Language Selection

புதிய ஜனநாயகம் 2010

பெண்ணாடம் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் பத்தாம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவன் 2.9.2010 அன்று நண்பகல் 12 மணியளவில் அவ்விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்டுப் பதறித் துடித்து வந்த அம் மாணவனின் பெற்றோரிடம் அவ்விடுதியில் சமையல் வேலை செய்யும் ராமச்சந்திரனும் செல்வராம் மேலே பிணம் கிடப்பதாக அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இறந்துபோன மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் இம்மர்மச் சாவு பற்றி போலீசிடம் புகார் அளிக்கச் சென்றபொழுது, போலீசு நிலையத்தில் விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் போலீசாரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

 

 

ஏதோ சதி நடப்பதாக உணர்ந்து கொண்ட அம்மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் பாரத் இறந்து போனதை நியாயமான முறையில் விசாரிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பிறகுதான் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்த விடுதிக்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பாரத்தின் சாவு சந்தேகத்திற்கிடமான மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, விடுதிக்காப்பாளரும் சமையல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் இரண்டே நாட்களுக்குள் பிணையில் வெளியே வந்துவிட்டனர்.

 

ஆறாம் வகுப்பு தொடங்கியே அவ்விடுதியில் தங்கிப் படித்து வந்த பாரத், அவ்விடுதியின் சமையல்காரர்களான செல்வராம் ராமச்சந்திரனும் கூட்டுச் சேர்ந்துகொண்டு நடத்தும் ஊழலையும், மற்ற பிற சமூக விரோதச் செயல்களுக்கு விடுதியைப் பயன்படுத்துவதையும் எதிர்த்து வந்தார். இக்குற்றங்களைக் கண்டிக்க வேண்டிய விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜனோ சமையல்காரர்களோடு கைகோர்த்துக் கொண்டு நியாயத்துக்காகப் போராடி வந்த பாரத்தை, சிறுவன் என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளான். பாரத் படித்து வந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் சுந்தர்ராஜனின் உறவினரான தையல்நாயகியும் அக்கிரிமினல்கள் சார்பாக பாரத்தை அடித்தும் அவமானப்படுத்தியும் பல்வேறு விதங்களில் துன்புறுத்தியும் வந்திருக்கிறார். இந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி அச்சிறுவன் இந்திய மாணவர் சங்கத்தை அணுகியதோடு, விடுதியில் அம்மாணவர் சங்கத்தைக் கட்டவும் முயன்றுள்ளார்.

 

சிறு வயதிலேயே அநீதியை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட பாரத் விடுதியின் ஜன்னலில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி ஊழியர்கள் கூறுவதை சந்தர்ப்ப சாட்சியங்கள் மறுக்கின்றன. தரையிலிருந்து ஆறரை அடி உயரத்தில் அமைந்துள்ள ஜன்னலில் 5 அடி உயரமுள்ள பாரத் இரண்டு அடி நீளமுள்ள துண்டைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா? பாரத்தின் சடலத்தின் அருகே சமையல்காரரின் துண்டு கிடந்தது எப்படி? சம்பவம் நடந்த அன்று விடுதியின் வருகைப் பதிவேட்டில் பாரத் விடுதிக்கு வராதது போலத் திருத்தப்பட்டிருந்தது ஏன்? என்ற கேள்விகள் பாரத் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைத்தான் வலுப்படுத்துகின்றன.

 

இந்நிலையில் விருத்தாசலம் வட்டத்தில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி பாரத்தின் மரணம் குறித்து முறையான நீதி விசாரணை கோரியும், குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரியும் 20.9.2010 அன்று பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத்தின் தாயும், இரண்டு உறவினர்களும் கலந்துகொண்டு பேசினர்.

 

இதனைத் தொடர்ந்து, பாரத்தின் பெற்றோர், உறவினர்கள், பகுதித் தோழர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் அக்.9, 10 தேதிகளில் பெண்ணாடத்திலிருந்து மாவட்டத் தலைநகர் கடலூருக்கு நீதி கேட்டு நடைபயணம் செல்லுவதென்றும், அதன் முடிவில் மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட போலீசு கண்காணிப்பாளரையும் சந்தித்து மனு கொடுப்பதெனவும் வி.வி.மு. தீர்மானித்திருக்கிறது. போராடாமல் நீதி கிடைக்காது என்பதற்கு இந்த வழக்கு இன்னுமொரு சான்று.

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்.