ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.

பிளவுவாத, பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே பார்ப்பன பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாக உள்ளது. தேவையானபோது அரசியல் எதிரிகள் மீது கருப்புச் சட்டங்களை ஏவிவிட்டுப் பழிவாங்குவதே அவற்றின் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கும் நோக்கத்தில் புலி ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு, முதல் தகவல் அறிக்கை தயாரித்து அதைக் காட்டியே பயங்கரவாத அபாயமாகச் சித்தரிப்பதை உளவுத்துறை போலீசார் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புலி ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ராஜீவ் கொலை மட்டுமே ஒரே காரணமாகக் காட்டப்படுகிறதே தவிர, தகுந்த தடயங்கள் – ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை.

இத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஈழம் என்று பேசினாலே குற்றமாகி, தடா – பொடா சட்டங்களின் மூலம் தமிழனின் வாயை மூடியது இந்திய அரசு. ஈழ அகதிகள் அனைவரும் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்ட பழ.நெடுமாறன்  உள்ளிட்டு, ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்  இயக்கத்தினர் அனைவரும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுகூட்டம் நடத்தக்கூட  ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டியுள்ளது. 19 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, இன்னமும் விடுதலை செய்யப்படாத கொடுமை தொடர்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும்  தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையான இந்திய அரசு, இந்தியத் தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் எதிரிதான். ஆனால், நெடுமாறன் முதலான தமிழினவாதிகள் இதை மறுத்து, இலங்கையின் இனவெறி பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாவதால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும்,  சில மலையாள அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காங்கிரசு ஆட்சியாளர்கள் தவறான முடிவுகள் எடுப்பதாகவும் கூறி இந்தியாவைத் தாஜா செய்வதையே நடைமுறையாகக் கொண்டுள்ளனர்.  எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான – அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின்  எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

இச்சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களையும் ஒடுக்குவதற்கான இன்னுமொரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் இத்தடை நீட்டிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010