Language Selection

திருவாரூர் தனி மாவட்டம் ஆன பின், மாவட்ட நிர்வாகக் கட்டிடங்களைக் கட்டுவதற்காக திருவாரூரின் அருகே அமைந்துள்ள விளமல், சிங்களாஞ்சேரி, தண்டலை, மே.மங்கலம் ஆகிய கிராமங்களின் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனால் வேலை இழந்த விவசாயிகளுக்கு எவ்வித மாற்று வேலையும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஒப்பந்தக்காரர்களின் வீடுகளில் துப்புரவு பணியாளர்களாகவும், எடுபிடிகளாகவும் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

 

 

விவசாய விளைநிலங்களை மனைகளுக்காக அபகரிக்கும் இந்த அபாயகரமான போக்கு, திருவாரூருக்கு அருகேயுள்ள குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களிலும் தற்பொழுது பரவி வருகிறது. இப்பகுதியில் சுமார் 400 ஏக்கர் பாசன நிலம் அதிகாரபலமிக்க சிலரால் விலைக்கு வாங்கப்பட்டு தரிசாகப் போடப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புப் பெறாத ஒரு ஏக்கர் நிலத்தைக்கூட கறுப்புப்பண பேர்வழிகள் 5 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கி வருவதால், நில உரிமையாளர்கள் நிலத்தைத் தரிசாகப் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் குத்தகை விவசாயிகளும் கூலி விவசாயிகளும் வேலைதேடி கிராமங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

 

இந்த அபாயகரமான போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி திருவாரூர் பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, ""விளை நிலங்களைத் தரிசாகப் போடுவதை முற்றாகத் தடை செய்! பாசன விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்குவதைத் தடை செய்!'' உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, 14.7.2010 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 30.8.2010 அன்று திருவாரூர் அம்மையப்பன் கடைத் தெருவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மையப்பன், காவனூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்தனர்.

 

ஓட்டுக்கட்சிகள் இந்த அபாயகரமான போக்கை கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகும் நிலையில், வி.வி.மு.வின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பகுதி விவசாயிகளிடம் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.

 

பு.ஜ.செய்தியாளர், திருவாரூர்.