ஒரு உரிமையியல் மூல வழக்கில் முஸ்லிம்களின் ஆவணச் சான்றுகளையும் அனுபோக உரிமையையும் புறக்கணித்துவிட்டு, ராமன்பிறந்த இடம் இதுதான் என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம் பார்ப்பனப் புராணப் புரட்டுகளுக்கும் இந்துவெறி பாசிச சதிகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பை அங்கீகரித்து, இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளைக் கௌரவித்திருக்கிறது, இந்த அநீதி மன்றம். இந்துவெறி பயங்கரவாதிகள் இத்தனை காலமும் என்ன சொல்லி வந்தார்களோ, அதையே அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள், மூன்று பேர் கொண்ட அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள்.
“பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கே உரியது. அதுதான் ராமன் பிறந்த இடம். கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத முடியாது. அதன் மீது சன்னி வக்ப் போர்டுக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்கிறார் நீதிபதி சர்மா.
“ராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வந்துள்ளார்கள். எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்குத் தரப்பட வேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜென்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தரப்பட வேண்டும்” என்பதே நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
“ஏற்கெனவே பாழடைந்து போயிருந்த கோயிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதே தவிர, கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாட்கள் முன்பாகவே அந்த இடத்தில் ராமன் பிறந்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. ராம்சபுத்ரா கட்டுமானங்கள் உருவாவதற்கு முன்னரே இந்துக்கள் மசூதியின் சுற்றுச்சுவர் அருகே வழிபாடு செய்து வந்துள்ளனர். தங்களது தனிப்பட்ட உரிமை குறித்த எந்த ஆவணத்தையும் இருதரப்பினராலும் தர இயலவில்லை. இது இருதரப்பினரது அனுபோக பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. மேற்கண்ட நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்குக் கீழுள்ள பகுதி இந்துக்களுக்குத் தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று தரப்பினருக்கும் தரப்பட வேண்டும்” என்பது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
ஒரு நீதிபதி நேரடியாகவே பார்ப்பன மயமான தீர்ப்பை அறிவிக்கிறார். மற்றொருவருவர் அதையே சுற்றிவளைத்து வேறு வார்த்தைகளில் நியாயப்படுத்துகிறார். இன்னொருவரான கான், பிறப்பால் முஸ்லிமாக இருந்த போதிலும் அநீதிக்குத் தெரிந்தே துணைபோகிறார்.இந்த அநீதிபதிகளின் தீர்ப்புப்படி, முஸ்லிம்களின் மனு செல்லாது என்று அடியோடு நிராகரிக்கப்படுகிறது. பின்னர், எதற்காக முஸ்லிம்களுக்கு ஒரு பகுதி நிலத்தைப் பிரித்துத் தர வேண்டும்? இது சட்டப்படியே செல்லுபடியாகாது. எனினும், இதன் மூலம் இந்துத்துவாவின் தாராள குணத்தைப் பறைசாற்றிக் கொள்ள முயலுகிறார்கள், பார்ப்பன பாசிஸ்டுகள்.
500 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்த மசூதியை, முஸ்லிம்களின் அனுபோக உரிமையுள்ள மசூதியை முஸ்லிம்களுடையது அல்ல என்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். பாபர் மசூதி அமைந்துள்ள இடம் இந்துக்களின் அனுபோக உரிமை உள்ள இடம்தான் என்று கூறி, அதைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தில் மசூதி இருந்த நிலத்தை மூன்றாகப் பங்கிட்டு, ஒரு பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் மற்ற இரு பங்கினை இந்துத்துவ அமைப்புகளுக்கும் கொடுக்க அடாவடித்தனமாக இந்த அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்த மைய அரசு, இதை உச்ச நீதி மன்றத்திடம் தள்ளிவிட்டபோது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி, அதனை நிராகரித்தது, உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ, அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது, அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமையியல் வழக்குக்குத் தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல், இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள், அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள். இது சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது என்று நன்கு தெரிந்தேதான், இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் இப்படித் தீர்ப்பளித்திருக்கின்றனர்.
அங்கு ராமன் கோயில் இருந்து, இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதரவாகத் தொல்லியல்துறை ஆய்வு இருப்பதாக இந்நீதிபதிகள் புளுகியிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்த இந்துவெறியன் பி.பி.லால் தலைமையில் அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்தும்படி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு இந்து கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் அங்கு கிடைக்கவில்லை. இருப்பினும், நாட்டின் பல பகுதிகளிலிருந்து தொன்மைவாய்ந்த கற்தூண்களின் பகுதிகளை அகழ்வாராய்ச்சி குழிகளில் போட்டு, அவை ஏற்கெனவே இருந்த ராமன் கோயிலுடையதுதான் என்று பி.பி.லாலும் இந்துவெறியர்களும் கூத்தாடினர்.
இந்துக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது பொய் என்றும், 2003-ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய ஆய்வு மோசடித்தனமானது என்றும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பிரபல வரலாற்றியலாளரான ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப் முதலானோரும் அன்றே எதிர்த்திருக்கின்றனர். தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை இவர்கள் வெளியிடக் கோரிய போதிலும் நீதிமன்றமோ, அரசோ அதை இன்றுவரை வெளியிடவில்லை. அந்த மோசடி அறிக்கையிலிருந்து சில பகுதிகளை ஆதாரமாகக் காட்டி, அந்தப் பொய்யை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருப்பதுதான் இந்தத் தீர்ப்பு.
அன்று ராமன் பாலம் என்ற பார்ப்பனப் புனைகதையைக் காட்டி சேதுக்கால்வாய் திட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து நிறுத்தியது உச்சநீதி மன்றம். அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்தும்படி அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதைப் போலவே, ராமன் பாலம் பற்றியும் சேதுக் கால்வாய்க்கு மாற்றுப்பாதை பற்றியும் ஆராய்ச்சி நடத்தும்படி நிபுணர் குழு அமைத்துள்ளது, உச்சநீதி மன்றம். இன்று பாபர் மசூதியை இந்து வெறியர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம். 1992-இல் பாபர் மசூதியை இந்துவெறி கரசேவகர்கள் இடித்துத் தள்ளிய கொடூரத்தைப் பற்றி விசாரணை நடத்தி லிபரான் கமிசன் சமர்ப்பித்த அறிக்கையைக் குப்பைக் கூடையில் வீசியெறிந்துவிட்டது இந்நீதிமன்றத் தீர்ப்பு. இந்துவெறிக்கு அப்பட்டமாக வலுவூட்டும் இத்தீர்ப்பின்படி, மசூதியை இடித்த இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமாம். மசூதியைப் பறிகொடுத்த முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலமாம். இதுதான் இந்திய அரசு பீற்றிக் கொள்ளும் மதச்சார்பின்மையின் யோக்கியதை!
அன்றைய இந்தியாவில் 10-12-ஆம் நூற்றாண்டுகளில் தென்னகத்தில் சோழர் ஆட்சிக் காலத்தில்தான் தனிக் கடவுளுக்கான கோயில்கள் இருந்தன. 12-ஆம் நூற்றாண்டில் ஓரிரு ராமன் கோயில்கள் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே இருந்துள்ளன. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் பீகார் மற்றும் உ.பி.யில் ராமனுக்குத் தனியாக கோயில்கள் உருவாக்கப்பட்டன. இதுதான் வரலாறு காட்டும் உண்மை.
மேலும், மசூதியின் மைய மண்டபத்துக்குக் கீழேதான் ராமன் பிறந்தான் என்பது பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்று கூறுவதும் பொய்யானது. இந்துக்களில் ஒரு பிரிவினர் ராமன் அயோத்தியில் பிறக்கவில்லை, பஞ்சாபின் பாட்டியாலாவிலுள்ள கார்ரம் என்ற ஊரில் அவனது தாய்வழி தாத்தா வீட்டில்தான் பிறந்தார் என்று நம்புகின்றனர். சுவாமி அக்னிவேஷ் முதலான இந்து துறவிகள், ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதை நம்பினாலும், மசூதியின் மைய மண்டபப் பகுதியில்தான் பிறந்தான் என்பதை ஏற்கவில்லை. அயோத்தியிலுள்ள பல்வேறு மகந்துகள் தங்களது மடங்கள் உள்ள இடத்தில்தான் ராமன் பிறந்ததாக இன்றும் வழிபடுகின்றனர்.
மேலும், இந்து தர்மப்படி – ஆகம விதிகளின்படி நிறுவப்படாத கடவுள் சிலையையும் அந்த இடத்தையும் புனிதமானதாக ஏற்பதில் இந்துக்களிடையே வேறுபாடுகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பாலான இந்துக்கள் தங்களது கடவுள்கள் சொர்க்கத்தில் பிறந்தவர்களாகவும் கோயில் உள்ள இடத்தில் கடவுள் அருள் வழங்குவதாகவும்தான் கருதுகின்றனரே தவிர, கோயில் உள்ள இடத்தில்தான் கடவுள் பிறந்தார் என்று கருதுவதில்லை. இந்துக்களிலேயே சிறுபான்மையினரான இந்து வெறியர்கள் தமது இந்து ராஷ்டிரத் திட்டத்துக்கு ஏற்ப பாபர் மசூதிதான் ராமஜென்மபூமி என்று அடாவடி செய்வதை வைத்து, ‘இது பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை’ என்று நீதிபதிகள் கூறுவது எவ்வாறு நியாயமாகும்?
இப்படித்தான், ‘இது இந்துக்களின் நம்பிக்கை’ என்று கூறி காசி, மதுரா, துவாரகா எனத் தொடங்கி நாடெங்குமுள்ள 30,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் மீது உரிமை பாராட்டுகிறார்கள், இந்து மதவெறியர்கள். அவற்றைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொள்ள மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு நடத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கின்றனர்; அண்மையில் திண்டுக்கல் கோட்டையில் அம்மன் சிலையை வைத்துவிட்டு, அங்குள்ள தர்கா மீது உரிமை பாராட்டுகிறார்கள்.
கட்டம் கட்டமாக இந்துவெறியர்களின் சதித்திட்டத்திற்கு ஏற்ப காங்கிரசு கட்சி இத்தனை அட்டூழியங்களுக்கும் உடந்தையாக இருந்தது, இருந்து வருகிறது. 1949-இல் மசூதியின் பூட்டை உடைத்துத் திருட்டுத்தனமாக இந்துவெறியர்கள் ராமன் பொம்மையை வைத்தது காங்கிரசு ஆட்சியில்தான். பூட்டைத் திறந்து விட்டு வழிபட அனுமதியளித்ததும் காங்கிரசு ஆட்சியில்தான். 1989-இல் ராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்து கொடுத்ததும் ராஜீவ் பிரதமாக இருந்த காங்கிரசு ஆட்சியில்தான். 1992-இல் துணை இராணுவப் படைகள் வேடிக்கை பார்த்து நிற்க, இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காங்கிரசு ஆட்சியில்தான் . இப்போது 2010-இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் இந்துத்துவத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் காங்கிரசு ஆட்சியில்தான். மதச்சார்பின்மை வேடம் போடும் காங்கிரசுதான் இந்து மதவெறியின் அடிக்கொள்ளி என்பதை இவை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது, சன்னி வக்ப் போர்டு. மசூதி உள்ள இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற தங்களது வாதம் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுவிட்ட பூரிப்பில் பா.ஜ.க.வினர் இனிப்புகள் வழங்கிக் கூத்தாடுகின்றனர். அதற்கேற்ப, பாசிச பார்ப்பன துக்ளக் சோ, சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா வகையறாக்கள் இத்தீர்ப்பை வாழ்த்தி வரவேற்கின்றனர். “அலகாபாத் தீர்ப்புக்குப் பின்னர் இந்து-முஸ்லிம் உறவில் புதிய சகாப்தம் தொடங்குகிறது, இந்திய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்கிறது பார்ப்பன பாசிச பாரதிய ஜனதா. முஸ்லிம்கள் இந்நாட்டின் இரண்டாம்தர குடிமக்கள், இந்து தேசியத்தை ஏற்றுக் கொள்ளாதவன் தேசவிரோதி, மதச்சார்பின்மை பேசுபவன் இந்து விரோதி என்பதே இந்தப் புதிய அத்தியாயத்தின் பொருள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, தீர்ப்பு வெளியானதும் அதை வரவேற்றார். பின்னர், ஆரிய-திராவிட நாகரிகம் பற்றிப் பேசி எச்சரிக்கையுடன் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு எதிர்ப்பு காட்டுகிறார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததும் சி.பி.எம். மறைமுகமாக ஆதரித்தது. பின்னர், “நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்” என்றார் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் காரத். “இத்தீர்ப்பில் சிக்கலான பல விசயங்கள் உள்ளன, எனினும் மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை” என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரான டி.ராஜா. சட்டப்படியும், இயற்கை நீதிப்படியும் அந்த இடம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று போலி கம்யூனிஸ்டுகள் கூறவில்லை. வெறுமனே மத ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்கள். மதச்சார்பின்மை பேசும் கட்சிகளின் யோக்கியதை இவ்வளவுதான்!
முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துப் பார்ப்பன இந்துவெறியர்களின் இந்து ராஷ்டிர திட்டத்துக்கு ஏற்ப அமைந்துள்ள இத்தீர்ப்பை நாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினால், அது நாளை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கழுத்துக்கு சுருக்குக் கயிறாக மாறும்.
ராமஜென்ம பூமி எனும் புராணப்புரட்டு இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் தேவடியாள் மகன் என்பதும், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்பதும், பார்ப்பனரல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதும், சமஸ்கிருதம் தேவபாசை, தமிழ் நீசபாசை என்பவையெல்லாம் இந்து சாத்திரங்கள் புராணங்கள் கூறும் நம்பிக்கைதான்.
சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் மதமே, பார்ப்பன இந்துமதம். இந்துத்துவாவை இந்திய மரபு என்று கூறியது, உச்சநீதி மன்றம். பார்ப்பன மரபுகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறது, இந்திய அரசியல் சட்டம். நாடெங்கும் முஸ்லிம்களை வேட்டையாட இந்துவெறியர்களுக்குத் துணை நிற்கின் றன, போலீசும் இராணுவமும்.
இத்தகைய சூழலில், அலகாபாத் தீர்ப்பை வைத்து மீண்டும் படமெடுக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். நச்சுப்பாம்பை நசுக்குவதும், பார்ப்பன இந்து மதத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் பார்ப்பன தேசியத்தையும் முறியடிக்கப் போராடுவதே, மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள உடனடிக் கடமை.
________________________________