சென்னை, சேத்துப்பட்டு பள்ளிக்கூடச் சாலை "டோபி கானா' எதிரில் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் 1997 முதல் சாராயக் கடை (ஒயின்ஸ் கடை) ஒன்று இயங்கி வந்தது. அதை அகற்றும்படி கோரி பொதுமக்கள் ம.க.இ.க. தலைமையில் பல ஆண்டு களாகப் போராடி வருகின்றனர். தனியார் முதலாளியிடம் இருந்தபோது இப்பகுதியின் ரவுடி தங்கைய்யாவையும் போலீசையும் வைத்து தோழர்களை மிரட்டியும் விலைக்கு வாங்கவும் முயன்று தோற்றுப் போனார்கள். மாவட்ட ஆட்சியாளர் ஆய்வுக் குழு அனுப்பினார். அதைச் சந்தித்து முறையிடப் போன மக்கள் ஊர்வலத்தை வழிமறித்த போலீசு சாராய வியாபாரிக்குத் துணை நின்றது.
பின்னர் அரசே சாராய வியாபாரத்தை ஏற்கும் ""டாஸ்மாக்'' கடை ஆனது. மாவட்ட ஆட்சியாளர், முதல்வர், தொகுதி மந்திரி பரிதி இளம்வழுதி, "டாஸ்மாக்' இயக்குனர் என மனுக் கொடுத்தும் பலனில்லை. உழைக்கும் மக்களைச் சீரழிக்கும் இச்சாராய வியாபாரத்துக்கு எதிராக ம.க.இ.க. தோழர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். ஓட்டுக் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை.
கடையை இழுத்து மூடும் போராட்டம் நடத்தி ஊர்வலமாகப் போன மக்களை மாநகர இணை, துணை போலீசு ஆணையாளர்களை ஏவி வழிமறித்துக் கைது செய்தது அரசு. சாராயக் கடை கட்டிட உரிமையாளர் ஒத்துழைப்புடன் மனித உரிமை மையத்தின் மூலம் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு கடையை அகற்றும்படியான தீர்ப்புப் பெற்று கடந்த ஆக.7 அன்று கடை அகற்றப்பட்டது. 13 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு கடை அகற்றப்பட்டது. அன்றே ஊர் முழுக்க பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, முழக்கமிட்டு, தீப்பந்தம் சிலம்பம் சுழற்றி சாராயக் கடை மூடப்பட்டதை சேத்துப்பட்டு மக்களோடு சேர்ந்து ம.க.இ.க. கொண்டாடியது.
இவ்வெற்றியைக் கொண்டாடும் விதமாக செப்.21 அன்று சேத்துப்பட்டு அம்பேத்கார் திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பு.மா.இ.மு. நடத்திய சாராய எதிர்ப்பு நாடகம் பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ம.க.இ.க., சென்னை.