நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது.

6,400 தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இம்மேல்முறையீடுகளின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்கும்படி கோவிந்தராஜன் கமிட்டிக்கு உத்தரவிட்டிருக்கும் உயர் நீதிமன்றம், அதுவரை கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள் என இந்த 6,400 பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கவில்லை.

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

இதற்கு மாறாக, அந்த 6,400 தனியார் பள்ளிகளும் கடந்த கல்வியாண்டில் வசூலித்த கட்டணத்தையே நடப்புக் கல்வியாண்டிலும் வசூலித்துக் கொள்ளலாம் என அப்பள்ளிகளுக்குச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகமாக இருந்தால் – குறைவாக எப்படியிருக்கும்? – அக்கூடுதல் தொகையைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றம்.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத 4,000 பள்ளிகளும்கூட அக்கமிட்டி நிர்ணயம் செய்திருக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என இத்தீர்ப்புக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அப்பள்ளிகளும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிந்தராஜன் கமிட்டி ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் கொண்டதெனக் கூறப்படுகிறது. இக்கமிட்டியின் விதிகளின்படி தான் நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்; அப்பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம்.

வெளிப்படையாகவே கட்டணக் கொள்ளை நடத்தி வரும் கல்வி வியாபாரிகளுக்கு இத்தண்டனையை அளிக்க உயர் நீதிமன்றத்திற்கு மனது வரவில்லை. அதே சமயம் வசூலித்த கூடுதல் கட்டணத்தைப் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி உத்தரவிடவும் நீதிமன்றம் விரும்பவில்லை. நீதிமன்றத்தின் இந்தக் கருணை முடிந்த அளவிற்குக் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொள்ளும் துணிச்சலைப் பல பள்ளிகளுக்கு வழங்கிவிட்டது.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் நவம்பரில் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் கூடுதலாக இருந்தால், அதனைப் பள்ளிகள் பெற்றோரிடம் திருப்பி வழங்கிவிடும் என நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். யானை வாயில் போன கரும்பு திரும்பி வருவது சாத்தியமென்றால், இதனையும் நாம் நம்பலாம்.

கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டுவைக்க வேண்டும் என்ற பெயரில், கல்வி வியாபாரிகள் இக்கொள்ளையைப் புறக்கடை வழியாக அனுபவிக்கும் உரிமையை அளித்திருக்கிறது, உயர் நீதிமன்ற ஆயம். உயர் நீதிமன்றத்தின் இந்தக் கபடத்தனத்தையும் கூட்டுக் களவாணித்தனத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய வேளையில் பெற்றோர்களோ உயர் நீதிமன்றம் தங்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பதாகப் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு பள்ளிக் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் கோவிந்தராஜன் கமிட்டியை நிறுவியிருந்தாலும், தமிழக அரசின் நடைமுறை இப்பிரச்சினையில், “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு” என்பதாகத்தான் அமைந்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மிகவும் தாமதமாகத்தான் மேல்முறையீடு செய்தது.

கோவிந்தராஜன் கமிட்டி நிரணயம் செய்த கட்டணங்களை உடனடியாக வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்ததன் மூலம், தனியார் பள்ளிகள் தமது விருப்பம்போல கட்டணக் கொள்ளையை நடத்தத் துணை நின்றது, தமிழக அரசு.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என அதனின் விதி கூறுகிறது. ஆனால், இக்கட்டண விகிதத்தை எதிர்த்துக் கூச்சல் போட்ட கல்வி வியாபாரிகள் முதலமைச்சரைச் சந்திக்கிறார்கள்; அங்கு என்ன பேரம் நடந்ததோ, உடனடியாக அவர்களை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது, தமிழக அரசு; அம்மேல்முறையீட்டின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியாக அவ்விதி செல்லாக்காசாக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டு தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையைத் தொடங்கி விட்டன என்பதும், கூடுதலாக வசூலிக்கும் பணத்திற்கு பள்ளிகள் எந்த ரசீதும் தருவதில்லை என்பதும், கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களைத் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துச் சட்டவிரோதமாகப் பள்ளியிலிருந்து நீக்கி விடுகின்றன என்பதும் தமிழக அரசின் கண் முன்னேதான் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக அரசோ பள்ளிகள் மீது பெற்றோர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசின் இந்த அனுசரணையான போக்கு ஒருபுறமிருக்க, தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிறுபான்மையினரின் பெயராலும், டிரஸ்டுகளின் பெயராலும்தான் நடத்தப்படுகின்றன. இப்படிச் செயல்படும் பள்ளிகள் தங்களின் பணத்தேவைக்குப் புரவலர்களைத்தான் அணுக வேண்டுமேயொழிய, கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டியோ டிரஸ்டுகளின் பெயரால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதம் இலாபத்தைப் பெறும்படிதான் கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்கிறது. மேலும், பேருந்துக் கட்டணம் போன்ற பிற வழிகளிலும் பெற்றோர்களைக் கொள்ளையடிப்பதற்கும் அப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்திருக் கிறது.

விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகள் நடத்திவந்த கட்டணக் கொள்ளை யைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசும் கோவிந் தராஜன் கமிட்டியும் செய்திருக்கும் ‘சாதனை’.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் இக்கட்டணக் கொள்ளையை ஒழித்துக்கட்ட முடியும்.

ஆனால், ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் நடக்காதபட்சத்தில் அரசும் நீதிமன்றமும் தலையிட்டு அவர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது, ஆடு ஓநாயிடம் நீதியைக் கேட்கும் புத்திசாலித்தனம் போன்றது.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_______________________________