, வாக்காளர் பட்டியல் உதவியுடன் முசுலீம்களைக் குறிவைத்துக் கொன்றொழித்தனர்.

இவையெல்லாம் இனி தேசிய அடையாள அட்டையின் உதவியுடன் சிக்கலின்றி, தாமதமின்றிச் செய்யப்படும். அரசுடன் முரண்பட்டு சிறு கண்சிமிட்டல் செய்தால் போதும், நீங்கள் குறி வைக்கப்படுவீர்கள்; உங்களது அந்தரங்கம் அரசால் கண்காணிப்படும்.

இலங்கையில் அடையாள அட்டை இல்லாத தமிழன் அரைப்பிணத்துக்குச் சமம். அத்தகைய நிலை ஏற்கெனவே காஷ்மீர், மத்திய இந்திய, கிழக்கிந்தியப் பகுதிகளில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதை தேசிய அடையாள அட்டை உறுதி செய்யும். இது, காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகளின் பட்டியலைப் போன்றது. இன்னும் சரியாகச் சொன்னால், நவீன குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றது.

காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக,  மக்கள் போராடினர். ஆனால், இன்று இத்தகைய அடிமைச் சின்னங்களே பெருமிதமிக்கதாக முன்னிறுத்தப்படுகிறது.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010